புதுடில்லி, மார்ச் 24: ”ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார். தேர்தல் பத்திர திட்டத்தை, பிரதமர் மோடி அரசு 2018இல் அமல்படுத்தியது. இத்திட் டத்தின் படி, தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது. மேலும், அத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அளிக்கும்படி, எஸ்.பி.அய், வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்படி, அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்தில் எஸ்.பி.அய்., சமர்ப்பித்தது. அதில், பா.ஜ., – திரிணமுல் காங்., – காங்., ஆகிய மூன்று கட்சிகள், தேர்தல் பத்திர திட்டம் வாயிலாக அதிக நன்கொடை பெற்றது தெரிய வந்தது.
இந்நிலையில், டில்லியில் செய்தியாளர்களிடம் காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கருப்பு பணத்தை மீட்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஊழலை சட்டப்பூர்வமாக் கினார். மேலும் அதை மறைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். தேர்தல் பத்திரங்களின் விபரங்களை தொகுக்க பல மாதங்களாகும் என, எஸ்.பி.அய்., பொய் கூறியது. இத்தகவல்களை நாங்கள் வெறும் 15 வினாடிகளில் தொகுத்து விட்டோம். ‘பிரீபெய்டு, போஸ்ட்பெய்டு, ரெய்டுக்கு பின் மிரட்டி பணம் பறித்தல், பினாமி நிறுவனங்கள்’ என, நான்கு வழிகளில் பா.ஜ., தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற்றுள்ளது.
அமலாக்கத்துறை – சி.பி.அய்., – வருமான வரித்துறை உள்ளிட்டவை, 56 முறை, 41 கார்ப்பரேட் நிறுவனங்களில் சோதனை நடத்தியுள்ளன. இதன் பின், பா.ஜ.,வுக்கு 2,592 கோடி ரூபாய் அந்நிறுவனங்களால் கொடுக்கப்பட்டுள் ளது. அதில் 1,853 கோடி ரூபாய், சோதனைகளுக்கு பின் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர முறைகேடு குறித்து, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வங்கிகள் மூலம் லஞ்சம் வாங்குவதே தேர்தல் பத்திர திட்டம் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை காங்கிரஸ் கோரிக்கை
Leave a Comment