புதுடில்லி, மார்ச் 24: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், டில்லி நீதிமன்றத்தில் 22.3.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாளில் அமலாக்கத் துறை காவலில் அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதையடுத்து அமலாக்கத் துறையி னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தன்னை உடனடியாக விடுவிக்க கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று (23.3.2024) மனுத்தாக்கல் செய்தார். அதில் தனது கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத் துறை காவலில் அனுப்பியது சட்டவிரோதம் எனக் கூறியுள்ளார்.தனது மனுவை, பொறுப்பு தலைமை நீதிபதி உடனே அவசர வழக்காக விசாரித்து தன்னை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவல் அதிகாரியை நீக்க மனு:
டில்லி நீதிமன்ற வளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறை உதவி ஆணையர் ஏ.கே.சிங், அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதே அதிகாரி, இதற்கு முன் இந்த வழக்கில் டில்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவை ஆஜர்படுத்தியபோதும் கடுமையாக நடந்து கொண்டதாக ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டது. அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் என கெஜ்ரிவால் சார்பில், டில்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் உதவி ஆணையர் ஏ.கே.சிங் தனது ஆதரவாளர்களிடம் தேவையின்றி கடுமையாக நடந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நீதிமன்ற வளாகத்தின் சிசிடிவி காட்சிப் பதிவுகளை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
கெஜ்ரிவால் கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு
Leave a Comment