* நீட் தேர்வைக் கொண்டு வந்து நம்முடைய பிள்ளைகளின் மருத்துவக் கனவை சிதைத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு!
* ஆர்.எஸ்.எஸ். காவிகளின் தத்துவம் மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்பதுதான்!
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பது நம்முடைய கொள்கை!
சென்னை, மார்ச் 22 நீட் தேர்வைக் கொண்டு வந்து நம்முடைய பிள்ளைகளின் மருத்துவக் கனவை சிதைத்திருக்கிறார்கள். அதற்கு முன்பு சமஸ்கிருதம் படித் திருந்தால்தான், மருத்துவக் கல்லூரிக்கே விண்ணப்பம் போட முடியும் என்ற நிலை. அதனை ஒழித்தது நம்முடைய நீதிக்கட்சி.எல்லா வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்று கொண்டு வந்து, நம்முடைய பிள்ளை களைப் படிக்கவிடாமல் ஆக்கியது மோடியினுடைய ஒன்றிய ஆட்சி. ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லக்கூடிய காவிகளின் தத்துவம் என்னவென்றால், மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்பது தான். நம்முடைய கொள்கை என்னவென்றால், மனித தர்மத்தைக் கடைப்பிடித்து, மனிதர்களுக்கு வாய்ப் பளிக்கவேண்டும்; ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சொல்வதுதான். ஆகவே வருகின்ற நாடாளு மன்றத் தேர்தலில் தெளிவாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தி.மு.க. அலுவலகம்- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம் திறப்பு விழா
கடந்த 15-3-2024 அன்று மாலை சென்னை பழைய வண்ணையில் சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி தி.மு.க. 42-அ வட்ட தி.மு.க. அலுவலகம்- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம் திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யின் முக்கிய நோக்கம்
ஆரியத்தினுடைய தத்துவம் மனுநீதி. அந்த மனுநீதியை இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. யின் முக்கிய நோக்கம்.
எதைக் கொடுத்தாலும், கீழ்ஜாதிக்காரர்களான சூத்திரர்களுக்கு, பஞ்சமர்களுக்கு, ஒடுக்கப்பட்ட வர்களுக்குக் கல்வியைக் கொடுக்கக்கூடாது. குறிப்பாக பெண்கள் படிக்கவே கூடாது என்பது தான் மனுநீதி.
இங்கே இருக்கின்ற தாய்மார்களுக்குத் தெரியுமே – உங்களுடைய பாட்டி யாராவது பள்ளிக்கூடத்திற்குப் போயிருக்கிறார்களா? இங்கே இருக்கின்ற தாய்மார்கள், சகோதரிகள் எல்லாம் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றீர் கள். இந்த நிலை நூறாண்டுகளுக்கு முன்பு உண்டா? என்றால், இல்லை என்பதுதான் பதில்.
நூறாண்டுகளுக்கு முன்பு நாற்காலி இருந்தது; அதில் ஆண்களுக்கு முன்பாக, பெண்கள் அமர்வதற்குத் தைரியம் கிடையாது. அப்படியே மீறி அமர்ந்தால், ‘‘அந்தப் பொம்பளைக்கு எவ்வளவு திமிர் பாருங்கள்; நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறதே?” என்பார்கள்.
முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தீர்மானம்!
ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை இல்லை. பெண்கள் எல்லாம் படித்திருக்கிறார்கள்; சம உரிமை கொடுக்கப்படுகிறது. எல்லாவற்றையும்விட, பெண் களுக்குச் சொத்துரிமை ஆண்களைப்போலவே வழங்கப்படுகிறது.
1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார் தந்தை பெரியார் அவர்கள்.
அந்தக் காலகட்டத்தில், ஒரு இணையருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால், அந்தக் குடும்பத்துச் சொத்துகளை இந்து லாவின்படி, ஆண் பிள்ளைகளுக்குத்தான் எழுதி வைக்கவேண்டும்; பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. ஏனென்றால், சாத்திர சம்பிரதாயப்படி அப்படித்தான் என்று இருந்தது.
அதனைப் போக்குவதற்காக புரட்சியாளர் அம்பேத் கர் அவர்கள் அரும்பாடுபட்டார். ஆனால், அவரை அதற்குரிய சட்டம் செய்யவிடவில்லை. அதனால் அவர், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போனார்.
ஆணும் – பெண்ணும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. அப்படி இருக்கும்பொழுது பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லை என்றார்கள்.
அம்பேத்கரால் வெற்றி பெற முடியாத ஓரிடத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் வெற்றி பெறுகிறார்!
அந்தக் காலகட்டத்தில்தான் தந்தை பெரியார், பெண் களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அப்பொழுது கலைஞருக்கு 5 வயது.
பிற்காலத்தில் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகி, அம்பேத்கரால் வெற்றி பெற முடியாத ஓரிடத்தில், இவர் உத்தரவு போடுகிறார், ‘‘பெண்களுக்கும், ஆண்களைப் போலவே சொத்துரிமை உண்டு” என்று சட்டம் கொண்டு வருகிறார்.
தாய்மார்களாகிய உங்களில்கூட இந்தத் தகவல் அதா வது சொத்தில் உரிமை இருக்கிறது என்று பலருக்குத் தெரியாது. இந்தத் திராவிட இயக்கம் வந்துதான் அந்த உரிமையைப் பெற்றுத் தந்தது.
இன்றைக்கு ஆண்களைப் போலவே, பெண் களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவேண்டும் – ஏன்?
ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்றால், இந்த நாட்டை மாற்றுவதற்குத்தான். காலங்காலமாக நம் நாட்டில் இருந்த அடிமைத்தனத்தைப் போக்குவதற்கு.
அம்பேத்கர் அவர்கள் முயற்சி செய்து முடியாது என்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போன ஒரு விஷயத்தை, நம்முடைய கலைஞர், ஒன்றிய காங்கிரஸ் அரசான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபொழுது, கலைஞர் எடுத்த முயற்சியினால், அம்பேத்கரால் நிறைவேற்றப்பட முடியாத சட்டம் – அகில இந்தியாவிற்குமே பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று 2006 ஆம் ஆண்டு சட்டம் திருத்தப்பட்டது.
காரணம் என்ன?
நம்முடைய ஆட்கள் டில்லிக்குச் சென்று ஆட்சியில் அங்கம் வகித்தனர்.
இன்றைய ஒன்றிய ஆட்சியின் நிலைமை என்ன?
எல்லாவற்றிற்கும் வாக்குறுதி கொடுப்பார்கள்; மோடி என்கிற ஒருவர் வருவார்; அவர் வித்தைக் காட்டுவதில் வல்லவர். 2014 ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வரும்பொழுது என்ன சொன்னார் தெரியுமா?
ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புத் தருவோம் என்று சொன்னார். அவருடைய கணக்குப்படி, இன்றைய காலகட்டத்தில் 20 கோடி பேருக்கு வேலை வாய்ப்பைக் கொடுத்திருக்கவேண்டும். கிடைத்ததா? என்றால், இல்லை.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 10 ஆண்டுகளில் 1,198 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்தது. தேர்தல் வருகின்ற நேரத்தில் மட்டும் 100 ரூபாய் குறையும்; அதேபோன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு – தேர்தல் வருகின்ற நேரத்தில் மட்டும் 2 ரூபாய் குறைப்பார்கள். தேர்தல் முடிந்தவுடன், பழைய நிலைக்கே சென்றுவிடும்.
தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டுகின்றது!
இப்படிப்பட்ட வித்தைகளையெல்லாம் நாம் செய்வதில்லை. மக்களுக்காக இருக்கக் கூடிய இயக்கம் இது. ஆகவேதான், இந்த இயக்கத்திற்குப் பலம் வரவேண்டும் என்று சொன்னால், தாய் மார்கள், இளைஞர்கள், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை வெறும் பதவிக்கான தேர்தல் என்று நினைக்கவேண்டாம்; தமிழ்நாடுதான் இந்தியா விற்கே வழிகாட்டுகின்றது. இன்னுங்கேட்டால், ‘இந்தியா கூட்டணி’ என்று அனைத்து முற் போக்காளர்களையும் ஒன்று சேர்த்த பெருமை நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர் களையே சாரும்.
தமிழ்நாட்டில் சில கட்சிகள், ‘‘வாங்க, வாங்க, எங்கள் கூட்டணிக்கு வாங்க” என்று அழைத்துக் கொண் டிருக்கிறார்கள். இன்னும் சிலர், ‘‘நாங்கள் கதவைத் திறந்து வைத்திருக்கின்றோம்” என்கிறார்கள்; பிறகு கதவையே கழற்றி வைத்துவிட்டார்கள்; ஜன்னலை திறந்து வைத்திருந்தாலும், கதவைத் திறந்து வைத் திருந்தாலும், வருவதற்கு ஆள் கிடையாது.
ஆனால், தி.மு.க. கூட்டணியில், உள்ளவர்களுக்கே தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்க முடியவில்லையே! புதிதாக வருகிறார்கள்; உங்களை ‘‘வெயிட்டிங் லிஸ்ட் டில்” வைத்திருக்கிறோம் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.
தி.மு.க. கூட்டணி என்பது
கொள்கைக் கூட்டணி!
கலைஞர் மறைந்தபொழுது, தமிழ்நாட்டில் வெற்றிடம் என்று சொன்னார்கள். இல்லை, இந் தியாவே இங்கே வந்து தெரிந்துகொள்ளவேண்டிய கற்றிடம் என்று காட்டினார் நம்முடைய முதல மைச்சர் அவர்கள்.
கொள்கைக் கூட்டணியாக இருக்கின்ற காரணத்தினால்தான், இந்தக் கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை.
ஆனால், ‘‘இவர் அங்கே போய்விடுவார்; அவர் இங்கே போய்விடுவார்” என்றெல்லாம் பத்திரிகை யில் சரடுகளை விட்டுப் பார்த்தார்கள்.
சில பேர் பொய்த் தொழிற்சாலையையே நடத்துகின்றார்கள். உண்மையைக் கலக்காமல், வெறும் பொய்யையே சொல்லக்கூடிய அளவிற்கு இருப்பதினால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
‘‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று கேட்டார்கள் முன்பு; கலைஞர் அவர்கள்தான், ஊது கின்ற அடுப்பு வேண்டாம்; பட்டனைத் திருகியதும் எரிகின்ற அடுப்பைக் கொடுத்தவர்.
ஒரு வாழ்வியல் இயக்கம் – புதுவாழ்வைக் கொடுக்கக் கூடிய இயக்கமாகும்!
தாய்மார்களைப் பார்த்துக் கேட்கிறேன், ‘‘இப்போது ஊதாங்குழல் உங்கள் வீட்டில் உண்டா?” இருக்கவே இருக்காது. ஊதாங்குழல் என்றால், இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியவே தெரியாது.
ஆகவே, இந்த இயக்கம் ஒரு வாழ்வியல் இயக்க மாகும். புதுவாழ்வைக் கொடுக்கக் கூடிய இயக்கமாகும்.
யாருக்காக?
நம்முடைய சகோதரிகளுக்காக, நம்முடைய தாய்மார் களுக்காக, நம்முடைய இளைஞர்களுக்காக, நம்முடைய சகோதரர்களுக்காக, நம்முடைய உடன்பிறப்புக்களுக் காக – மனிதர்களை மனிதர்களாக நடத்துகின்ற இயக்கம். ஒருவரைத் தொடக்கூடாது, பார்க்கக் கூடாது என்று சொல்லுகின்ற இயக்கமல்ல.
ஜாதி என்கிற ஒன்று நம்முடைய அமைப்பில் கிடையாது. ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொல்வது நம்முடைய குறள் – நம்முடைய தத்துவம்.
ஆனால், ‘‘தொடாதே, எட்டி நில், பார்க்காதே, கிட்டே வராதே, நெருங்காதே” என்று சொல்வது ஆரியம்.
அந்தக் கூட்டம்தான் இன்றைக்கு ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கிறது. அதனுடைய பிரதிநிதிதான் மோடி. அதுதான் காவி. அதை விரட்டுவதுதான் நம்மு டைய பணி. நமக்குத் தனிப்பட்ட முறையில் யாரும் எதிரிகள் அல்ல; கொள்கை எதிரிகள் அவர்கள்.
இன்றைக்கு இவ்வளவு பாடுபடுகிறோம் என்றால், திட்டங்களைக் கொண்டு வருகிறோம் என்று சொன்னால், உங்களையெல்லாம் வாழ வைப்பதற்காகத்தான். ஒரு காலத்தில், நம்முடைய பெண்களையெல்லாம் அடிமை கள் என்று சொன்னார்கள்.
‘‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கியவர் நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்!
நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார்தான் கேட்டார், ‘‘பெண் ஏன் அடிமையானாள்?” என்று. ஆணுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கு வரவேண்டாமா? அவர்களும் மனிதர்கள்தானே? என்று கேட்டார்.
அதனைச் செய்கின்ற ஆட்சிதான், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும்.
நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள்தான், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக, ‘‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை” உருவாக்கினார்.
80 ஆண்டுகளுக்கு முன்பு ரயிலிலோ, பேருந்திலோ பயணம் செய்யும்பொழுது, ‘‘நீங்கள் என்ன வருணம்?” என்று கேட்பார்கள். ஏனென்றால், ஒன்றாக அமர்ந்து சாப்பிடமாட்டான்.
ஆனால், இப்பொழுது பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் காலைச்சிற்றுண்டி வழங்கப்படுகிறது. எல்லோரும் ஒன்றாக அமர்ந்துதானே சாப்பிடுகிறார்கள்.
முன்பெல்லாம் ஓட்டலில் காசு கொடுத்து சாப்பிடும் இடத்திலேயே, ‘‘இது பிராமணர்கள் சாப்பிடும் இடம்” அங்கே அமரக்கூடாது என்றெல்லாம் இருந்ததே! அவற்றையெல்லாம் ஒழித்த இயக்கம்தான் திராவிடர் இயக்கமாகும். ஒழிப்பதற்கான வழியைக் காட்டியவர் தான் தந்தை பெரியார் அவர்கள். அதனை நடை முறைப்படுத்தியவர்கள்தான் அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய திராவிட மாடல் ஆட்சி.
இந்த இயக்கம் பாடுபடுவது எதற்காக – எங்களுக்காகவா?
வடநாட்டில் இன்றைக்கும் அந்தப் பேதம் இருக்கிறது. வடநாட்டில் உள்ள பெண்களிடையே இவ்வளவு தெளிவு இல்லை. அங்கே இருப்பதுபோன்று, இங்கேயும் கொண்டுவரலாம் என்று நினைக்கிறார்கள். ஏன் அவர்களால் இங்கு வெற்றி பெற முடியவில்லை? இங்கே காலூன்ற முடியவில்லை?
இது திராவிடர் மண் – இது பெரியார் மண் – சமூகநீதி மண் – சுயமரியாதை மண் -பகுத்தறிவு மண் என்பதினால்தான்.
ஆகவேதான், இந்த இயக்கம் பாடுபடுவது எதற்காக? எங்களுக்காகவா? இல்லை, உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக, வருங்கால தலைமுறையினருக்காக.
இன்றைக்கு நீட் தேர்வைக் கொண்டு வந்து நம்மு டைய பிள்ளைகளின் மருத்துவக் கனவை சிதைத் திருக்கிறார்கள்.
அதற்கு முன்பு சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவக் கல்லூரிக்கே விண்ணப்பம் போட முடியும் என்ற நிலை. அதனை ஒழித்தது நம்முடைய நீதிக்கட்சி.
நம்முடைய பிள்ளைகளைப் படிக்கவிடாமல் ஆக்கியது
மோடியினுடைய ஒன்றிய ஆட்சி!
அதை மாற்றி, இப்போது நீட் தேர்வு என்றார்கள்; அதற்குப் பிறகு க்யூட் தேர்வு என்கிறார்கள். 5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு; 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு; 10 வகுப்பில் பொதுத் தேர்வு, 11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று கொண்டு வந்து, நம்முடைய பிள்ளைகளைப் படிக்கவிடாமல் ஆக்கியது மோடியினுடைய ஒன்றிய ஆட்சி.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும்!
ஆகவேதான், ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லக்கூடிய காவிகளின் தத்துவம் என்னவென்றால், மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்பதுதான்.
நம்முடைய கொள்கை என்னவென்றால், மனித தர்மத்தைக் கடைப்பிடித்து, மனிதர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்; ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று சொல்வதுதான்.
ஆகவேதான், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எதையுமே முன்கூட்டியே தெரிந்துகொள்ளக் கூடியவர். இந்தியா கூட்டணியையே ஒழுங்குபடுத்திவிட்டார். ‘அஷ்டதிக்கு பாலகர்’ போன்று இருந்தவர்களையெல்லாம் ஒன்றாக்கி விட்டார்.
இன்றைக்கும் பத்திரிகைகள் சரடு விட்டுக் கொண்டிருக்கின்றன. தமக்கு எதிர் அணியின்மீது ஊழல் என்று குறை கூறலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.
ஆனால், ஊழல் செய்தது யார்? தேர்தல் பத்திரத்தின்மூலமாக நன்கொடைகளை யார் யார் வாங்கினார்கள்? யார், யாரை மிரட்டி வாங்கினார்கள்? என்கிற பட்டியலை வெளியிடச் சொன்னது உச்சநீதிமன்றம்.
திரிசூலத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள்!
திரிசூலத்தைக் கையில் வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. திரிசூலத்தின் ஒருமுனை சி.பி.அய். மற்றொரு முனை வருமான வரித்துறை; இன்னொரு முனை அமலாக்கத் துறை. மேற்சொன்ன மூன்றையும் காட்டி, மிரட்டி பணம் கொடுக்கிறாயா, இல்லையா? என்று மிரட்டியிருக்கிறார்கள்.
இன்றைக்கு அந்தத் தகவல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வருகின்றன.
தேர்தல் பத்திரம் வாங்கிய பட்டியலை மார்ச் 6 ஆம் தேதிக்குள் கொடுக்கவேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு போடுகிறது.
ஆனால், மார்ச் 4 ஆம் தேதியன்று, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு போடப்படுகிறது. அந்த மனுவில், எங்களுக்கு ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை காலஅவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
ஏன் ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டார்கள் என்றால், அதற்குள் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துவிடும் என்பதால்தான்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் வைத்த குட்டு!
அவர்களுடைய தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தது. இரண்டு மணிநேரத்தில் தயார் செய்யவேண்டிய விஷயத்திற்கு, இவ்வளவு கால அவகாசம் கேட்கிறீர்களே? என்று கண்டித்து, உடனே பட்டியலை தாக்கல் செய்யவேண்டும் என்று சொன்னது உச்சநீதிமன்றம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாமீது அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
உடனே பயந்து போய், அந்தப் பட்டியலை வெளியிட்டது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.
ஜூன் மாதம்வரை அவகாசம் கேட்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகு, உடனே அந்தப் பட்டியலை எப்படி எடுக்க முடிந்தது?
‘‘மடியில் கனம் – வழியில் பயம்” தெள்ளத் தெளிவாயிற்று.
அப்படியென்றால் ஊழல் எங்கே இருக்கிறது?
ஊழல் என்பது பா.ஜ.க.வில்தான் இருக்கிறது. இன்றைக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடி ரூபாயினை மிரட்டி வாங்கியிருக்கிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாத பிரதமர் மோடி அவர்கள் இங்கே வந்து ‘‘தி.முக.. ஊழல் கட்சி; தி.மு.க.வை ஒழிப்போம், அழிப்போம்” என்றெல்லாம் சொல்கிறார்.
2-ஜி ஊழல் என்று சொல்லி, ஆ.இராசாமீது வழக்குத் தொடுத்தார்கள். ‘‘பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம்” என்று சொல்லி வழக்குப் போட்டீர்களே? அந்த வழக்கின் முடிவு என்னாயிற்று? கனிமொழியை ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் உட்கார வைத்தீர்கள். கடைசியில் என்னாயிற்று?
அந்த வழக்கில் நீதிபதி எழுதுகிறார், ‘‘காத்திருந்தேன், காத்திருந்தேன்; ஓர் ஆவணத்தைக்கூட ஆ.இராசா, கனிமொழிக்கு எதிராகக் கொடுக்கவில்லை. ஆகவே, அவர்களை விடுதலை செய்கிறேன்” என்றார்.
மோடியால் 5-ஜி வரவில்லை;
வளர்ச்சியின் வேகம்தான் அது!
கொஞ்சம்கூட லஜ்ஜை இல்லாமல், நேர்மை இல்லாமல் இன்றைக்குக்கூட பிரதமர் மோடி பேசுகிறார், 2-ஜி, இப்பொழுது நாங்கள் 5-ஜிக்கு வந்துவிட்டோம் என்கிறார். அவரால் அது வரவில்லை; வளர்ச்சியின் வேகம்தான் அது.
2-ஜி அலைவரிசையில் ஊழல் என்று சொன்னார்களே, அதனால்தான் இழப்பு ஏற்பட்டது என்று சொன்னார்களே – அதைவிடக் குறைவாகத்தான் 5-ஜி அலைவரிசைக்கு பணம் வாங்கியிருக்கிறார்கள். இதை நாங்கள் புள்ளிவிவரத்தோடு ஆதாரம் சொல்லுகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, அதன் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற வரையில், எல்லோரும் தூங்காமல் பணியாற்றவேண்டும்.
நீங்கள் ஒவ்வொருவரும், இந்தத் தகவலை 10 பேருக்குச் சொல்லவேண்டும். 10 பேர் நூறு பேருக்குச் சொல்லுங்கள். விழிப்பாக இருங்கள்; ஏமாந்துவிடக் கூடாது.
ரயிலில் பயணம் செய்யும்பொழுது, அருகில் இருப்பவர் நன்றாகப் பழகி, பேசிக்கொண்டே வருவார். கையில் வைத்திருக்கும் பிஸ்கெட் பாக்கெட்டைக் கொடுத்து, ஒரு பிஸ்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள் என்பார்.
நம்மாளும், அவர் மிகவும் அன்பாகக் கொடுக்கிறாரே என்று நினைத்து, அந்த பிஸ்கெட்டை சாப்பிடுவார். பிறகு நம்மாள் மயங்கி விழுந்துவிடுவார்; மயக்க பிஸ்கெட் கொடுத்தவர், அவருடைய பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விடுவார். கடைசியில் விழிக்கும்பொழுதுதான், நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று தெரியும்.
ஆகவே, வடக்கே இருந்து வரக்கூடியவர்கள் இப்படித்தான் அதனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே, மயக்க பிஸ்கெட்டுகளைக் கண்டு நீங்கள் ஏமாறக்கூடாது. கொள்கையில் விழிப்பாக இருக்கவேண்டும்.
திராவிடம் வெல்லும் –
அதை நாளைய வரலாறு சொல்லும்!
அதற்காகத்தான் இதுபோன்ற படிப்பகங்கள்; இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த அத்துணை தோழர்களுக்கும் நன்றி!
‘‘திராவிடம் வெல்லும் – அதை நாளைய வரலாறு என்றைக்கும் சொல்லும்”
வாழ்க பெரியார்!
வளர்க திராவிடம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.