அன்னை மணியம்மையார் அவர்கள் மறைந்து 46 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் அய்யா வழியில் அவர் போட்டுத் தந்த பாதையில் நமது தலைவர் ஆசிரியர் தலைமையில் கழகம் களங்களையும், பிரச்சாரங்களையும் தங்கு தடையின்றி நடத்திக் கொண்டிருக்கிறது.
வேறு எந்தக் கால கட்டத்தையும்விட இரு பால் இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி இரும்புக் கரத்தைத் தூக்கி, தோள் வலிமையுடன் ‘பெரியார் பணி செய்து கிடப்பதே எம்பணி!’ என்று இலட்சிய முறுக்கேறி ஆரவாரித்து வருவது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
தந்தை பெரியாரை – பெரியார் திடலில் அடக்கம் செய்த நிலையில், வற்றாக் கண்ணீர் வெள்ளத்தில் கருஞ்சட்டைக் குடும்பத்தினர் பெரியார் திடலை விட்டு அகல முடியாத மன இறுக்கத்தோடு தேம்பிக் கொண்டிருந்த நிலையில் அன்னையார் சார்பில் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தோழர்களுக்குக் கூறிய அந்த வரிகள் வலிமை மிக்கவை. சோர்வடைந்த தோழர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியவை.
இதே திடலில் சில நாள்களுக்கு முன்னால்தான் தந்தை பெரியார் அவர்களின் கட்டளையை ஏற்கக் கூடியிருந்தோம். அதே திடலில் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்த சோக இருளில் சிக்குண்டு கிடக்கிறோம்! நான் உங்கள் முன்னால் பேருரை ஆற்றப் போவதில்லை. அன்னை மணியம்மையார் கூறச் சொன்னதைத்தான் உங்கள் முன்னால் சொல்லப் போகிறேன்.
“பத்திரிகைக்காரர்கள் – இன எதிரிகள் – கழக எதிரிகள் என்னவெல்லாமோ செய்து, நம் சக்தியைச் சிதைக்க முனைவார்கள். அதற்கு நாம் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது.”
“அய்யா அவர்கள் ஒவ்வொன்றுக்கும் நமக்கு நல்ல வழிமுறைகள் – செயல் திட்டங்கள் – கொள்கை விளக்கங்கள் – பயிற்சிகளை நமக்குத் தந்துவிட்டே சென்றிருக்கிறார்கள். அதன்படியே ஒரு நூலிழைகூட பிறழாமல் இயக்கம் நடக்கும்” என்று அன்னை மணியம்மையார் அவர்கள் உங்களுக்கு உறுதிகூறச் சொன்னார்கள். எந்தவித மாறுதலும் இல்லாமல் (தேதிகூட பிறழாமல்) காரியங்கள் கட்டாயம் நடக்கும். நமக்கு வேண்டியதெல்லாம் அய்யா அவர்களின் வழியில் கண்டிப்பாக இருக்கும் கட்டுப்பாடு – சுயநலமற்ற தன்மை – ஒற்றுமை இவைகளில் மேலும் நாம் உறுதியாக இருந்து செயல்பட வேண்டும்”
“தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழி நாம் நடப்போம்” என்று எடுத்துரைத்து இறுதியில்,
“தந்தை பெரியார்” என்று எடுத்துச் சொல்ல – கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என்று ஒலித்தனர்.
“தந்தை பெரியார் அவர்களின் லட்சியத்தை என்று எடுத்துச் சொன்னபோது – அடைந்தே தீருவோம்” என்று முழக்கமிட்டனர்.
அம்மா அவர்களிடமும் ஆசிரியர் அவர்களிடமும் துக்கம் தாளாது விடைபெற்று கழகத் தோழர்கள் சென்றனர்.”
‘விடுதலை’ 27.12.1973
அய்யா மறைவிற்குப் பிறகு, அன்னையார் மறைவிற்குப் பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதே நேர்த்தியில், நெறியில் இயக்கத்தையும், இனத்தையும் வழி நடத்திச் சென்று கொண்டு இருக்கிறார் “தகைசால் தமிழர்”நமது தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அய்யா மறைந்து நான்கு ஆண்டுகள் மட்டுமே அம்மா அவர்கள் தலைமையேற்று, கழகத்தை வழி நடத்திச் சென்றார். 60 வயதைத் தொடும் முன்பே காலம் அவரைப் பறித்துக் கொண்டது.
அவர்தம் பொதுத் தொண்டின் வயது அந்த நான்கு ஆண்டுகள் மட்டுமே என்று சுருக்கிவிட முடியாது. தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராக, செவிலியராக என்றைக்கு அவர் அய்யாவிடம் வந்து சேர்ந்தார்களோ, அன்றைக்கே (11.9.1943) அன்னையாரின் பொதுத் தொண்டு தொடங்கி விட்டது.
அய்யாவை 95 ஆண்டு காலம் வாழ வைத்தார் என்றால் அது ஏதோ அய்யா என்ற ஒருவருக்கு ஆற்றிய தொண்டு மட்டுமல்ல – அனைத்துத் தமிழர்களுக்கும், நாட்டுக்கும் மேற்கொண்ட ஒப்பற்ற ஓய்வில்லா மிகப் பெரிய பெருந் தொண்டு – அருந்தொண்டு!
தந்தை பெரியாரே இப்படிக் கூறுகிறார்.
“எனது காயலா சற்றுக் கடினமானதுதான் – எளிதில் குணமாகாது.
மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன – அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவை இருந்தாலும் நான் பயப்பட வில்லை – எதற்கும் தயாராக இருக்கிறேன் மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது!”
தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் – 17.9.1967).
“மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்காக பல காரியங்களுக்கு – தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக, என் உடல் நிலை எப்படியோ என் தொண்டுக்கு தடையில்லாமல், நல் அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிருவாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்” – தந்தை பெரியார் (15.10.1962)
அன்னை மணியம்மையாரின் தொண்டுக்கு இதைவிட வேறு சிறப்பானது எதுவாக இருக்க முடியும்?
தந்தை பெரியார் மறைவிற்குப்பின் – அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (25.12.1974) அன்னை மணியம்மையார் நடத்திக் காட்டிய ‘இராவணா லீலா’ நிகழ்ச்சி இந்தியாவையே குலுக்கி எடுக்கவில்லையா?
அவர் சாதித்த அந்த செயலின் அருமையை ‘ராமனை’ வைத்து அரசியல் குளிர்காயும் இக்கூட்டத்தின் நடவடிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாமே!
நெருக்கடி நெருப்பாற்றை எப்படிக் கடந்தார்? வருமான வரித் துறையின் அழுத்தம் மற்றொரு பக்கம் – தன் உடல் நிலை பாதிப்பு மற்றொரு பக்கம் – என்றாலும் இவற்றை எல்லாம் வீழ்த்தி, வெற்றிகரமாக தந்தை பெரியாரின் எழுச்சி இலட்சியச் சுடரை ஏந்திச் சென்ற அன்னை மணியம்மையாரை பாராட்ட எந்த மொழியிலும் சொல் கிடையாது என்பது பேருண்மை!
நமக்கு மிகப் பெரிய பலம் தந்தை பெரியார்! அந்த மேருமலை சாய்ந்த பிறகும் – பெரியார் தத்துவம் என்பதன் பலம் நமக்குப் போதும் எதிரிகளை வீழ்த்த – என்று பயணித்து சாதித்துக் காட்டியவர் அன்னையார்! அவர் மறைவிற்குப் பிறகும் அது நூற்றுக்கு நூறு சரியே என்று தனது செயல்பாடுகள் மூலம் அன்றாடம் நிகழ்த்திக் காட்டி வருகிறார் நமது தலைவர் ஆசிரியர்.
அரசியலுக்குப் போகாத தந்தை பெரியாரின் இயக்கம் வெளியிலிருந்து ஓர் ஆட்சிக்குத் திசை காட்டியாக இருக்கிறது என்பது உலக விந்தையே!
அய்யா – அம்மா திசையில் தமிழர் தலைவர் தலைமையில் வெற்றிகரமாக பயணத்தை மேலும் வீறுடன் தொடர அன்னை மணியம்மையாரின் நினைவு நாளில் உறுதி கொள்வோம்!
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னை மணியம்மையார்!!
வெல்க திராவிடம்!!!