அன்னை மணியம்மையார் நினைவு நாள் சிந்தனை
சமரசமற்ற கொள்கை வாழ்வுக்குக் கொடியேற்றியவர்!
நம்மால் முடிந்தவரை – வாழ்வு முடியும்வரை அன்னையார் ஊட்டிய சரித்திரத்தின் மாறாப் பாடங்களை ஏற்று செயல்படுவோம்!
தமிழர் தலைவரின் நெஞ்சுருக்கும் அறிக்கை!
அன்னை மணியம்மையாரின் நினைவு நாளான இன்று (16-3-2024) சமரசமற்ற கொள்கை வழி நின்று, தொண்டறத்தின் செம்மலாக ஒளிவீசி, அவர் கற்றுத் தந்த மாறாப் பாடங்கள் வழி நம் தொண்டறக் கொள்கைப் பயணத்தை மேற்கொள்வோம் – செய்து முடிப்போம் என்று, அன்னை மணியம்மையார் நினைவு நாளை நினைவு கூர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள நெஞ்சுருக்கும் அறிக்கை வருமாறு:
ஒப்பற்ற நம் தொண்டறத் துறவி அன்னை ஈ.வெ.ரா.மணியம்மை அவர்களது 46 ஆவது நினைவு நாள் இன்று (16-3-2024).
எத்தனையோ பேர் பிறக்கிறார்கள் – இறக்கிறார்கள் என்றாலும் எல்லோரும் வரலாறு ஆவதில்லை!
எத்தனையோ பேர் பிறக்கிறார்கள் – எத்தனையோ பேர் இறக்கிறார்கள்
அவர்கள் எல்லோரது பிறந்த, இறந்த நாள்கள் வரலாறு ஆவதில்லை; காலக் குறிப்பில் இடம்பெறு வதில்லை.
தனித்த சாதனை சரித்திரங்களாகியவர்களையே மக்களும், உலகமும் மரித்தவர்களாக எண்ணாமல் என்றும் தம்முடன் வாழ்ந்து வழிகாட்டுபவர்களாக வையகம் கருதி பின்பற்றும் பெருமை பெறுகிறது!
ஆம்; நம் அன்னையாரின் சுமார் அரை நூற்றாண்டு என்ற குறுகிய கால வாழ்வில், அவரது வாழ்வு போதித் துள்ள படிப்பினைகள், பல பொதுத் தொண்டு செய் வோருக்கும், இயக்கத் தலைமை ஏற்று நடத்துவோருக் கும், குறிப்பாக ‘‘அடிமைகளாகவே” காலங்காலமாய் வாழும்படி ஆக்கப்பட்ட பெண்ணினத்திற்கும் பெறற் கரிய பாடங்கள் நினைவில் நிறுத்தப்படவேண்டியவை!
இதோ சில:
அன்னையார் கற்பித்த பாடங்கள்!
1. ஓர் இலக்கோடு, பொதுவாழ்க்கை (தொண் டறம்) ஏற்பவர் எவரும், எந்த இழிச் சொற்களையும், வசை மாரிகளையும் மலைபோல் எண்ணி, மனங்கலங்கி, மூலையில் முடங்கிப் போய்விடாமல், தனது அமைதியான – ஆற்றொழுக்கான பணித் தொகுப்பாகவே செய்து, மனமகிழ்ச்சி அடைதல் – மற்றவற்றை அலட்சியப்படுத்தி!
2. உண்மைப் பொதுத் ‘தொண்டு’ புகழ் வேட் டைக்கும், விளம்பர வெளிச்சத்திற்கும் அப்பாற் பட்டு, ஏளனங்கள், எள்ளல்களை எருவாக்கி வாழ்ந்து, வசவாளர்கள் வருந்தி வாழ்த்திடும் போதும், அதே உணர்வுடன் வாழ்வது!
3. மகளிர் பொதுவாழ்வில் ஈடுபடுகையில், அருவருக்கத்தக்க விமர்சனங்களும், அவதூறு மழைகளும் அவர்கள்மீது வீசப்பட்டாலும், விசனப்படாமல், ‘தன் பணியே தக்க பதில்’ என மவுனமே என்றிருந்து வென்று சாதித்துக் காட்டல்.
4. மனித குலப்பற்று என்பதையே மய்யப்படுத்தி, தனது உடைமைகள் உலகத்திற்கே உரியது, ஒரு குறிப்பிட்ட குடும்ப வட்டத்திற்கல்ல என்று தனக்குப் பின்னாலும் மற்றவர்களுக்குப் பயன் படும் வகையில் பொதுமக்களுக்கு ஆக்கி, ‘தூய தொண்டறம் இதோ’ என்று சொல்லாமற் சொல்வது – ‘அறவிலை வணிகர்’ ஆகாத தனித்தன்மையோடு! பெற்றால்தான் பிள்ளையா?
5. ‘பெற்றால்தான் பிள்ளைகள்’ என்பதற்கு ‘தனிப்பொருள் கண்டவர்! கருவில் சுமந்து, குருதி உறவு என்று பெருமிதம் கொள்வது ‘குழந்தைகள் பெறுவது’ என்ற குறுகிய பார்வை – கைவிடப் பட்டாலும், கொள்கை உறவுகள் – நான் ‘‘பெற்ற” பெரும் வாய்ப்புள்ள எம் குடும்பங்கள் என்ற பாசத்தால் தமது பராமரிப்புடன் முன்னொட்டை (மிஸீவீtவீணீறீs) தந்த விசாலப் பார்வையின் விரிந்த ஒளி மங்காத வெளிச்சம் அவர்!
6. ‘‘அமைதியான கடலும் பொங்கவேண்டிய தருணங்கள் உண்டு” என்று போராட்டக் களத்தில் பொங்கி எழுந்து – சமரசமற்ற கொள்கை வாழ் வுக்குக் கொடியேற்றிய கொற்றவையாக இருத்தல் வேண்டும்.
7. இவற்றையெல்லாம் தாண்டி, எங்கும் என்றும், எளிமையை தனது அணிகலன் என்ற பாலபாடம் படிப்பது!
அன்னையார் நினைவு சடங்கல்ல – மாறாப் பாடங்கள்!
இப் படிப்பினைகளை முழுமையாகவே செய்ய முடியாதவர்களாக நம்மில் பலர் இருந்தாலும், முடிந்தவரை செய்து, நம் முடிவு வரை வாழ, நாம் – பொதுவாழ்வுக்கு வந்தவர்களை சிந்திக்க வைப்போம்; செயலாற்ற வழிகாட்டிய எம் அன்னையின் நினைவு சடங்கல்ல; சம்பிரதாயம் அல்ல!
சரித்திரத்தின் மாறாப் பாடங்கள் –
மறக்கக் கூடாத படிப்பினைகள்!
வாழ்க அன்னையார்!
வாழ்க பெரியார்!
பொலிக அவர் கண்ட பொதுவாழ்வு!
அவர்களது பணி தொடரும் தொண்டன்
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
16-3-2024
அன்னை மணியம்மையார் நினைவு போற்றுகிறோம்.