சென்னை, மார்ச் 14 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான 5,450 தமிழ் பாடப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார்.
இப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகள் முனைவர் லட்சுமி மோகன் (ஒருங்கிணைப்பாளர்), அடிலாஸ் மகேந்திரன், செந்தில் (வளைகுடா தமிழ்ச் சங்கம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் அய் லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் ஆர். கஜலட்சுமி மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில்
மாணவர் வருகைப்பதிவு 90% ஆக அதிகரிப்பு
மாநில திட்டக்குழு தகவல்
சென்னை, மார்ச் 14- தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவு உயர்ந்துள்ளதாக, முதலமைச்சரிடம் மதிப்பீட்டு அறிக்கை அளித்த மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“முன்னதாக பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு சுமார் 60 முதல் 70 சதவீதம் வரை இருந்து வந்தது. காலை உணவுத் திட்டம் வந்த பிறகு மாணவர்களின் வருகைப் பதிவு 90 முதல் 95 சதவீதம் வரை அதிகரித் துள்ளது. அதேபோல் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடிப்பதும் தற்போது இல்லை. காலை 8 மணிக்கு முன்னரே பள்ளிக்கு சென்றுவிடுகின்றனர்.
மேலும் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகளை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூறுகின்றனர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் என்ற காரணத்திற்காக
கால்டுவெல், ஜி.யு.போப் குறித்து
ஆளுநர் ரவி தவறாக கருத்து தெரிவிப்பதா?
கிறிஸ்தவர்கள் போராட்டம்
சென்னை, மார்ச்.14- கால்டுவெல், ஜி.யு.போப் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தவறான கருத்து தெரிவித்ததாக கூறி கிறிஸ்தவர்கள் நேற்று (13.3.2024) கண்டன ஆர்ப் பாட்டம் செய்தனர்.
கால்டுவெல் – ஜி.யு.போப் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தவறான கருத்தை தெரிவித்ததாக கூறி கிறித்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனை யடுத்து ஆளுநரை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய திருச்சபை அறிவித்தது.’
அதன்படி, நேற்று (13.3.2024) இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமையில் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் பெர்னான்டஸ் ரத்தின ராஜா முன்னிலை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் திமோத்திரவீந்தர் (கோவை), சர்மா நித்தியானந்தம் (வேலூர்), சந்திரசேகர் (திருச்சி), செல்லையா (கன்னி யாகுமரி). பர்ணபாஸ் (நெல்லை), கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தாம் பரம் எம்.சி.சி. கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் டேவிட் பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த பல்வேறு திருச் சபை நிர்வாகிகள், உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். பலர் ஆளுநருக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பலர் கால்டு வெல். ஜி.யு.போப் ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர்.