அன்னை மணியம்மையார் ஆனந்தக் களிப்பு!
(புரட்சிக் கவிஞரின் “தலைவாரிப் பூச்சூட்டி உன்னை” பாடல் மெட்டு)
தன்னலம் போற்றாத வாய்மை! – எங்கள்
தந்தையின் வாழ்வினை நீட்டிய தாய்மை!
இன்னல் படர்ந்தாலுந் தன்னைத் – தந்து
இயக்கத்தைக் காத்தபெண் சிங்கம்மணி யம்மை!
தந்தை பெரியாரின் பின்னே – வந்து
தாயென்றே காத்தாரே கழகத்தை நன்றே!
சிந்தையெல்லாம் கொள்கை ஒன்றே! – அன்னை
சீர்மிகச் சேர்த்தாரே இனப்பகை வென்றே!
இளமைக் கனவெல்லாந் துறந்து – இந்த
இயக்கத்திற் களித்தாரே தன்னை உவந்து!
கழகத்தின் களமெல்லாம் அடர்ந்து – பொங்கிக்
கனலுமிழ்ந் தார்த்தாரே மணியம்மை சுடர்ந்து!
வீர மணிசெய்த கொல்லர்! – அதை
வீரிய ஒலிகுன்றாப் படிசெய்த வல்லர்!
காரிய மெனவந்தால் மல்லர்! – எங்கள்
கருஞ்சேனைத் தலைநின்று போரிட்ட வில்லர்!
வேதியத்தின் சனாதன வேரைக் – கொய்ய
வீதிவந்து தமிழணங்காய்ச் செய்தாரே போரை!
சாதியற்ற சமநிலமாய் ஊரை – மாற்றச்
சலியாதே ஓட்டினாரே பகுத்தறிவுத் தேரை!
இராமலீ லாவெனுங் கூத்து! – அதில்
இராவண வேந்தன்சீர் பாழ்படல் பார்த்துத்
திராவிடத் தாயென ஆர்த்துப் – பொம்மை
இராமன்மேல் தீயிட்டார் தரையினில் சாய்த்து!
தந்தையென் றெழுதிடல் நிறுத்து! – சொன்னார்
தரங்கெட்ட தணிக்கையர் உண்டு கொழுத்து!
வந்தேறி மிரட்டலை எதிர்த்து – அன்னை
வழமையைத் தொடர்ந்தாரே தந்தையென் றழைத்து!
அன்னை மணியம்மை வாழ்க! – எம்மை
ஆளாக்கி ஆதரித்த அருமைத்தாய் வாழ்க!
பெண்மைத் திடமுரைத்தார் வாழ்க! – எம்மைப்
பேணுதற்காய்ப் பிறப்புற்றார் சீரென்றும் வாழ்க!
– செல்வ மீனாட்சி சுந்தரம்