அன்னையார் குறித்து புரட்சிக்கவிஞர்

viduthalai
2 Min Read

தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறி வருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் – தமிழரைக் காப்பேன் ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.
அது மட்டுமல்ல. குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்போம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம்.

யாரைப் புகழ்ந்து எழுதினோம், புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை.

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?
பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இயக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கால் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஒரே ஒரு மாலையை எந் துணைவி யார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னை யாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி – அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதுமில்லை.

(10.4.1960 – ‘குயில்’ இதழில் புரட்சிக் கவிஞர் அவர்கள் எழுதிய கட்டுரை)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *