2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற களப்பணியாற்றிடுவோம்
திருவாரூர், நாகை மாவட்டத்தில் திராவிட விவசாய தொழிலாளரணி கலந்துரையாடலில் தீர்மானம்
மதமற்ற அமைதி உலகம் அமைக்க பெரியார் கொள்கை ஒன்றே தீர்வு!
கவிஞர் கலி.பூங்குன்றன் உரை!
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத் திராவிடர் கழக விவசாயத் தொழிலாளரணி அணியின் ஒன்றியக் கலந்துரை யாடல் கூட்டம் 03.03.24 அன்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், மதமற்ற உலகம் அமைக்க பெரியார் கொள்கை ஒன்றே தீர்வு எனக் கூறினார்.
மேலும் அவர் பேசும்போது, “விவசாயப் பிரச்சினைகள் அன்று இருந்ததைப் போல இன்று இல்லை. அதன் தன்மைகள் மாறியிருக்கிறது. உலகமயம், பொருளாதார மயம் என்கிற அளவில் வந்து நிற்கின்றது!
விவசாய சங்க வரலாறு!
அந்தக் காலத்தில் விவசாயச் சங்கங்களை உருவாக்கிய போது, வீடு வீடாகச் சென்று அதன் முக்கியத்துவம் குறித்துப் பேசப்பட்டது. அப்படி அமைப்பாய் திரண்டது தான் திராவிடர் கழக விவசாயத் தொழிலாளரணி! விவசாய மக்களின் உரிமைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு கண்டோம்!
இந்தப் பகுதிகளுக்கு ஆசிரியர் பலமுறை வந்திருக் கிறார்கள். மிக விரைவில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் சந்திக்க இருக்கிறார்.
அதனையொட்டியே எங்கள் பயணமும் இன்று அமைந்துள்ளது. விவசாயத் தொழிலாளரணி குடும்பங்கள் குறித்து, குடும்பம், குடும்பமாக இருப்பதைக் குறித்து ஆசிரியர் அவர்கள் எங்கு சென்றாலும் கூறுவார். வெளி நாட்டில் கூட பலமுறைப் பேசி இருக்கிறார். குடும்பங்களில் உள்ள அனைவரின் பெயர்களையும் சொல்லி அழைக்கும் அளவிற்கு ஆசிரியரின் கொள்கை உறவு அழுத்தமானது!
இளைஞர்கள் வருகை!
கடவுள் இல்லை என்கிற தத்துவத்தை அறிவித்த விடையபரம் பகுதி இங்கு தான் இருக்கிறது! பெரியார் சமூகக் காப்பணிக்கு இந்தப் பகுதிகளில் இருந்து தோழர்கள் திரளாக வருவார்கள். ஒரே சமயத்தில் 15 பேருக்கு மேல் பெரியார் திடலில் தங்கியிருக்கிறார்கள்! பணி நிமித்தம் காரணமாகப் பல ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள் தோழர்கள்! இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் இயக்க நிகழ்வுகளுக்கு வருகை தருகிறார்கள். இன்றைக்குக் கூட திடீரென அறிவிக்கப்பட்ட கூட்டம் என்றாலும், 4 ஒன்றியப் பகுதிகளிலும் தோழர்கள் நல்ல வண்ணம் வந்துள்ளனர்!
விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் நிறைந்த இந்தப் பகுதியில், அடுத்த தலைமுறையையும் இணைத்து நாம் விரிவாக்கம் செய்ய வேண்டும். சென்னையில் 24.02.24 அன்று நடைபெற்ற இளைஞரணி கூட்டத்திற்கு 250 இளைஞர்கள் வந்திருந்தனர். புதிய, புதிய பகுதிகளில் இருந்து, இளைஞர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்! காலம், காலமாக இருக்கக் கூடிய நமது குடும்பங்களில் இருந்து பிள்ளைகள் அதிகம் வர வேண்டும்!
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட”மானமிகு” கீழ்வேளூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக் கானோர் சட்டத்தை எரித்து கைதானார்கள். காவிரி பிரச் சினைகளிலும் நம் தோழர்களின் பங்கு அளப்பரியது.
அரசியல் கட்சியில் இருப்பவர்கள் மாறக்கூடும். பதவி கள் வருவதும், போவதுமாக இருக்கும். ஆனால் திராவிடர் கழகம் என்பது நிலையானது! இழப்பதைத் தவிர நமக்கு வேறொன்றும் இருப்பதில்லை! எல்லோருக்கும், எல்லாமும் மாறும் என்றாலும் நம்முடைய “மானமிகு” என்பது கல்லின் மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டு போன்றது!
அதேபோன்று எதையும் எதிர்பாராத இயக்கம் நம் இயக்கம் என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக் கிறார்கள்!
பெரியார் மறைந்து 50 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இன்னமும் சிலையைக் கண்டு அஞ்சுகிறார்கள்! கருப்புச் சட்டை போட்டு தோழர்கள் சென்றால், இவர்கள் தான் பெரியார் தொண்டர்கள் எனக் கூறும் அளவிற்கு பெரியார் நினைவில் நிற்கிறார்! அதேபோல தோழர்களே! கருப்புச் சட்டை போட்ட நம் வீடுகளில் மட்டும் தான் பெரியார் இருக்கிறார் என்று நினைக்காதீர்கள். கருப்புச் சட்டை போடாத பலரின் வீடுகளிலும் அய்யா இருக்கிறார்.
பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ்நாடு அரசாங்கம் 21 மொழிகளில் பெரியார் நூல்களை மொழி மாற்றம் செய்து வருகிறது! உலகத்தின் பல நாடுகளிலும் பெரியார் மாநாடுகள் நடைபெற்று வருகின்றன!
இந்தியா முழுவதும் பரவிய பெரியார்!
தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், பெரியாரின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக யாரும் இருந்ததில்லை! நாடாளுமன்றத்தில் பதவியேற்ற நமது உறுப்பினர்கள் பெரியார் வாழ்க என்றும் , வெல்க திராவிடம் என்று முழங்குகிறார்கள்! வட மாநில உறுப்பினர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகின்றனர்! பெரியார் இந்தியா முழுவதும் பரவிவிட்டார்!
“பெண் ஏன் அடிமையானாள்?” என்கிற புத்தகம் குறித்துப் பிரியங்கா காந்தி பேசுகிறார். உங்களில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் எனப் பத்திரிக்கையாளர்களைப் பார்த்து ராகுல் காந்தி கேட்கிறார். சமூகநீதியை நிலைநாட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்!
பெரியார் ஏன் பெரியார்?
2024 தேர்தல் என்பது மிக, மிக முக்கியமானது! இது ஓர் வாழ்வா சாவா போராட்டம் ஆகும்! 1925 தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் 2025 ஆம் ஆண்டுடன் 100 ஆண்டுகளை எட்டப் போகிறது! திராவிடர் கழகம் 1944இல் தொடங்கப்பட்டு, அதுவும் 80 ஆண்டுகளை எட்டிவிட்டது!
திருப்பத்தூரில் ஒருமுறை பெரியார் சிலையை உடைத்து விட்டார்கள். மறுநாள் நடந்த சாலை மறியலில் காவி வேட்டி கட்டி, நெற்றியில் பட்டை இட்டு, கையில் கம்புடன் ஒருவர் காட்சி தந்தார். வியந்து பார்த்த பத்திரிகையாளர்கள் அவரிடம் சென்று, கேள்வி கேட்டனர். இது நேரலையாகவும் ஒளிபரப்பானது! “பெரியார் கடவுள் இல்லை என்று மட்டும் சொல்லவில்லை! என் பையன் அமெரிக்காவில் பணி புரிகிறாரே, அதற்கும் காரணமாக இருந்தவரும் பெரியார் தான்”, எனப் பதிலளித்தார்!
இந்தியாவைக் காப்போம்!
அப்படியான இந்த நாட்டை மீண்டும் 2 ஆயிரம் ஆண்டு பின்னோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறது பாஜக. ராம ராஜ்ஜியம் என்பதன் பொருள் இதுதான்! ஒரு அரசாங்கத்தின் வேலை என்பது கோயில் கட்டுவதல்ல; நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதே! கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவதே அடிப்படைக் கடமையாகும்!
எனவே நாம் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்! ஆசிரியர் அவர்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் வர இருக்கிறார்கள்! 2024 தேர்தலில் நமது பொறுப்பும், கடமையும் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டை மட்டு மின்றி, இந்தியா கூட்டணி மூலமாக இந்தியாவைக் காத்திடு வோம்” எனக் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பேசினார்கள்.
நான்கு ஒன்றியத்திலும் பங்கேற்றோர்!
திருவாரூர் மாவட்டக் கூட்டத்தில், சோழங்கநல்லூர் ஒன்றியத் துணைச் செயலாளர் சாம்பசிவம் வரவேற்புரை யாற்றினார். ஒன்றியத் துணைத் தலைவர் இராஜேந்திரன், ஒன்றியத் தலைவர் கா.கவுதமன், நடப்பூர் மணி, மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி, பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி, ஆரனூர் கனகராஜ்,
மகளிரணி தேவ.நர்மதா, மாவட்டக் காப்பாளர் ரத்தின சாமி ஆகியோர் பேசினர்.
பொதுக்குழு உறுப்பினர் ஆசிரியர் முனியாண்டி ஒரு பாடல் பாடினார்.
குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடியில் ஒன்றியச் செயலாளர் க.அசோக்ராஜ் வரவேற்பு கூறினார். ஒன்றியத் துணைத் தலைவர் சி.அம்பேத்கர், ஒன்றியத் தலைவர் ஜெயராமன், நன்னிலம் ஒன்றிய ப.க. தலைவர் கரிகாலன் ஆகியோர் உரையாற்றினர். மஞ்சக்குடி பெரியார் பெருந் தொண்டரும், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவருமான பெ.சிவானந்தம் நினைவிடத்தில் மாலை அணிவித்து, அங்கு கழகக் கொடியை ஏற்றி வைத்தார் கழகத் துணைத் தலைவர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் கண்கொடுத்த வனிதத்தில் ஒன்றியத் தலைவர் சி.ஏகாம்பரம் வரவேற்புரையாற்றினார். கோ.செந்தமிழ்ச்செல்வி, தங்க.கலியபெருமாள் ஆசிரியர் இரா.சிவக்குமார் உரையாற்றினர். ஒன்றியச் செயலாளர் சரவணன் நன்றியுரை கூறினார். ஏற்காட்டூர் ஆசிரியர் செல்வராஜ் அவர்களைக் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சந்தித்துப் பயனாடை அணி வித்தார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நகரத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்புரை கூறினார். மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ நெப்போலியன் தலைமை ஏற்று உரையாற்றினார். நாகை நகரத் தலைவர் செந்தில்குமார், நாகை ஒன்றியச் செயலாளர், கு.சின்னத்துரை, மாவட்ட மகளிரணி தலைவர் பேபி, பொதுக்குழு உறுப்பினர் கமலம், கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் பாவா.ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் பாக்யராஜ், கீழையூர் ஒன்றியத் தலைவர் ரங்கநாதன், திருமருகல் ஒன்றியத் தலைவர் சின்னத்துரை, மாவட்டத் துணைச் செயலாளர் துரைசாமி, மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வராஜ் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்மோகன், கீழத்தூர் ஒன்றியத் துணைத் தலைவர் இராஜேந்திரன், நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, தலைமைக் கழக அமைப் பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில விவசாயத் தொழிலாள ரணி வீர.கோவிந்தராஜன், மாவட்ட விவசாயத் தொழிலா ளரணி செயலாளர் இரா.இராமலிங்கம், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி ஆகியோர் உரையாற்றினர். நகரச் செயலாளர் முத்துராஜா நன்றி கூறினார்.
திருவாரூர், நாகை மாவட்டத்தின் அனைத்துக் கலந் துரையாடல் கூட்டங்களிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தொடக்கவுரை ஆற்றினார். திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து கூட்டங்களுக்கும் மாவட்ட தலைவர் வீ. மோகன் தலைமையேற்று உரை யாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண் காந்தி, மாவட்டச் செயலாளர் சவு.சுரேஷ், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், திருவாரூர் நகரச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றினர்.
தீர்மானங்கள்:
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விரோத பாஜக அரசை வீழ்த்தி, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது என முடிவு செய்யப்படுகிறது!
திருவாரூர் ஒன்றியப் பகுதிகளில், அனைத்துக் கிராமங்களிலும் திராவிட விவசாயத் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, விவசாயத் தொழிலாளர் அமைப்புகளை புதுப்பித்து, கட்டமைப்பை வலுவாக்குவது என முடிவு செய்யப்படுகிறது!
திருவாரூர் ஒன்றிய கிராமங்கள் தோறும், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்த “இந் தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் ஏன்?”, என்பதை தெரு முழக்கமாக, பெரு முழக்கம் ஆக்க, திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும், கழகக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருவாரூர் ஒன்றியக் கிராமப் பகுதிகளுக்கு வருகை தரும் போது, அனைத்துக் கிராமங்களிலும் கழகக் கொடி ஏற்றி சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது!
திருவாரூர் ஒன்றியக் கிராமப் பகுதிகளில் திராவிட விவசாயத் தொழிலாளர் குடும்பங்களில் உள்ள இளைஞர் களை ஒருங்கிணைத்து, திராவிடர் கழக இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திகப் பொன்முடியை அழைத்து கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கழக இளைஞ ரணியை மேலும் வலுப்படுத்துவது எனவும் முடிவு செய்யப் படுகிறது!
புதிய பொறுப்பாளர்கள்:
திருவாரூர் ஒன்றியத் திராவிட விவசாய தொழிலாளரணி செயலாளர் நடப்பூர் மணி.
குடவாசல் ஒன்றிய விவசாய அணி செயலாளர் பெரும்பண்ணையூர் வீர.துரைராஜ்.
குடவாசல் ஒன்றிய மகளிரணி தலைவர் தவமணி அன்னவாசல்.
திருமருகல் ஒன்றிய விவசாய தொழிலாளரணி செயலாளர் மருங்கூர் க.காமராஜ்.
கீழ்வேளூர் ஒன்றிய விவசாய தொழிலாளரணி செயலாளர் ஒக்கூர் இரா.இராஜேந்திரன்.
கொரடாச்சேரி ஒன்றியத் திராவிட விவசாய தொழிலாளரணி செயலாளர் பருத்தியூர் கே.நாகராஜ்.