சென்னை, மார்ச் 6 அய்யா வைகுண்டரை பெருமைப்படுத்த சாலை, பல்கலைக்கழங்களுக்கு பெயர் சூட்டுங்கள் என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பால பிரஜாபதி கோரிக்கை வைத்துள்ளார். அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்து விவா தத்தை ஏற்படுத்திய நிலையில் பால பிரஜாபதி கண்டித்து உள்ளதோடு இந்த கோரிக்கையையும் முன்வைத் துள்ளார்.
அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்தநாள் விழா சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப் பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் அய்யா வைகுண்டரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் ஸநாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற் பட்ட காலம். ஸநாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் என கூறியிருந்தார். அய்யா வைகுண்டர் என்பவர் ஜாதி பாகுபாட்டுக்கு எதிராகத் தோன்றி சமத்துவம் பேசியவர். இத்தகைய சூழலில் தான் ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு சர்ச்சையை கிளப் பியது.
மேலும் அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சுக்கு அய்யா வைகுண்டர் தலைமைப் பதி அடிகளார் பாலபிராஜபதி கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் சாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதி பாலபிரஜாபதி செய்தியாளர் சந்திப்பில், ”யாருடைய சுயலாபத்திற் காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது. அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து ஆளுநர் பேசி உள்ளார். ஆரிய கோட்பாட் டிற்கு அணி சேர்ப்பதுபோல் ஆளு நர் பேசி உள்ளது வருந்தத்தக்கது. அய்யா வைகுண்டர் ஸநாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது” என கண்டித்தார்.
மேலும் பால பிரஜாபதி கூறிய தாவது: அடக்குமுறைக்கு எதிராக தான் வைகுண்டர். சிவன், விஷ்ணு, பிரம்மன், காளி என அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக்கினார். ஆணிவேர் அத்தனையையும் ஒன்றாக்கினார். அவரது பிறப்பை பெரிதாக கொண்டாட வேண்டும். ஆளுநரிடம் நாங்கள் நீண்ட காலமாக கேட்டு வருகிறோம். அய்யாவை இங்கிருந்து கயிறு கட்டி இழுத்து சென்று திருவிதாங்கூர் அரசன் கொடுமைப்படுத்தினான். அவர் ரத்தம் சிந்திய சாலைக்கு அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை என பெயர் வைக்க கேட் கிறோம். பல மகான்களின் பெயர் களில் சாலை உள்ளது. அய்யா வைகுண்டர் அடிப்பட்டு ரத்தம் சிந்திய இந்த சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயர் வைப்போம் என அவர் அறிவித்து இருக்கலாம். யூனிவர்சிட்டிக்கு அய்யா வைகுண்டர் பெயரை வைப்போம். நியாயத்தை கேட்டவர், நீதியை கேட்டவர் என்பதற்காக பெயர் வைப்போம் என அறிவித்து இருக்க லாம். மாறாக இப்படி பேசியதை கண்டிக்கிறோம். ஆளுநர் அல்ல யார் இப்படி செய்தாலும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.
வரலாறு தெரியாமல் வாய் திறக்கக் கூடாது என்பது எங்களின் கோரிக்கை. மனுதர்மம் எங்கே இருக்கிறதோ அங்கு நாங்கள் இல்லை. இந்த நாட்டுக்கு அரசமைப்புச் சட்டத்தை இயற்றி தந்த அம்பேத்கர் என்ன சொன்னார்? அவர் பிறந்த சமுதாயத்தில் ஜாதி உள்ளது எனக் கூறி அதில் இருக்கமாட்டார் எனக் கூறினாரே ? அது சரியா. தவறா?.
எனவே நீங்கள் உங்களின் வேலையை செய்யுங்கள். உங்களுக்கு ஆளுகிற வேலை இருக்கிறது. அரசு பதவியில் இருப்பவர்கள் அரசு வேலையை செய்ய வேண்டும். ஆன்மிகத்துக்குள் வரக்கூடாது. ஆன்மிகத்துக்குள் இருக்கும் எங்களுக்கு தெரியாத வரலாறு இல்லை. வைகுண்டர் வகுத்து தந்த அகில திரட்டு எங்கள் கையில் உள்ளது.
ஏதோ நாலு பேரை பிடித்து வைத்து கொண்டு அகில திரட்டுக்கு சிறப்பு செய்கிறோம் என செய்யக்கூடாது. வாருங்கள் இதே இடத்தில் 2 மைக்கை வைத்து தருகிறேன். வைகுண்டர் பற்றியும், அவரது கொள்கைகள் பற்றியும் பேசுங்கள். ஒன்று உறுதி. அவர் ஜாதியத்தை காக்க வரவில்லை. வடமொழியை நிலைநிறுத்த வர வில்லை. ஹோமம், வேள்வி நடத்த வரவில்லை. உருவ வழிபாட்டை வணங்க வரவில்லை. இதற்கு எல் லாம் எதிராக வந்தவர் வைகுண்டர்” என்றார்.