2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும்!

11 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய கல்விப் புரட்சி, இன்றைக்கு பெரு விரிவாகிவிட்டது –
தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களை உலக நாடுகள் பின்பற்றுகின்றன!
அது தனி நபருக்காக அல்ல; உங்களுக்காக அல்ல;
எங்களுக்காக அல்ல. வருங்கால சந்ததியினுடைய வாழ்வுக்காக!

தஞ்சாவூர் மாநகரத் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

தஞ்சை, அக்.29 – காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய கல்விப் புரட்சி, இன்றைக்கு பெரு விரிவாகிவிட்டது.  தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. 2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும்.  அது தனி நபருக்காக அல்ல; உங்களுக்காக அல்ல; எங்களுக்காக அல்ல. வருங்கால சந்ததியினுடைய வாழ்வுக்காக  அதை செய்தாகவேண்டும். அதற்காகப் பாடுபடவேண்டும். ‘பெரியார் உலகம்’ என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா!

கடந்த 10.10.2025 மாலை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி அரங்கத்தில், தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

யாரோ ஒரு தனி மனிதர்மீது, யாரோ ஒரு மதவெறியன், ஸநாதன வெறியன் செருப்பு வீசிவிட்டான் என்று அதை அலட்சியமாக விட்டுவிட்டுப் போக முடியுமா? என்பதை எண்ணிப் பாருங்கள் தோழர்களே!

இது ஜாதி வெறியின் உச்சக்கட்டம். இதுதான் ஸநாதனம். ஸநாதனத்தின் யோக்கியதையைப் புரிந்து கொள்ளுங்கள்.

கடவுள், செருப்பைக் கொடுத்து ஏவிவிடுகிறாரா?

இதுதான் உன் கடவுளா? என்று கேட்கவேண்டாமா?

ஒரு தலைமை நீதிபதியாக வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வரவேண்டும். எல்லோருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கூடிய பதவியில் இருப்பவரை, ஒரு தலைமை நீதிபதியாகப் பார்க்க வில்லை, அந்த ஸநாதனவாதி.

இந்தச் சூட்டுக்கும், உணர்வுக்கும் பெயர்தான் சுயமரியாதை இயக்கம்!

தலைமை நீதிபதியாக இருந்தாலும், நீ கீழ்ஜாதிதான். நீ சாதாரண ஆள்தான் என்று ஜாதி வெறி, ஜாதித் திமிர். வருணாசிரம தர்மத்தினுடைய ஆதிக்கம் எப்படி இருக்கிறது  என்று பாருங்கள். நெஞ்சம் கொதிக்க வில்லையா? இந்தச் சூட்டுக்கும், உணர்வுக்கும் பெயர்தான் சுயமரியாதை இயக்கம்.

செருப்பு வீசிய ஸநாதனவாதி என்ன சொல்கிறான் தெரியுமா? ‘‘செருப்பு வீசியதற்காக நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன்; கடவுள்தான் என்னை இதைச் செய்யச் சொன்னார்’’ என்கிறான்.

இதில் கடவுள் படும்பாடு இருக்கிறதே, வெட்கக்கேடு!

கடவுள்மீது பழியைப் போடுகிறார்கள்!

எல்லாவற்றையும் இவன் செய்துவிட்டு, கடவுள்மீது பழியைப் போடுகிறார்கள்.

ரஷ்ய அதிபர் புதினிடம், ‘‘ஏன், உக்ரைன்மீது தாக்கு தல் தொடுத்தீர்கள்’’ என்று கேட்டால், ‘‘கடவுள்தான் தாக்கச் சொன்னார்’’ என்று சொல்கிறார்.

அதேபோன்று, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், ‘‘கடவுள்தான் என்னைச் செய்யச் சொன்னார்’’ என்று சொல்கிறார்.

நம்மூரில், செருப்பைத் தூக்கி வீசியவனிடம் கேட்டால், ‘‘கடவுள்தான் என்னை இதுபோன்று செய்யச் சொன்னார்’’ என்று சொல்கிறான்.

கடவுளை, இந்த அளவிற்குக் கேவலப்படுத்துவது நாங்களா? நீங்களா? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.

பெரியார் உலகம் அமைப்பது என்று இருக்கிறதே, அது வெறும் கட்டடம் அல்ல நண்பர்களே! இந்தக் கொள்கையின் வடிவம்தான் அது!

இந்தியாவிலேயே முதல் குரல்
எங்கே இருந்து வந்தது தெரியுமா?

திராவிட மாடல் ஆட்சி ஏன் தேவை?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின்மீது செருப்புச் வீச்சைக் கண்டித்து, இந்தியாவிலேயே முதல் குரல் எங்கே இருந்து வந்தது தெரியுமா?

தமிழ்நாட்டிலிருந்துதான்!

அதுவும் யாருடைய குரல் தெரியுமா?

‘திராவிட மாடல்’ ஆட்சியின் திராவிட நாயகர் எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிட மிருந்துதான்.

உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை, நானோ, முதலமைச்சர் அவர்களோ நேரில் பார்த்ததில்லை. பார்க்கவேண்டிய அவசியமில்லை.

பெரியார் பெற்ற வெற்றி! அம்பேத்கர் பெற்ற வெற்றி! சமூகநீதி பெற்ற வெற்றி!

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர்பதவிக்கு வந்தார்கள் என்றால், அது பெரியார் பெற்ற வெற்றி! அது அம்பேத்கர் பெற்ற வெற்றி! சமூகநீதி பெற்ற வெற்றி! என்றுதான் நாங்கள் நினைப்போம்!

அந்த வெற்றியைப் பறிப்போம்! அந்த வெற்றி பெற்றவரை மதிக்கமாட்டோம் என்று சொல்லக்கூடிய ஆணவத் திமிர் இருக்கிறதே, அந்த ஆணவத்தைப் போக்குவதற்காகத்தான் இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும்; மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று சொல்லுகிறோம்.

அதை நிலைநாட்டுவதற்குத்தான், அந்த முயற்சி குன்றிப் போய்விடக்கூடாது. அந்த முயற்சி குறைந்து போய்விடக்  கூடாது என்று சொல்லுவதற்காகத்தான், பெரியார் உலகம்.

‘பெரியார் உலகம்’
என்றைக்கும் நிலைத்து இருக்கும்!

இன்றைக்கு நாம் இருப்போம், நாளைக்கு நாம் இல்லை ஒரு சமுதாயத்தில். ஆனால், பெரியார் உலகம் என்றைக்கும் நிலைத்து இருக்கும்.

பெரியார் உலகத்திற்கு உள்ளே சென்றவுடன், இவ்வளவு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்தது. பின்னாளில், இப்படி  வந்தது? என்ப வையெல்லாம் வரலாற்றுச் சுவடுகளாக இருக்கும்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி யைப் பார்த்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உற்சாகமடைந்தார்.

அந்தக் காலத்தில், நம்முடைய சகோதரிகள், நம்மு டைய இனத்துப் பெண்கள் எல்லாம் பொட்டுக்கட்டி கோவில்களுக்குள் ‘தேவதாசிகள்’ என முத்திரை குத்தி விடப்பட்டார்கள். இன்றைக்கு அதுபோன்று எங்கே யாவது பார்க்க முடியுமா?

கருநாடக மாநிலத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவர முடியவில்லை!

இன்றைக்கும் நம்முடைய பக்கத்து மாநிலமான கருநாடகத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவர முடியவில்லை. இன்னமும் ‘தாசி’ என்ற பெயர் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால்,  தமிழ்நாட்டில், சுயமரியாதை இயக்கம் தொடங்கி, முத்துலெட்சுமி ரெட்டிகளை உருவாக்கி, ஜாதி மறுப்புப் திருமணச் செய்த மிகப்பெரிய இயக்கம், பெரியாருடைய சுயமரியாதை இயக்கமாகும்.

அன்றைய நிலை குறித்து, இன்றைய இளை ஞர்களுக்குச் சொல்லவேண்டும்.

எல்லா வசதிகளையும் ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்தாகிவிட்டது.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களை உலக நாடுகள் பின்பற்றுகின்றன!

காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய கல்விப் புரட்சி, இன்றைக்கு பெரு விரிவாகி விட்டது.  தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களை உலக நாடுகள் பின்பற்றுகின்றன.

நீதிக்கட்சி ஆட்சியில், பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டம். பிறகு காமராஜர் ஆட்சியில். அதற்குப் பிறகு, அறிஞர் அண்ணா ஆட்சி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி, இன்றைக்கு சமூகநீதிக்கான சரித்திர நாயகரான முதலமைச்சர் ஆட்சியில் காலை சிற்றுண்டித் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நேற்றுகூட ஓர் அமைப்பைச் சேர்ந்த 20 பேர், பெரியார் திடலுக்கு வந்து என்னைச் சந்தித்தனர். அவர்களுடைய கேள்விக்கு, நான் ஆங்கிலத்தில் பதில் சொன்னேன்.

நம்முடைய முயற்சி என்றைக்கும் தோல்வியடையாது!

இங்கே ஜாதி, மதம், கடவுள் ஆகியவை மக்களைப் பிரிக்கின்றது. ஆனால், பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடமும் இணைக்கிறது. அந்த இணைப்பிற்குப் பெயர்தான் நம்முடைய இயக்கம் என்று சொன்னேன். நம்முடைய முயற்சி என்றைக்கும் தோல்வியடையாது. இன்றைக்கு இந்த விழாவினை, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடத்துகின்றோம். அன்றைக்கு நம்மிடம் மேயர் இல்லை. இன்றைக்கு நம்மிடையே மேயர் இருக்கிறார்.

தஞ்சைதான், கழகத்தின் நஞ்சை என்பதற்குச் சந்தேகமேயில்லை.

தந்தை பெரியார் நூற்றாண்டு – பாபநாசத்தில் கமிட்டி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், என்ன செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்வி எழுந்தது.

கழகப் பொருளாளராக இருந்த
கா.மா.குப்புசாமி அறிவிப்பு!

நாகப்பட்டினத்தில் அய்யாவிற்கு 75 பவுன் கொடுத்தார்கள். அதேபோன்று, 100 பவுன்  ஆசிரியர் அய்யாவிற்குக் கொடுக்கிறோம் என்று கழகப் பொருளாளராக இருந்த கா.மா.குப்புசாமி அறிவித்தார்.

தஞ்சையை மறந்துவிடக் கூடாது, தஞ்சைக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று சொன்னார்கள்.

அப்போதுதான், தஞ்சையில், மகளிருக்கென பாலிடெனிக் கல்லூரியை உருவாக்குவோம் என்று முடிவெடுத்தனர்.

தமிழ்நாட்டில், தனியார்த் துறையில் உருவாகிய முதல் பாலிடெக்னிக் கல்லூரி அதுதான்.

இப்போதுதான், அக்கல்லூரியில் முப்பாலரும் படிக்கிறார்கள்.

அன்றைக்கு ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா, தோழர்களே?

ரூ.800 தான் நண்பர்களே!

100 பவுன், ரூ.80,000.

வீட்டிற்கு வீடு சென்று வசூல் செய்யுங்கள் –  மக்களுடைய பங்களிப்பு இருக்கவேண்டும்!

தஞ்சையில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்குவதற்காக ஓர் ஆலோசனையை அப்போது நான் சொன்னேன், ‘‘தயவு செய்து, இதை பெரிய தொகை என்று நினைக்கவேண்டாம். சிறுகக் கட்டி பெருக வாழ்வோம் என்று சொல்லிவிட்டு, அய்யா சொல்வதுபோன்று, வீட்டிற்கு வீடு சென்று வசூல் செய்யுங்கள். வசூல் என்பது வெறும் பணத்திற்காக அல்ல நண்பர்களே! மக்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்குவதற்காக, தஞ்சையில் உள்ள ஒவ்வொரு வீட்டின் சார்பாக 2 ரூபாய் கொடுங்கள்’’ என்று கேளுங்கள் என்றேன்.

அதேபோன்று, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற தோழர்கள், ‘‘அம்மா உங்கள் பெண் அந்தக் கல்லூரியில் படிக்கின்ற வாய்ப்பு ஏற்படும்’’ என்று சொல்கிறார்கள்.

‘‘அய்யா, என்னிடம் 2 ரூபாய் இல்லை. அதற்குப் பதில் அரிசி கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்களா?’’ என்று தோழர்களிடம்  கேட்கிறார்கள்.

உடனே தோழர்கள், அரிசி வாங்கலாமா? என்று கேட்டார்கள்.

தாராளமாக வாங்குங்கள்; அதைப் பணமாக்குவோம் என்று சொன்னேன். அவர்களுடைய பங்களிப்புதானே மிகவும் முக்கியம்.

இன்றைக்கு உலக அளவில் பரிசு பெற்றிருக்கின்றது பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி!

அப்படி 2 ரூபாய் வசூல், மக்கள் கொடுத்த அரிசியை சந்தையில் கொடுத்து, அதைப் பணமாக்கி உருவானதுதான் இந்தப் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி. இன்றைக்கு உலக அளவில் பரிசு பெற்றிருக்கின்றது.

சட்டக் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் இஸ்மாயில். அவர் எனக்குப் பேராசிரியர்.  என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். அன்றைக்கு அவர் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்தார்.

அவரை அழைத்து வந்துதான், இந்தப் பாலிடெக்னிக் கல்லூரியின் திறப்பு விழாவை நடத்தினோம். அன்றைக்கு முதலமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தார். அவர் காலத்தில்தான் அனுமதி கொடுத்தார். இன்னமும் நாம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள்தான்.

அப்போது உரையாற்றும்போது, பெரியார் நூற்றாண்டு விழாவினை அரசாங்கமும் கொண்டாடுகிறது. அரசாங்க இடமாக இருந்தாலும், பணம் கொடுத்துத்தான் வாங்கி னோம். விலையில்லாமல் அரசாங்கம் கொடுத்தால், சில நிபந்தனை விதிப்பார்கள். ஆனால், பணம் கொடுத்துதான் வாங்கினோம்.

ஏனென்றால், முழுக்க முழுக்க அதனுடைய உரிமை நமக்கு இருந்தால்தான் நமக்கு நல்லது. அப்படி யில்லையென்றால், ஆட்சி மாறினால், தொல்லை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால், இந்த இடத்திற்கு ரூ.19 ஆயிரம் மதிப்பு போட்டார்கள்;  தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுந்தரேசன் அய்.ஏ.எஸ். உத்தரவு போட்டார்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி விழா தொடக்க விழாவில், அமைச்சர்கள் நாவலர், எஸ்.டி.சோமசுந்தரம் போன்றோர் கலந்துகொண்டனர்.

பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் பரிந்துரை செய்வோம்!

அப்போது அவர்கள் உரையாற்றும்போது, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி என்று சொல்லும்போது, அதற்காகப் பணம் வாங்கியிருக்கக் கூடாது. நாங்கள் முதலமைச்சரிடம், அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று சொல்லுவோம் என்று சொன்னார்கள்.

ஏனென்றால், பெரியார் உலகம், பெரியார் நூற்றாண்டு  பாலிடெக்னிக் கல்லூரி போன்றவையெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை.

முதலமைச்சர்
எம்.ஜி.ஆரின் உத்தரவு!

அதேபோன்று, அந்தக் கோப்பு, முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்றது.  உடனே அவர் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்து, ‘‘வீரமணி எங்கே இருக்கிறார் என்று பார்த்து, அவர் தஞ்சைக்கு வரும்போது, இந்தக் காசோலையை நேரில் கொடுக்கவேண்டும். தபாலிலோ, அல்லது வேறு யாரிடமோ கொடுக்கக் கூடாது. அவரிடம் கொடுத்துவிட்டு, எனக்குத் தொலைப்பேசியில் தகவல் சொல்லுங்கள்’’ என்றார்.

அன்றைக்குக் கைப் பேசியெல்லாம் கிடையாது.  தொலைப்பேசியில் என்னைத் தொடர்புகொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்,  ‘‘சார், நீங்கள் தஞ்சைக்கு உடனே வாருங்கள்’’ என்று சொல்லி, தகவலைச் சொன்னார்.

உடனே நானும் ரயிலில் புறப்பட்டுச் சென்றேன்.

ரெவின்யூ போர்டிற்கு வந்த பணம், வெளியில் போனதே கிடையாது!

மாவட்ட ஆட்சித் தலைவர், அதற்கு முன்பு ரெவின்யூ போர்டில் இருந்தவர். அவர் அந்தக் காசோலையை என்னிடம் கொடுக்கும்போது, ‘‘நான், ரெவின்யூ போர்டில் செயலாளராக இருந்திருக்கின்றேன். இதுவரையில் ரெவின்யூ போர்டிற்கு வந்த பணம், வெளியில் திரும்பிப் போனதே கிடையாது. நாங்கள் வாங்கித்தான் பழக்கமே தவிர, திருப்பிக் கொடுக்கின்ற பழக்கம் ரெவின்யூ போர்டில் கிடையவே கிடையாது. முதல் முறையாக பெரியாருக்காகக் கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

எதற்காக இந்த பழைய நிகழ்வைச் சொல்கிறேன் என்றால்,  இதேபோன்றுதான், பெரியார் உலகம் வளரும்.

இது முதல் கட்டம்தான் –
அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும்!

நம்மால் முடியும். நம்முடைய தோழர்கள் எல்லோரும் பெரியார் உலக நிதியைக் கொடுத்திருக்கிறார்கள். அவரவர்கள் சக்திக்கு மீறிக் கூட கொடுத்திருக்கிறார்கள். பிரதிபலன் கருதி அவர்கள் கொடுக்கவில்லை.

எனவே, இங்கே நிதியளித்த நிதிக் குழுவைப் பாராட்டுகின்றோம். இது முதல் கட்டம்தான். அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும். இதிலே இன்னொரு பகுதி, திருவையாறு, பூதலூர்.

எனவே, எல்லோருடைய ஒத்துழைப்பிற்கும் நன்றி!

பெரியார் உலகம் என்பது வெறும் கட்டடத்திற்காக அல்ல! இந்த உணர்வுகளைப் பாதுகாக்கவேண்டும். நமக்காகப் பாதுகாக்கவேண்டும்.

‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும்

2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும்.

அது தனி நபருக்காக அல்ல; உங்களுக்காக அல்ல; எங்களுக்காக அல்ல. வருங்கால சந்ததியினுடைய வாழ்வுக்காக  அதை செய்தாகவேண்டும். அதற்காகப் பாடுபடவேண்டும்.

‘பெரியார் உலகம்’ என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது.

வாய்ப்பளித்த உங்களுக்கும், நிதியளித்தவர்களுக்கும், நிதி தரவிருக்கின்றவர்களுக்கும், இங்கே வந்தவர்களுக்கும், வர வாய்ப்பில்லாதவர்களுக்கும் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் மீண்டும் தெரிவித்து, மீண்டும் சந்திப்போம்!

பெரியார் சொல்வார், ‘‘தோளில் துண்டு எதற்காகப் போட்டிருக்கின்றோம் என்றால், அவசரத்திற்காக துண்டை ஏந்துவதற்காகத்தான்’’ என்பார்.

பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதற்காகக் கேட்கும்போது, அது பெருமை!

ஏனென்றால்,

‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்’

எனக்காகப் பிச்சை எடுத்தால் அது அவமானம். ஆனால், சமுதாயத்திற்காக, பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதற்காகக் கேட்கும்போது, அது பெருமை!

நூற்றுக்கு நூறு இதுதான் பெரியார் மண் என்பதற்கு – எதிரிகளுக்குப் பதிலடியாக அமையும்!

ஆகவே, இந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு, மாநகரத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் பெரியார் உலகத்திற்காக நன்கொடை கொடுத்தால்,  இது பெரியார் மண்; நூற்றுக்கு நூறு இதுதான் பெரியார் மண் என்பதற்கு – எதிரிகளுக்குப் பதிலடியாக அமையும்.

இந்த வாய்ப்புகளை உருவாக்கித் தந்த உங்களுக்கும், உழைத்த உங்களுக்கும் மிகுந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

வாழ்க பெரியார்!

வருக பெரியார் உலகம்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *