அலிகார், பிப்.26- இந்திய சந்தைகளில் சீன பொருட் கள் ஆக்கிரமிப்பால் சிறு தொழில்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள மொராதாபாத்தில் இருந்து சம்பல் பள்ளத்தாக்கு வழியாக நேற்று (25.2.2024) அலிகாரை அடைந்தது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அலிகாரின் புகழ் பெற்ற பூட்டு தொழில் மற்றும் கைவினைத் தொழில்கள் நலிவடைந்து வருவதை சுட்டிக்காட்டி பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மலிவான முறையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் வருகை, உள்ளூர் சிறிய மற்றும் குடிசை தொழில்களுக்கு சாவு மணி அடித்து இருக் கிறது. அதேநேரம் பெரிய வணிக நிறுவனங்கள் வளமான பலனை அறுவடை செய்கின்றன.
பெரிய கார்பரேட் நிறுவனங்களுடன் தொடர் புடைய வர்த்தகர்கள் சீனப்பொருட்களால் இந்தி யச் சந்தைகளை ஆக்கிரமித்ததால், உள்நாட்டு சிறு மற்றும் குடிசைத்தொழில்கள் மற்றும் கைவினை ஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தமுறை அலிகாருக்கு நான் வரும்போது, சீன தயாரிப்புகளுக்குப் பதிலாக அலிகாரில் தயா ரிக்கப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களைப் பார்க்க விரும்புகிறேன்.
நாட்டில் வெறுப்பு பரவுவதன் பின்னணியில் இருப்பது அநீதி, இந்தியாவில் ஏழைகள். விவசாயி கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதிக்கு எதிராகவே நாங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கி இருக் கிறோம்.
நாட்டில் வெறுப்பு பரவுகிறது. இது ஏன் பரவுகிறது. இதற்கான காரணம் என்ன? சகோதர, சகோதரிகளே. இதற்கான காரணம் வாக்கு வங்கி இல்லை. வெறுப்பும், வன்முறையும் பரவுவதற்கு அநீதியே காரணம் என விவசாயிகள், தொழிலாளர் கள் உள்பட ஏராளமான மக்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
எனவேதான் 2 ஆவது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ‘நியாயம்’ என்ற வார்த்தையை சேர்த்தோம். ஆனால் இப்போது இந்த 2ஆவது நடைப்பயணம் இந்தியாவை ஒருமைப்படுத்தும் பணியில் இறங்கி இருக்கிறது.அநீதிக்கு எதிராக போராடுகிறது. மாநிலத்தில் காவல்துறை பணி தேர் வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் லட்சக் கணக்கான வேலையில்லா இளைஞர்களுக்கு மேலும் ஒரு அடியாகும்.
-இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
அகிலேஷ் பங்கேற்பு
ராகுல் காந்தியின் நடைப்பயணம் நேற்று
(25-2-2024) மாலையில் ஆக்ராவை அடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டார். அவருடன் ஏராளமான சமாஜ்வாடி தொண்டர்களும் பங்கேற்றனர்.