‘எக்ஸ்’ சமூக வலைத்தள நிறுவனம் குற்றச்சாட்டு!
புதுடில்லி, பிப்.24- விவசாய அமைப்புகளை சேர்ந்தவர் களின் சமூக வலைதள பக்கங்களையும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக ஆதரவாக வலியுறுத்தும் ‘எக்ஸ்’ கணக்கு களையும் முடக்க பா.ஜ.க அரசு சட்டத்தை பயன்படுத்தி ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, எலன் மஸ்கின் Ôஎக்ஸ்Õ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
ஒன்றிய அரசின் விவசாய விரோத போக்கை உலக மக்களுக்கு தெரியப்படுத்துவதில் சமூக வலைதளங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. அதில் மிக முக்கியமான பங்கை ‘எக்ஸ்’-வலைதளமான டுவிட்டர் (twitter) வகிக்கிறது.
அதன் அடிப்படையில், விவசாய அமைப்புகளை சார்ந்த வர்களும், விவசாய வல்லுநர்களும், பொது மக்களும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான காணொளிகளை Ôஎக்ஸ்Õ வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அத்தகைய சூழலில், விவசாயிகள் பேரணி சார்ந்த பதிவுகளை பகிர்ந்த முக்கிய வலைதள கணக்குகளை முடக்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க.
இது குறித்து ‘எக்ஸ்’ குழுமத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு (Global Government Affairs) வெளியிட்ட செய்தி குறிப்பில், “ஒரு குறிப்பிட்ட நிகழ்வு (விவசாயிகள் போராட்டம்) தொடர்பாக பதிவிடும் அனைத்து கணக்குகளையும் முடக்க, சட்டப்படி கோரிக்கை விடுத்துள்ளது இந்திய அரசு.
அவர்களின் கோரிக்கை கருத்துரிமைக்கு எதிராக இருப்பதால், அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எனினும், சட்ட வரையறைப்படி அணுகியுள்ளதால், அதனை எங்களால் மறுக்க இயலவில்லை. மேலும், இந்த வலைதள கணக்குகளின் முடக்கமானது இந்தியாவில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இக்கணக்குகளுக்கு தடையில்லை” என தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசின் கருத்துரிமைக்கு எதிரான அரசியல், இந்தியாவை கடந்து பன்னாட்டளவில் அம்பலமாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதுவரை பன்னாட்டளவில் சுமார் 30 இலட்சம் மக்கள் இப்பதிவை பார்த்து இருக்கின்றனர்.