புதுடில்லி, பிப். 20- ஒன்றிய அரசுடன் விவசாயிகள் நடத்திய 4 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இத்னால் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட,10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டில்லி சலோ’ என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. அத்துடன் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டமும் திரும்பப்பெறப்பட்டது .
விவசாயிகள், 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். டில்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதை ஏற்றுப் பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டில்லிக்கு விரைந்தனர். இவ்வாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்களுடன் விவசாய சங்கத்தினர் 8, 12 மற்றும் 15 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அதில் முன்னேற்றம் காணப்படவில்லை என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.2.2024) 4ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
4ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது, பருப்புகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை அரசு அமைப்புகள் 5 ஆண்டுகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என ஒன்றிய அரசு முன்மொழிந்தது. மேலும் விவசாயிகளுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முன்வந்தது அரசின் இந்த முடிவை ஏற்காமல், விவசாயிகள் நிராகரித்து, இது விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை எனக் கூறியுள்ளனர். இதையொட்டி நாளை (21.2.2024) டில்லி நோக்கி பேரணியாக செல்வது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.