புதுடில்லி, அக். 7- நாடு முழுவதும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் நேற்று (6.10.2023) தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வழக்கு ஒன்று நேற்று (6.10.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்ததாவது: ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். தற்போது நீதிமன்ற அறையின் பின்வரிசையில் இளையோர் பிரிவு சிவில் நீதிபதிகள் 75 பேர் வந்து அமர்ந்துள்ளனர். அவர்கள் மகாராட்டிரத்தில் இருந்து வந்துள்ளனர். அவர்களில் 42 பேர் பெண்கள், 33 பேர் ஆண்கள். இதுவே நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.