புதுடில்லி,அக்.7- நாட்டில் உள்ள எந்தவொரு உயர் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு காணொலி விசாரணையை மறுக் கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தேசிய நுகர்வோர் தகராறுகள் தீர்வு ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத் தில் காணொலி வழியாக விசா ரணை மேற்கொள்ளும் முறை தொடர்கிறதா அல்லது கைவிடப் பட்டதா என்பதை தெரிந்து கொள்ள, உயர் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் ஆணையத் தின் பதிவுத் துறை பதிலளிக்க கடந்த செப்.15-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தாக்கீது பிறப்பித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசா ரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றங்களில் நேரிலும், காணொலி வழியாகவும் என கலப்பு முறையில் விசாரணை மேற் கொள்வதை உறுதி செய்வதில், தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறைவாக இருப்பதை அறிந்து நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தெரிவித்ததாவது: நாட்டில் உள்ள எந்தவொரு உயர் நீதிமன்றமும் கலப்பு முறை விசாரணையின் போது வழக்குரைஞர்களுக்கும், வழக்காடி களுக்கும் காணொலி வசதி அல்லது விசாரணையை மறுக்கக் கூடாது. இந்த உத்தரவை பின்பற்ற 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன் பிறகி லிருந்து அனைத்து உயர் நீதிமன் றங் களும் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.