👉திராவிடர் கழகம்தான் முத்தமிழ் அறிஞருக்குத் தாய் வீடு.
👉எனக்கும் தாய் வீடு திராவிடர் கழகம் தான்.
👉கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்த முழுத் தகுதியும், கடமையும் திராவிடர் கழகத்திற்கும் உண்டு.
👉கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஆக்கியதே தந்தை பெரியார் அவர்கள்தான்!
👉கலைஞர் அவர்களுக்கு முதன் முதலில் சிலை அமைத்தவர் அன்னை மணி யம்மையார் தான்.
திராவிடர் கழகத்தில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், மானமிகு ஆசிரியர் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் இந்த அடியேன் என மூன்று சகாப்தங்களாக இணைந்து பணியாற்றுகிறோம்.கருப்பும் – சிகப்பும் திராவிட இயக்கம் என்பதுபோல இணைந்தே இருக்கிறோம் – இணைந்தே இருப்போம்!
👉”மானமிகு சுயமரியாதைக்காரன்” என்ற வரியில்தான் தலைவர் கலைஞருடைய 95 ஆண்டு கால வாழ்க்கை அடங்கி யிருக்கிறது.
நெஞ்சுக்கு நீதியின் ஆறு பாகங்களை தலைவர் கலைஞர் அவர்கள் நமக்காக எழுதித் தந்தார்கள். அதையும் தாண்டி தாய் வீடான திராவிடர் கழகத்தின் சார்பில் ஆசிரியரால் தொகுக்கப்பட்டு இங்கு வெளி யிடப்பட்ட “தாய் வீட்டில் கலைஞர்” என்ற நூல் இப்பொழுது ஏழாவது பாகமாக வெளி வந்திருக்கிறது. தமிழர் தம் இல்லமெல்லாம் உள்ளமெல்லாம் இருக்க வேண்டிய நூல். இதனை உருவாக்கி இருக்கக் கூடிய ஆசி ரியர் அவர்களை உள்ளபடியே நன்றியால் பாராட்டுகிறேன் என்று சொல்லக் கூடாது, வணங்குகிறேன், வணங்குகிறேன்.
👉 இந்த இரண்டு இயக்கங்களுக்கும் இருக்கக் கூடிய நட்பும், உறவும் உலகில் உள்ள எந்த இயக்கத்திற்கும் இருந்திருக்க முடியாது.
தந்தை பெரியார் மறைந்த நிலையில் அவருக்கு அரசு மரியாதை கொடுக்கக் கூடாது, பெரியார் எந்த அரசுப் பதவியிலும் இல்லை. இந்த நிலையில் பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தால் ஆட்சியைக்கூடக் கலைக்கலாம் என்று அரசு அதிகாரிகள் சொன்னபோது, “ஆட்சியைக் கலைக்க இதுதான் காரணமாக இருக்குமானால், இதைவிடப் பெருமை எனக்கு எதுவும் இருக்க முடியாது” என்று சொன்னவர் கலைஞர். இது அறிவாலயத்தில் நடந்த உரையாடல் அல்ல, இது கோட்டையில் நடந்த உரையாடல்.
👉 “ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை!” என்றார் அறிஞர் அண்ணா.
“தமிழ்நாடு அரசுதான் பெரியார், பெரியார்தான் தமிழ்நாடு அரசு” என்று சொன்னவர் தலைவர் கலைஞர்.
நானும் அதையே உங்கள் அனைவரின் சார்பில் வழிமொழிகிறேன். உங்களுடைய பலத்த கரஒலிக்கிடையே மீண்டும் நான் வழிமொழிகிறேன்”
👉கூட்டாட்சி கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்ப தற்காகவே ‘இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கிறோம். இது அரசியல் கூட்டணியல்ல. கொள்கைக் கூட்டணி!
👉தமிழ்நாடு இதுவரைக்கும் இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்பட வேண்டும், மீட்கப்பட்டே தீர வேண்டும்.
கல்வி உரிமை
நிதி உரிமை
சமூக நீதி உரிமை
மொழி உரிமை
இன உரிமை
மாநில சுயாட்சி உரிமை
ஆகிய அனைத்தையும் மீட்போம்!
தமிழ்நாட்டுக்குரிய 39 எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது – அதனை அனுமதிக்க மாட்டோம்.
👉மகளிருக்கு 33 சதவிகிதம் என்று அறிவித்தார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்ததற்குப் பிறகே செய்வோம் என்பதே அதை நிறைவேற்றாமல் இருப்பதற்கான தந்திரம்.
அதிலும் குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மகளிர் இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது – பா.ஜ.க.வினுடைய உயர் வகுப்பின ருடைய மனோபாவம்! காலப் போக்கில் பட்டியலின இடஒதுக்கீட்டையும் காலி செய்யக் கூடிய ஆபத்து இதில் இருக்கிறது.
👉மக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தோழர்கள் திராவிட இயக்கத்தினுடைய தோழர்கள் பெரியாரின் தொண்டர்கள் கொள்கைக் கோட்பாடுகளைப் பரப்பிடும். பணியைத் தொய்வின்றித் தொடர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
👉”வீரமணி வென்றிடுக!” என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள், அதையும் நான் வழிமொழிகிறேன்.
👉அய்யா ஆசிரியர் அவர்களே “ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வந்துவிடும். அவருக்கு ஓய்வு பிடிக்காது.
இருந்தாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஓய்வெடுத்துப் பணியாற்றுங்கள். பெரியாரையும் கலைஞரையும் கடந்து நீங்கள் வாழ வேண்டும்.
“பெரியாரின் ஆட்சிக்கு நாங்கள் காரண கர்த்தாக்கள் பெரியாரின் மாட்சிக்கு வீரமணிதான் காரணம்” என்று சொன்னார் கலைஞர் அவர்கள்.
பெரியாரின் மாட்சி இன்னும் பரவ, நீண்ட காலம் நீங்கள் வாழ வேண்டும், வாழ வேண்டும்”
“ஆசிரியர் எப்பொழுது எந்த நேரத்திலும் எங்கு அழைத்தாலும் வருவேன் – வருவேன்!”
– இத்தனை விலை மதிப்பில்லா முத்துக்களையும், காலத்தால் நின்று நிலைக்கும் பிரகடனங்களையும் முரசொலித்தவர் ‘திராவிட மாடல்’ அரசின் தளகர்த்தர் – சமூக நீதிக்கான சரித்திர நாயகர் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – எங்கே? தஞ்சையில் – எப்பொழுது? கடந்த 6ஆம் தேதி மாலை; ஒரே வார்த்தையில் சொன்னால் இவற்றின் மூலம் தன் உள்ளத்தை முழுவதுமாகத் திறந்து காட்டினார் – வார்த்தைகளாய்க் கொட்டினார்.
அவர்தம் சொற்பொழிவுகளில் இந்தத் தஞ்சை உரை தனித் தன்மையானது – கம்பீரமானது – கொள்கைகள் – இலட்சியங்கள் கூர் மழுங்காமல் கொட்டப்பட்ட முழக்கங்கள்!
இவற்றை உற்சாகப்படுத்தும் வகையில் தான் பாராட்டி மகிழும் நோக்கில்தான் திராவிட மாடல் ஆட்சியின் நாயகரை உச்சி மோந்து உளமார வாயார, கையார வாழ்த்தினார் தகைசால் தமிழர் நமது தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள்.
“பாராட்டிப் போற்றிய பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!” என்றார் கலைஞர். இன்னும் இடிக்கப்பட வேண்டியவை இருக்கின்றன. அன்று யுபிஏயை ‘அய்க்கிய முன்னணிக் கூட்டணியை உருவாக்கினார் கலைஞர். இன்று நமது முதலமைச்சர் இந்தியாவை உருவாக்கியுள்ளார். அதனால்தான் பிரதமர் எங்கு சென்றாலும் நமது முதல் அமைச்சரைத் தாக்குகிறார். ‘இந்தியா’ கூட்டணி நாளை ஆளப் போகிறது.
எங்கள் திராவிட ஏவுகணை முதலமைச்சர் அவர்களே! நீங்கள் வாழ்க – உங்கள் வெற்றிப் பணி தொடர்க!” என்று விருது அளித்து வாழ்த்தினார் – திராவிட இயக்கத்தின் இன்றைய மூத்த தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்!
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை -அதற்கான போராட்டத்தையும் அறிவித்து நாளையும் குறித்தார். அப்பொழுது தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மானமிகு கலைஞர்அவர்கள்.
“அய்யா அவர்களே, உங்கள் சீடர்கள் ஆட்சியிலே இருக்கும்போது, நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமா?” என்று கேட்டார்.
“நான் என் கடமையைச் செய்கிறேன். நீங்கள் உங்கள் ஆட்சிக் கடமையைச் செய்யுங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்றார் அய்யா.
“உங்களைக் கைது செய்யவா நாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்? தேவையில்லை நாங்களே சட்டம் செய்கிறோம்” என்றார் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் திருத்தம் செய்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார் – தந்தை பெரியாரின் சீடர் முதல் அமைச்சர் கலைஞர் (2.12.1970).
ஆரியத்தின் ஆதிக்க ஆணிவேர் கோயில் கருவறையிலே தானே இன்னும் குத்திட்டு நிற்கிறது. விட்டு விடுவார்களா சுலபத்தில்? நேராக உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்கள்.
முடிவு -ஆபரேசன் சக்கஸ் – நோயாளி செத்தான் என்ற கதைதான்!
அவ்வளவு சுலபத்தில் நமது கலைஞர்தான் விட்டு விடக் கூடியவரா? கொள்கை வைராக்கியம் கொண்ட வேழமாயிற்றே!
2006ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. – அதன் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகளுக்கான அரசாணையை வெளியிட்டதுடன் – சட்டமும் இயற்றப்பட்டது.
அதற்கான பாராட்டு விழாவை இதே தஞ்சையில் திலகர் திடலில் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் நடத்தியது (12.6.2006)
சென்னையில் தந்தை பெரியார் நினைவிடம் நுழைவு வாயிலில் இதன் நினைவாகக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டது (தனியே காண்க).
மானமிகு கலைஞர் அவர்களின் ஒரு பிறந்த நாளில் (3.6.2010)
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நுழைவு வாயிலில் மானமிகு கலைஞர் அவர்கள் மூலம் மாங்கன்றை நடச்செய்தார் நமது தலைவர் ஆசிரியர்.
13 ஆண்டுகளில் அது வளர்ந்து காயும் காய்த்தது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்ற அய்யாவின் அந்த இறுதிப் போராட்டத்திற்குச் செயல் வடிவம் கொடுத்திருக்கிறார். – நமது ‘திராவிட மாடல்’ அரசின் தளகர்த்தர் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் (14.8.2021).
பட்டியலினத்தைச் சேர்ந்த அய்வர் உட்பட 24 அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அர்ச்சகர் ஆணை தந்து பணியிலும் அமர்த்தினார்!
5 பெண்கள் உட்பட 18 பேர் ஓதுவார்களாக பணியமர்த்தம் செய்த இது “திராவிட மாடல் அரசு” என்று நூறு விழுக்காடு நிரூபித்தார் நமது மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர்.
மானமிகு கலைஞர் நட்ட மரக்கன்று காய்த்ததல்லவா – என்னே வரலாற்று வினோதம்!
ஆணையை நமது முதல் அமைச்சர் அளித்த அர்ச்சகராக நம் மக்களையும் அமர்த்திய இந்தக் கால கட்டத்தில் அது கனியையும் கொடுக்க ஆரம்பித்து விட்டது கலைஞர் நட்ட அந்த ஒட்டு மாஞ்செடி! என்பதுதான் வரலாற்றின் அதிசய அத்தியாயம்.
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!
வரலாற்றுக் கல்வெட்டு!
தந்தை பெரியாரால் இறுதியாக அறிவிக்கப்பட்ட – அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான மனித உரிமைப் பிரகடனமாகும்.
தந்தை பெரியார் அவர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்த போதிலும், அந்த மனித உரிமையை நிலை நாட்டாத நிலையில், அந்த முள்ளோடு புதைத்து விட்டோம் என்று முதலமைச்சரா இருந்த மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் வேதனைப்பட்டார். ‘அந்த முள்ளை’ அகற்ற வேண்டும் என்றும் அன்று சூளுரைத்தார். தொடர்ந்து திராவிடர் கழகம் இதற்காகப் போராடி வந்திருக்கிறது.
அய்ந்தாம் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவிநப் பொறுப்பு ஏற்ற முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்றிய முதல் தீர்மானமே இந்த முள்ளை அகற்றுவது என்பதுதான் (16.5.2006).
தனிச் சட்டம் மூலமாக இதனைச் செயல்படுத்தி, பெரியார் நெஞ்சில் தைத்த ‘முள்ளை’ தமது பேனா முள் மூலம் சட்டம் இயற்றி 22.6.2006 பெரியாரின் இறுதி ஆசையான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதைக் கொண்டுதான் மாண்புமிகு – மானமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் சாதனை, ஜாதி தீண்டாமை ஒழிப்பு வரலாற்றில் மனித உரிமைத் திசையில் அரும்பெரும் சாதனையாகும்.
பெரியார் தொண்டர்களின் சார்பில் வணக்கமும் வாழ்த்தும் உரித்தாகுக! நன்றி அவருக்கு என்றும் உரியதாகுக!
– கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.12.2006