நீதிபதிகளின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து!

viduthalai
4 Min Read

பழனி கோவிலில் யாரை அனுமதிப்பது என்பது பற்றிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
‘‘ஹிந்து” அல்லாதவர்கள் பழனி கோவிலில்
நுழையக் கூடாது என்பது சட்டப்படி சரியில்லை!
‘‘நீதிமன்ற தீர்ப்புகள் சட்டப்படி அமையவேண்டுமே தவிர- மத அடிப்படையில் அமையக்கூடாது!”

பழனி கோவிலில் ஹிந்து மதத்தவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் நுழையக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியின் தீர்ப்பு சட்டப்படி சரியானதல்ல; மத அடிப்படையில் தீர்ப்புகள் அமையக்கூடாது – சட்டத்தின் அடிப்படையில் அமையவேண்டும் என்று நீதிபதிகளின் கருத்துகளை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பழனி முருகன் கோவிலில் யாரையெல்லாம் அனுமதிப்பது என்பதுபற்றிய ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அமர்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளார் ஜஸ்டிஸ் திருமதி.ஸ்ரீமதி அவர்கள்.
அத்தீர்ப்பு ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பாக ஆன தோடு, ஹிந்து மதம் என்பதன் அடிப்படைத் தத் துவங்களையே சரியான புரிதலற்ற அல்லது புது வியாக்கியானம் ஹிந்துபற்றித் தரும் வகையிலோ அமைந்துள்ள ஒரு தவறான தீர்ப்பு ஆகும்.

பழனி கோவில்பற்றி
உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு
இதுபற்றி பழனிகோவில் சம்பந்தப்பட்ட பல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு எழுதிய மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு.சந்துரு அவர்கள், அண்மையில் வெளிவந்துள்ள ‘ஜூனியர் விகடன்’ வாரம் (14.2.2024) இருமுறை இதழில் ‘ஸ்ரீமதிகள், பெங்களூரு ரமணியம்மாளைக் கேட்கவேண்டும்!’ என்ற தலைப்பில் கூறியுள்ள கருத்துகள் ‘விடுதலை’யின் 2 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஹிந்துக்கள் அல்லாதவரை பழனி கோவிலுக்குள் அனுமதிப்பதுபற்றி முடிவு கூறுவதற்குமுன்னால் தீர்ப்பு எழுதிய நீதிபதி அம்மையார் அவர்கள், ‘ஹிந்து’ என்பதற்கு இந்துலா (Hindu Law) என்ன வரையறை (Definition) கூறுகிறது என்பதை முதலில் நன்கு பதிய வைத்த அடிப்படையில்தானே இந்த வழக்கின் தீர்ப்பை எழுதியிருக்கவேண்டும் என்பதுதான் நமது முதல் கேள்வியாகும்.
Applicabily of Hindu Law – யாருக்குப் பொருந்தும் என்பதில் பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் என்ற மதம் உள்ளவர்களும் ஹிந்து என்ற கருத்தியலை உள்ளடக்கியதே ஹிந்து மதம்.

ஹிந்து மதம் என்ற பெயரே வெள்ளைக்காரர்கள் சூட்டிய பெயர்தானே!
‘‘ஹிந்து மதம் என்ற பெயரே அந்நியர்கள் அதற்குக் கொடுத்த பெயர்” என்றார் காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி!
மற்ற இஸ்லாமிய, கிறித்துவ மதங்களைப் போல, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே அம் மதத்தவர்களாக இருக்க முடியும். அந்த நிறுவனங்களே அவ்வாறு அதை நிர்ணயித்தன.
ஹிந்து மதம் – நிறுவனர் இல்லாத மதம் மட்டுல்ல; கடவுள் நம்பிக்கையற்றவர்களும்கூட ‘ஹிந்துக் களாகவே’ அழைக்கப்படுகின்றனர், கருதப்படுகின் றனர்.
இதிகாசமான இராமாயணத்தில் வரும் பாத்திரங் களில் இராமனின் தந்தை தசரத சக்ரவர்த்தியின் அமைச்சர்களில் முக்கியமானவர் ஜாபாலி என்பவர்; அவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது!
பவுத்தம், சிரவணம் என்ற ஜைனத்தில் கடவுள் நம்பிக்கைக்கு இடமே கிடையாது. (பிறகு புத்தரையே 9 ஆவது அவதாரமாக்கியது வேறு கதை).
இந்த நிலையில், ஹிந்து என்பவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கலாம்; நம்பிக்கை உள்ளவராகவும் இருக்கலாம் என்கிற வியாக்கியானம் வரும்போது, இந்த நிபந்தனைகளின் அடிப்படையே தகர்க்கப்பட்டு விடுகிறதே, அதை ஏன் தீர்ப்பு எழுதியதோடு, நிபந்தனைகளையும் போட்டு எழுதி வைக்கவேண்டும்!

மேனாள் நீதிபதி சந்துருவின் கருத்து
இந்து அறநிலையச் சட்ட விதிகள் அப்படி உள்ளன என்பதற்குக்கூட சரியான விளக்கமோ, கருத்தோ இல்லை என்பதை ஜஸ்டிஸ் திரு.சந்துருவின் பேட்டி – கட்டுரை தெளிவாக விளக்குகிறதே!
‘‘இந்து அறநிலைய சட்டத்தில் எங்கும் இப்படிப்பட்ட தடை விதிக்கப்படவில்லை. அதே சமயத்தில் அந்தச் சட்டத்தின்கீழ் இயற் றப்பட்ட விதிகளில், ‘கோவில் நிர்வாகங்கள் தங்களது கோவிலுக்குள் வருபவர்களைப் பற்றி கட்டுப்பாடுகளை விதிக்கலாம்’ என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடு என்று சொல் லும்போது அதில் ஹிந்துக்களை மட்டும்தான் அனுமதிக்க வேண்டுமென்ற பொருள் கொள்ள முடியாது. ஏனெனில், தாய் சட்டத்தின்கீழ் வரையப்படும் விதிகள் அந்தச் சட்டத்துக்கு எதிரானதாக, அப்பாற்பட்டதாகச் சொல்ல முடியாது” என்று மேனாள் நீதிபதி சந்துரு அருமையான விளக்கத்தையும் தந்துள்ளார்.
அதற்குமேலே அண்மைக் காலத்தில் நீதிமன்றங் களுடைய நீதிப் போக்கு எப்படியுள்ளது என்பதையும் போட்டு உடைத்துள்ளார்.

மத அடிப்படையிலான தீர்ப்பு சரியா?
‘‘ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான, என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய தகவலில், ‘நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின்படி அதன் தத்துவங்களையும், கொள்கைகளையும் கடைப் பிடிப்பதற்குப் பதிலாக மத அடிப்படையிலான நீதி மன்றங்கள்போல் செயல்படுவது வேதனையளிக்கிறது’ என்று குறிப்பிட்டார்.”
என்று ‘ஜூனியர் விகடன்’ பேட்டி முடிவில் கூறியுள்ளது – நடைமுறையில் உள்ளபோது, மத அடிப்படையில் நீதித் தராசு சாயக் கூடாது என்பதில் பொதுவானவர்கள் கவலையோடும், பொறுப்போடும், இப்படித் துணிவுடன் கருத்துகளைக் கூறுவது வர வேற்கத்தக்கது.
சட்ட வியாக்கியானம் செய்யும்பொழுது சொந்த விருப்பு வெறுப்பு, கருத்தியல் நிலைப்பாட்டுக்கு அப்பால் அத்தீர்ப்புகள் அமைவதுதான் அவசியமாகும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
12-2-2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *