இரா.மோகன்ராஜன்
கடந்த ஆண்டு இறுதித் திங்களில் சமூக ஊடகங்களில் தமிழர் தலைவர் பெரியாரைப் பன்றியாகச் சித்தரித்து ஒரு கேலிச் சித்திரம் வெளியாகியது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று அந்தக் கேலிச் சித்திரத்தின் பின்னிருந்தவர்களுக்கு உறுதியாக ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும். மேலும், அந்தக் கேலிச் சித்திரம் குறித்த பெரியாரின் அணுகுமுறை எப்படி இருக்குமோ, அவ்வாறே பெரியாரியர்களின் வெளிப்பாடுகளும் அந்தச் சித்திரத்தை எதிர்கொள்வதில் இருந்தது மிகப் பெரிய ஆறுதலாகும்.
பெரியார் மீது செருப்பு வீசப்பட்டபோதே அந்த இன்னொரு செருப்பு இல்லாமல் வீசிய நபர் எப்படி நடந்து போகமுடியும் என்று வருத்தம் கலந்த எள்ளலுடன் பெரியார் அந்த நிகழ்வை எதிர்கொண்டதை வரலாறு சித்திரமாக்கியுள்ளது. இந்தப் பன்றி சித்திரம் பெரியாரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்து அது. தொடர்பான அவரது பேச்சும் எழுத்தும் தமிழருக்குச் சிறந்த ஒரு செய்தியைச் சொல்வதாக இருந்திருக்கும். நமது சிந்தனையை அவை தூண்டுவதாகவும் இருந்திருக்கும். அந்த வாய்ப்பைத் தற்போது பெரியாரியர்கள் சரியாகவே எதிர் கொண்டு வருகின்றனர்.
பெரியாரை இழிவாகச் சித்தரிக்க அவர்களுக்குப் பன்றி இன்றைக்குக் கிடைத்திருக்கிறது. பன்றி என்றைக்குமே தான் இழிவான பிறப்பு என்று சொன்னதில்லை. அது சேற்றில் புரளுவது குறித்துச் சிறிதும் கவலைபட்டுக் கொண்டதில்லை. அதன் உணவு குறித்தும் அதற்கு இழிவு இல்லாதபோது மனிதர்கள் அதுவும் இழி மனம் கொண்டவர்களுக்கே அப்படியான எண்ணம் தோன்றுகிறது. தோன்றும். பிறப்பில் இழிவோ, ஏற்றத் தாழ்வோ கூடாது என்று பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் உரத்துப் பேசிவந்தது. பன்றிகளுக்குமாகத்தான் இருக்க முடியும்.
சேறு இழிவு, மலம் இழிவு அதை உண்ணும் பன்றி இழிவு, அதை வளர்ப்பவர்கள் இழிவானவர்கள் என்று எண்ணும் மனநிலையிலிருந்தே பன்றி குறித்த இழிவான சித்திரமும் பெரியாரை அதனுடன் ஒப்பிடும் வன்மமும் தோன்றுகிறது. புனிதம் – அபுனிதம், சுத்தம் அசுத்தம் என்ற இவர்களது ஆன்மீக அரசியலிலிருந்தே. அவர்கள் எல்லாவற்றையும் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். பெரியாரையும், பன்றியையும் இழிவுபடுத்த முடிகிறது; சேற்றில்தான் நெல் விளைகிறது. இவர்கள் கடவுளுக்குப் படைக்கும்.தாமரை மலர்கள் மலர்கின்றன. ஏன் இவர்களே தன் மலத்தை வயிற்றில் சுமந்து திரிபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அதைத் தலையில் சுமப்பவர்கள் இவர்களுக்கு மனிதர்கள் இல்லை. அது பற்றிக் கவலைப்படுபவர்கள் மனிதர்கள் இல்லை. சொந்த மலம் இவர்களுக்குப் புனிதமானது. உயர் ஜாதியினர் சந்தனத்திற்கிணையானது. காஞ்சி பெரியவர் மலம் கழிப்பதே ஓர் ஆன்மீக நிகழ்வாக இருக்கிறது.. அது கடவுளின் மலம். புனித மலம். அதைச் சுமப்பவர்கள் மட்டுமே இழிவானவர்களாகிவிடுவதுதான் அரசியல் துயரம்.
தோட்டி என்றொரு ஜாதியும் அவனுக்கு இழிவும் தீண்டாமையும் எப்படி ஏற்பட்டது? மலம் எடுக்கும், தொழிலை, நாற்றமுள்ள தொழிலை அவன் ஏற்றுக் கொண்டதால் தான் இப்படியே கஷ்டமானதுமான, இழிவானதுமான வேலை செய்பவர்கள் எல்லாம். கீழ் ஜாதியாகவும், சுகமாகவும், மேன்மையாகவும் உள்ள வேலை செய்பவர்கள் மேல் ஜாதியாகவும் ஒரு வேலையும் செய்யாமல் ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்துக் கொண்டு மக்களை ஏறமாற்றிக் கொண்டு, வஞ்சித்துக் கொண்டு திரிகிறவர்கள் மகாமகா மேல் ஜாதியாகவும் ஏற்பட்டதற்கு விஞ்ஞான ஞானமின்மையே என்று பெரியார் சுட்டிக்காட்டுகிறார். இந்த இழிவைக் கடவுள் போக்க முடியாது. கடவுள் பெரியலான இந்த இழிவை மனித முயற்சியிலான விஞ்ஞானமே போக்க முடியும் என்கிறார் பெரியார்.
கடவுள் பெயரில் இவர்கள் மனிதர்களையும், விலங்குகளையும் இழிவுபடுத்துவதை அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சித்திரம் வரையத் தெரிந்தவர்கள். தமது இதயத்தையும், மூளையையும் மதக் குட்டையில் தேங்கவிட்டிருக்கிறார்கள் என்பதே இவர்கள் சித்திரம் சொல்லும் செய்தி. இவர்கள் பிரித்து வைத்திருக்கும் புனிதம் – அபுனிதம், சுத்தம் அசுத்தம் என்பன ஓர் மனநோயளியின் இயல்பினை ஒத்தது. பன்றி சுவாசிக்கும் காற்றைத்தான் இவர்களும் சுவாசித்தாக வேண்டும். அது நிரப்பி. வெளியேற்றிய காற்றைத்தான் இவர்கள் தமது நுரையீரலில் உயிர்வாழ நிரப்பிக் கொள்கிறார்கள்.
இது பற்றி அவர்கள் யோசிக்கத் தொடங்கினால் இவர்களது புனிதம் கேள்விக்குள்ளாகிவிடும். அப்படி கேள்வி கேட்கக் கூடாது என்றுதான் மதம் என்கிற பெயரில் அரசியல் ஆன்மீகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
சொல்லப்போனால் பெரியார், பன்றியின் இழிவையும், அதை வளர்ப்பவர் இழிவையும் சேர்த்தே போக்குவதற்குப் பாடுபட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். தீண்டக்கூடியவகள் புனிதர்களாகவும், தீண்டப்படாதவர் ஆகிப்போனதற்கும் பன்றி காரணமாக இருக்கவில்லை. மனிதர்களும் அவர்களுடைய மதமும், ஜாதியுமே காரணம் என்பதைப் பெரியார் அழுத்தமாகவே பேசிச் சென்றிருக்கிறார்.
பறையன், சக்கிலி முதலியோரை ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறார்கள் ‘என்பதைச் சற்றுக் கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாக இருக்கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன் மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் உணவிற்கு மாட்டு மாமிசம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் கள் உற்பத்தி செய்கிறார்கள் என்றுதான் குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகின்றன. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும் அழுக்கான ‘துணிகளுடனும் துர்வாடை யுடனும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள்.
அவர்களை நாம் தாகத்திற்கோ தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ வேட்டி துவைக்கவோ வழியெங்கே? நாம் உபபேயாகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார்களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக் குணமா நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேட்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாகக் காணப்படமாட்டோமா? அவர்கள். குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம். சவுகரியம் செய்து கொடுத்துவிட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? அதனால் நாம்தான் அவர்கள் இழிநிலைக்குக் காரணமாயிருக்கிறோம்.
மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாதவனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாத்தகாதார், பார்க்கத்தகாதார் என்று சொல்லக் கூடுமா? அப்படியே சொல்வதானாலும் மாடு தின்பது என்ன ஆடு கோழி தின்பதைவிட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது?
செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜந்துவை உயிருடன் வதைத்துக் கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத் கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனிதப் பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்கிறோமா?
(‘குடிஅரசு’ இதழ்கள் – 07, 21, 28-06-1925).
இழிவு மனதிலிருந்து பிறக்கும் இழிவே இதற்குக் காரணம், தமது பிறப்பும், மதமும், ஜாதியுமே உயர்ந்தது, மாறாதது என்ற வக்கிரப் போக்கிலிருந்தே இவை எழுவதை பெரியார் தமது கேள்வியின் வழி முன்வைப்பவராக இருக்கிறார். ஆக மனிதனோ, விலங்குகளோ அதன் செயற்பாடு காரணமாக இழிவுபடுத்தப்படுவதை பெரியார் எதிர்ப்பவராக இருக்கிறார். இருந்திருக்கிறார். இழிவுபடுத்த வேண்டும் என்ற மனம், அதனுடன் இழிவான ஒன்றாகக் கருதும் ஒன்றைப் பொருத்தி இழிவுபடுத்த வேண்டும் என்கிற இழிகுணத்திலிருந்து பெரியாரைச் சிறுமைப்படுத்தும் நோக்கம் எழுகிறது. இது அப்படி எழும் மனதின் சிக்கல், மனநோய்” அன்றி வேறில்லை. இந்த நோய் நேரடியாக புனிதம் அபுனிதம் என கட்டமைக்கும் மதத்திலிருந்து பிறக்கிறது. அதை தேக்கி நிற்கும் மண்டையிலிருந்து நாற்றமெனச் சுரந்து இப்படியான சித்திரத்தை வரைந்தெடுக்கிறது. பெரியாரை இழிவுபடுத்துவதாக, பன்றியை இழிவுபடுத்துவதாகத் தமது இழி மனதையும் இழி நோக்கத்தையும், மேலாகத் தம்மைத் தாமே இழிவுபடுத்திக் கொண்டுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பொதுவாகவே மதங்கள் சில விலங்குகளைப் புனிதமாகவும், சில விலங்குகளை அபுனிதமாகவும் கருதுகின்றன. இதில் எந்த ஒரு மதமும் புனிதத்திற்கு உள்பட்டதல்ல. பசு இந்து மதத்தின் ஆகப் புனிதமான விலங்கு அல்ல, கடவுள். பசுபுனிதம் என்ற ஒரு சொல்லே ஆங்கிலத்தில் புழங்குகிறது.. பசு புனிதம் என்றால் அதற்கு அப்பால் எது, குறித்தும் கேள்வி எழுப்ப முடியாது. கூடாது. மதங்களும் அப்படித்தான். பன்றி இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் வெறுக்கத்தக்க விலங்காகவே இருக்கிறது. புனிதம் – புனித மற்றவைகளில் இந்த விலங்குகளும் மதங்களுக்குள் வைத்துப் பார்க்கப்படுவதன் காரணமாக அவற்றைச் சாப்பிடுவது அல்லது அதனுடன் புழங்குவது என்பதும் புனிதமற்றதாகிவிடுகிறது. மேலும் ஒரு மதத்திற்குப் புனிதமானது பிற மதத்திற்குப் புனிதமானது என்றும் சொல்வதற்கில்லை. இயற்கையின் படைப்பில் யாதொரு விலங்கும், அழகு, புனிதம்தான். அவற்றில் பேதம் பார்ப்பது தவறு என்று எந்த மதமும், அதன் குருபீடங்களும், புனித நூல்களும் குறிப்பிடுவதில்லை. மாறாக அப்படியான விலங்குகள் இழிவானவை, அவற்றை வீட்டில் வைத்திருப்பதே மதத்திற்கும் அதன் கோட்பாட்டிற்கும் எதிரானது என்ற முடிவிற்கே வருகின்றன.
மதத்திற்கு அப்பாலான மனிதர்கள் பறவைகளையும், விலங்குகளையும், ஏன் சக மனிதர்களையும் நேசிப்பதற்கு மனதளவிலோ, செயலளவிலோ எந்தவிதத் தடையுமிருப்பதில்லை. புனிதம், அபுனிதம் என்ற வரையரைக்குள் மதமே சக மனிதனையும், விலங்குகளையும் கீழாகவும், இழிவாகவும் பார்க்கச் செய்கிறது. “மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கமாக சமத்துவத்துடன் சாந்தியாய் இருக்க கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா என்று கேட்கிறார்கள். அப்படிப்பட்ட உணர்ச்சியானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை சமத்துவம் சாந்தி அளிக்கிறதா என்பதையாவது கவனித்திருக்கிறார்களா?” என்று கேட்கிறார் பெரியார்.
ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒருவரையாவது கடவுள் உணர்ச்சியின் அவசியத்திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை ஒற்றுமை அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமோ? மக்களுக்கு அக்கிரமம் செய்யவே தைரியம் தருகிறயேல்லாமல் யோக்கியனாக, அன்பானவனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா என்று கேள்வியெழுப்புகிறார் பெரியார். இது குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தை வரைந்த மூளைக்குச் “சொந்தக்காரருக்கும் பொருந்தி வரக்கூடியதே.’ முதலில் பெரியார் மீதான கோபம். அதுவே பன்றியுடன் ஒப்பிடச் செய்கிறது.
ஏன் பெரியார் மீது கோபம். கடவுள் இல்லையென்கிறார். யாருடையக் கடவுளை? சித்திரத்தை வரைந்த அந்த மூளைக்குச் சொந்தமானவரின் கடவுளை. கடவுள் இல்லை என்று தள்ளாத வயதிலும் மூத்திரச் சட்டியைச் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றி முழங்கிவந்த அந்த முதியவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று அந்த பன்றி வரைந்த சித்திர மூளைக்குத் தோன்றவில்லை. தோன்றாது. எதையும் கேள்வி கேட்காதே என்கிறது இந்து மதம். அதனால்’ கேள்வி கேட்பது என்பதே புனிதத்திற்கெதிரானது. கடவுளுக்கு எதிரானது. எனவே கேள்வி எழுப்பும் இயல்பை அந்த மூளை இயல்பாகவே இழந்துவிட்டது.
கடவுள் கருணை, அன்பு, ஒழுக்கம் மிக்கவரென்றால் கடவுளை நம்பும் ஒருவர் எப்படி எதிர் கொண்டிருக்க முடியும்? அதே அன்பு, கருணை, ஒழுக்கத்துடன்தான் ‘எதிர் கொள்ள முடியும். எதிர் கொண்டிருக்க முடியும். ஆனால் கடவுளுக்கு எதிரான உணர்வுகளான வெறுப்பு, கோபம், கயமைத்தனங்களுடன் பெரியாரை எதிர் கொண்டிருக்கவே முடியாது. கூடாது.
மெய்யான கடவுள் நம்பிக்கை, மெய்யான ஆன்மிகம் என்றால் அதுவாகத்தான் இருக்க முடியம். அப்படித்தான் அணுக வேண்டியிருக்கும். ஆனால் பெரியாரை இழிவுபடுத்த வேண்டும் என்ற மனம் கடவுளின் மனமாக எப்படி இருக்க முடியும்?
மனித வாழ்வுக்கு நன்மையும், அவசியமுமான காரியங்கள், குணங்கள் எவை எவையோ . அவைகளைத்தான் கடவுள் என பெரியோர்கள் சொன்னார்கள் என்று பெரியார் கடவுளுக்கான மெய் பொருளை சுட்டும் அதே வேளை, அந்தக் கடவுள் உணர்ச்சியைக் கடவுளுக்கும் மனிதருக்கும் தொடர்பில்லாமல் செய்துவிட்டார்கள் என்பதுடன், நமது கடவுளைக் கண்ட பெரியவர்கள் என்பவர்கள், உலகத்திலேயே கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை, பொய் முதலியன செய்பவர்களை. இந்த மாதிரியான ஒரு கடவுள் உணர்ச்சியைத் தங்களின் மேல் கண்ட காரியத்துக்கு உபயோகித்துக் கொள்ளும்படிச் செய்துவிட்டார்கள். கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ணிய ஸ்தலயாத்திரையைப் புண்ணிய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்திலேயே மன்னிப்பும், பாப விமோசனமும் கிடைக்கும். :. ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக அன்பானவனாக நடக்க கட்டயாப்படுத்துகிறதா? என பெரியார் கேட்கிறார்.
இங்கு கடவுள் பெயரில் பெரியாரைப் பன்றியாக. சித்தரித்த இழிகேலி மனக்காரருக்கும் அதை எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பெரியாரியருக்குமான பண்பு இடைவெளியைப். பெரியாரின் மேற்கண்ட கூற்றை வைத்துப் புரிந்து கொள்ள முடியும். அந்தச் சித்திரக்காரரின் இழிவான செயலைக் கடவுள் மன்னிக்கிறாரோ இல்லையோ உறுதியாக பெரியார் மன்னிக்கவே செய்வார். சிக்கல் அதுவல்ல. கடவுள் பெயரைச் சொல்லி ஆன்மிக அரசியல் செய்பவர்கள் கடவுளை எப்போது கடவுளாகப் பார்க்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
கடவுள் எதையும் சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் கடவுளின் பெயரால் இவர்கள் இவர்களது செயலை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். கடவுள் பெயரால் பிற மதத்தினரை இழிவு, படுத்துவதில் தொடங்கி எதிரி மதம். அடையாளம் காணப்பட்டவர்களின் பெண்களை ‘வன்புணர்வதில் தொடங்கி குழந்தை, முதியோரை படுகொலை செய்வது வரை நீதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. பெரியார் கடவுளை இழிவு படுத்துகிறார். தாம் சார்ந்த மதத்தினை இழிவுபடுத்துகிறார் என்பதற்காகப் பன்றியாகச் சித்தரிக்கப்படுகிறார். இதுவும் வன்முறையின் பகுதியே, சகிப்பின்மையின் பகுதியே.
“நான் எந்த மதக்காரனுக்கும் ஏஜெண்டு அல்ல, அல்லது எந்த மதக்காரனுக்கும் நான் அடிமையுமல்ல, அன்பு அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன், மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ, ஒரு சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனசாட்சிக்கு கட்டுப்பட்டதா அல்லது ஒரு மனிதனின் மனசாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்திற்காக மனிதனா என்பவைகளைத் தயவு செய்து யோசித்துப்பாருங்கள்.”
(‘குடிஅரசு’ – 11.9.1927).
பெரியாரைப் பன்றியாக்கியவர்கள் மதத்திற்குக் கட்டுப்பட்ட மனிதர்கள் அன்றி வேறில்லை. அவர்களது மூளையை மதவெறி முழுமையாக அடைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களது மூளையில் கேள்விகள் எழும்புவதில்லை. அதனால்தாம் அவர்களை நோக்கிப் பெரியார் பேசுகிறார். அவர்களுக்காகப் பரிதாபப்பட மட்டுமே முடியும். பெரியாரும் அதைத்தான் செய்தார். தன்னை எதிரியாக நினைத்து அவருக்கு எதிராக வினைபுரிந்தவர்களை அப்படித்தான் எதிர்கொண்டார்.
“தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதியிருந்தது. “இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோசப்பட்டிருந்தேனேயானால் ராமசாமிக் கழுதை செத்துப்போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, ராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால் ராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும். ஆகவே, அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், இவற்றிலிருந்து ஓர் அளவுக்கு நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன்!”
(‘குடிஅரசு’ – 11.10.1931).
தன்னைத் தூற்றும் வார்த்தைகளின் பொருள் அறிந்து, அதன் பயன் அறிந்து பெரியார் பேசுகிறார். தூற்றும் வார்த்தைகளைக் கூட அது சமூகத்திற்கு எப்படியான நன்மையைத் தரும் என்பதிலிருந்து தன்னைப் பெரியார் வெளிப்படுத்துபவராக இருக்கிறார். திருவாளர் பன்றிச் சித்திரக்காரர் தன்னையறியாமல் சமூகத்தூய்மையின் ஓர் அங்கமாகப் சித்தரித்திருப்பதாகப் பெரியாரைப் பன்றியாகச் பெரியாரியர்கள், சமூகவியலாளர்கள் எடுத்துக் கொள்ள முடியும். பெரியாரின் கூற்று அப்படித்தான் சொல்கிறது. இது பெரியார் சொல்கிறபடி பெரியாருக்கு வெற்றி. பன்றியாகச் சித்தரித்த அந்தச் சித்திரக்காரருக்கு அவமானகரமான தோல்வி என்பதைத் தவிர வேறு எப்படி சொல்ல முடியும்?
“ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும், எந்தப் படைப்பும், எந்தக் கலையும், எந்த ஓவியமும், எந்த இசையும், எந்த வழிபாடும், எந்தப் பண்பாடும், எந்தப் பெருமிதமும், எந்த வாழ்க்கை முறையும் எனக்கு வேண்டாம்!” என்ற பெரியாரின் பிரகடனம். முக்கியமானது. அந்த வன்மம் நிறைந்த பன்றிச் சித்திரத்துடன், சித்திரக்காரருடன் வைத்துப் பேசவேண்டிய ஒன்று.
“பார்ப்பனர்கள் இந்தப் பிறவியில் விவசாயம் செய்தால் அடுத்த பிறவியில் பன்றிகளாகப் பிறப்பார்கள் என்று ஒரு முறை ராஜாஜி சொன்னதற்குப் பெரியாரின் எதிர்வினை எப்படியிருந்தது பாருங்கள். “அப்படின்னா இந்த பிறவியில் பன்றிகளா உள்ளது எல்லாம் போன பிறவியில் விவசாயம் செய்த பார்ப்பனர்களா?”
பெரியாரை இழிவுபடுத்தப் போய் கடைசியில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தியிருக்கும் சித்திரம் பற்றிச் சொல்ல என்ன இருக்க முடியும்?
– நன்றி: “காக்கைச் சிறகினிலே” – பிப்ரவரி 2024