கவிஞர் கலி.பூங்குன்றன்
கடந்த மூன்றாம் தேதி கடலூரில் நடைபெற்ற, திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல – இந்தியத் துணைக் கண்டத்திற்கே வெளிச்சம் தரும் விவேகமிகுந்த தீர்மானமாகும்.
தீர்மானம் எண்: 3
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் –
நமது கடமையும்!
“கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்றுவரும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி- ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும், மதச்சார்பின்மை, சமூகநீதி, சோசலிசம் என்ற அடிக்கட்டுமானங்களைத் தகர்க்கும் வகையிலும், தன்னாட்சி நிறுவனங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து சர்வாதிகாரப் போக்கிலும், ஜாதி, மதக் கலவரங்களைத் திட்டமிட்டுத் தூண்டும் வகையிலும், விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக பிற்போக்குப் பாதையில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதிலும், மாநில சுயாட்சியின் அடிவேரை வெட்டி வீழ்த்தி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைச் செயல்படுத்தும் வகை யிலும், எதிலும் வெளிப்படைத் தன்மையற்ற வகையி லும், பொதுத்துறைகளைத் தனியார்வசம் தாரைவார்ப் பதில் தனிக் கவனம் செலுத்தும் போக்கும், ஏழைகளை வஞ்சித்து, அதேநேரத்தில், பெருமுதலாளிகளுக்கு வாராக் கடன் என்ற பெயரில் பெருந்தொகைகளைத் தள்ளுபடி செய்து அவர்களுக்கு வெண்சாமரம் வீசி அடைகாப்பதும், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு முதலியவற்றில் பெரும் வீழ்ச்சியை நோக்கி மேலும் மேலும் வேகம் காட்டும் தன்மையிலும், கடும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகும் கொடுமையிலுமாக நடைபெற்றுவரும் மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய ஆட்சியை நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்கும் ஒரே மார்க்கம்தான் – மக்கள் நல்வாழ்வுக்கும், சுய உரிமைக்கும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும், சமத்துவத்துக்கும், மக்கள் நல்லிணக்கத்துக்கும் உகந்தது ஆகையால், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ‘‘இந்தியா கூட்டணிக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தரும்” ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு வாக்காளர்ப் பெருமக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது – வலியுறுத்துகிறது.
மக்கள் மத்தியில் இந்த வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்தல் களப் பணிகளை ஆற்றி, இருள் சூழ்ந்த ஆட்சி அதிகார நெடிவீசும், சமூகநீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரான பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவதையே முக்கிய ஒரே குறிக்கோளாகக் கொண்டு, திட்டமிட்ட வகையில் பணியாற்றுவது திரா விடர் கழகத்தின் முக்கிய கடமை என்பதைத் தோழர்களுக்கு இச்செயற்குழு வழிகாட்டி வற்புறுத்துகிறது – முக்கியமான கட்டளைத் தீர்மானமாகவும் ஒருமனதாக நிறைவேற்றுகிறது!”
இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம் மிக முக்கியமானது. 10 ஆண்டுக் கால மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி (NDA) என்பது – ஓர் ஆட்சியேயல்ல – காட்டாட்சியே!
ஏதோ தனிப்பட்ட எரிச்சலால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமல்ல – தீர்க்கமாக சிந்தித்து உருவாக்கப்பட்ட வழிகாட்டும் தீர்மானமாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள உயிருக்கு நிகரான நோக்கங்கள் எல்லாம் ‘புல்டோசர்’ கொண்டு அழிக்கப்பட்டுள்ளன மோடி ஆட்சியில்!
பெயர்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி. “பேசாப் பெண்ணுக்குத் தேன்மொழி” என்று பெயர் வைத்ததுபோல, “காலிழந்தவனுக்கு நடராஜன்” என்று பெயர் சூட்டியதுபோல, “மொட்டையனுக்கு முடியரசன்” என்று நாமகரணம் சூட்டியது போன்றதுதான் நடைபெறும் ஒன்றிய அரசு.
ஜனநாயக நாடாம் – டில்லி தலைநகரில் இருந்துகொண்டே நாடாளுமன்றம் நடந்துகொண்டு இருக்கும்போது, நாடாளுமன்றம் பக்கம் தலைவைத்துப் படுக்காத பிரதமர் (எத்தனை நாள்கள் கலந்து கொண்டார் என்று கணக்குச் சொல்லட்டும் பார்க்கலாம்!) செய்தியாளர்களையே சந்திக்காத பிரதமர் என்ற ‘சாதனை’க்குரியவர் ஒருவர் உண்டென்றால் அவர்தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி, அவசர அவசரமாக பிரச்சினைக்குரிய மசோதாக்களை நிறைவேற்றும் விபரீதங்களை என்ன சொல்ல?
தன்னாட்சி நிறுவனங்களை எல்லாம் தனதாட்சி – கட்சி அமைப்புகளாக மாற்றி சட்டைப் பைக்குள் திணித்துக் கொள்வதற்குப் பெயர்தான் இங்கு ‘சோ கால்டு’ ஜனநாயகம்.
குடியரசு நாள் விளம்பரத்தில், அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘செக்குலர்’, ‘சோஷலிஸ்ட்’ என்ற சொற்களைத் தூக்கி எறிந்து விளம்பரம் கொடுக்கும் விஷமத்தை என்ன பெயர் கொண்டு அழைப்பது?
ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை வைத்துக் கொண்டிருந்த பி.ஜே.பி. – மேகாலயாவில் ஆட்சியைப் பிடித்தது எப்படி?
காங்கிரஸ் ஆட்சியிலிருந்த மத்தியப் பிரதேசத்தையும், கருநாடகாவையும் தனதாட்சியாக மாற்றிய தந்திரத்திற்குப் பெயர் “தார்மீகம்” என்கிறார்கள்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, அமைச்சர் பதவி ஆசை காட்டி அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அபகரிப்பது – இதுதான் பா.ஜ.க. நடத்தும் பத்தரை மாற்று ஜனநாயகம்!
இதோ ஓர் ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டு!
2021 ஜூனில் மகாராட்டிராவைச் சேர்ந்த சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் சன்னாயிக், அப்போது முதல் அமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதம் என்ன?
“நீங்கள் பி.ஜே.பி.யினரோடு முரண்பாடுகளை விட்டு விடுங்கள். இனிமேல் அவர்களுக்கு எதிரான அரசியல் செய்ய வேண்டாம். எனக்கு ஈ.டி.சம்மன் வந்திருக்கு. 175 கோடி ரூபாய் ஊழல் என்கிற வழக்கிற்காக எனக்குச் சம்மன் வந்துள்ளது. இனி பி.ஜே.பிக்கு எதிரான மனநிலையில் பேசுவதை நாம் விட்டுவிடுவது நல்லது” என்று எழுதினாரே!
அதனைத் தொடர்ந்து மகாராட்டிராவில் நடந்தது என்ன? சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஜே.பிக்குத் தாவி உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து கட்சி மாறிகள் அமைச்சர்களான ஆபாசமான அரசியல் அவலத்தை எழுதிடவும் கை கூசுகிறதே!
20க்கும் மேற்பட்ட சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஈ.டி. அனுப்பிய சம்மன் என்ன ஆயிற்று? சவக்குழிக்குப் போனதா? அவர்கள் மீது ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை? இதற்குப் பெயர்தான் பி.ஜே.பி. பிராண்ட் ஜனநாயகம்!
மதச்சார்பின்மையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 450 ஆண்டுக் கால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கில் கூடி அடித்து நொறுக்கி விட்டு, அதே இடத்தில் ரூ.1800 கோடி செலவில் ராமன் கோயில் கட்டப்படுவதும், அதில் மதச்சார்பற்ற அரசின் பிரதமர் பிரதம பூசாரி போல நடந்து கொள்வதும் எந்த வகை மதச்சார்பின்மை?
‘செக்குலர்’ என்ற ஆங்கில சொல்லுக்குப் பொருள் தெரியாவிட்டால் அகராதியைப் பார்க்கக் கூடவா தெரியாது.
அரசுக்கும் – மதத்துக்கும் தொடர்பில்லை என்பதுதானே அதன் பொருள்! சங்கிகள் தங்களுக்கென்று தனி அக்ரகார அகராதியை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் போலும்!
தேர்தல் கூட்டத்தில் மதத்தைச் சம்பந்தப்படுத்திப் பிரச்சாரம் செய்ததற்காக, அப்படி வெற்றி பெற்றவர் தேர்தலே செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்பு இருப்பது எல்லாம் இந்தச் சங்கிகளுக்குத் தெரியாதா?
பொருளாதார நிலையைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை.
ஒரு நாள் இரவில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த “மகா மகா பொருளாதார நிபுணர்’ நமது பிரதமர் நரேந்திர மோடிஜி! (ரிசர்வ் வங்கி ஆளுநருக்கே கூடத் தெரியாது).
அதனால் மக்கள் பட்ட அவதி கொஞ்சமா? நஞ்சமா? வங்கிகளில் போட்ட தங்கள் சொந்த பணத்தை வாங்குவதற்காக, பாமர மக்கள் அன்றாட வேலையைக் கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு, கால் கடுக்கக் கடுக்க நாள் முழுவதும் நின்ற பரிதாபத்தை என்னவென்று சொல்ல! எத்தனைப் பேர் உயிரை விட நேர்ந்தது?
எத்தனை சிறுகுறு தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன? எத்தனை இலட்சம் தோழர்கள் வேலைவாய்ப்பை இழந்து, அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கையைப் பிசைந்து நின்ற நிலையை மனம் உள்ளவர்கள் இன்று நினைத்தாலும் இரத்தக் கண்ணீர் வடிப்பார்களே!
அந்தத் திடீர் அறிவிப்பு முற்றிலும் தோல்வி அடையவில்லையா? இதுதான் மோடி அரசின் பொருளாதார ஞானத்தின் இலட்சணம்!
2014 – திரு. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக வந்த காலகட்டத்தில் இந்தியாவின் கடன் தொகை ரூ.55 லட்சம் கோடி. 2023 செப்டம்பர் மாதம் வரை இந்தியாவின் கடனோ ரூபாய் 205 லட்சம் கோடி.
கேட்டால் இப்படிக் கூடச் சொல்லுவார்கள். “ரூபாய் 55 லட்சம் கோடியிலிருந்து ரூ.205 லட்சம் கோடி என்பது வளர்ச்சிதானே” என்று சொன்னாலும் சொல்வார்கள்!
பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது ஒவ்வொரு ரேசன் அட்டை மீதும் ரூ.1.86 லட்சம் கடன்; இப்பொழுது என்ன தெரியுமா? ரூ.6.37 லட்சம் கடன்! இலஞ்ச ஊழலோ 7.5 லட்சம் கோடி என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியுள்ளதே! பேச்சு மூச்சைக் காணோமே!
2021 – கணக்குப்படி உலக அளவில் இந்தியாவில் ஏழைகள் ஏழரைக் கோடி. மனித வளர்ச்சிக் குறியீட்டுப் பட்டியலில் 191 நாடுகளில் இந்தியாவுக்கான இடம் 131. இதுதான் ஏழைத் தாயின் வயிற்றில் பிறந்ததாகக் கூறும் மோடி ஆட்சியின் சாதனையோ சாதனை!
பிரதமர் மோடி பேசுவதைப் பாருங்கள்! 56 அங்குல மார்பளவு உள்ளவரல்லவா? அந்த முறையில் நீட்டி முழங்குகிறார் (Body Language). “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற குறள்தான் நினைவிற்கு வருகிறது.
சமூகநீதியை எடுத்துக்கொண்டால் அதற்குச் சாவு மணி அடிப்பது ஒன்றே பி.ஜே.பி. ஒன்றிய அரசின் ஒரே குறிக்கோள்!
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்களுக்குத் தான் இடஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டம்!
பொருளாதார அளவுகோல் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் எல்லாம் செல்லாது என்று உச்சநீதிமன்றமே கறாராகக் கூறிய நிலையில் – இப்பொழுது மட்டும் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு (EWS) என்பது கொம்பு முளைத்துக் கூத்தாடுகிறதே எப்படி?
எத்தனையோ சட்டங்கள் ஊறுகாய் ஜாடியில் குறட்டை விட்டுக் கொண்டிருக்க, இந்தச் சட்டம் மட்டும் ராக்கெட் வேகத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, ஒரு சில நாள்களிலேயே குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்று, செயல்பாட்டுக்கும் வந்துவிட்டதே – அது எப்படி?
இதைத்தான் 1925ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் எச்சரித்தார். “சுதந்திர இந்தியாவில் டெமாக்கிரசி இருக்காது – மாறாக ‘பிராமினோகிரசி’ தான் இருக்கும்” என்று தொலைநோக்கோடு சொன்னாரே – பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அதை இதோ நம் கண் முன்னரே காணுகின்றோமே!
இந்தச் சட்டத்தின் பலன் யார் வயிற்றில் அறுத்துக் கட்டப்பட்டுள்ளது?
இதோ ஆதாரம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எழுத்தர் தேர்வின் முடிவு பேசுகிறது. (26.7.2020)
கட் ஆஃப் மார்க் விவரம்:
தாழ்த்தப்பட்டோர் 61.25%
பழங்குடியினர் 53.75%
பிற்படுத்தப்பட்டோர் 61.25%
பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினர் 28.5%
யார் இந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினர்?
நாள் ஒன்றுக்கு ரூ.2,200 சம்பாதித்தால் பார்ப்பனர்கள் ஏழைகளாம். வர்க்கத்திலும் வர்ண தர்மமா?
புரிகிறதா பூணூல்களின் சூழ்ச்சிப் பொறி?
இந்து மதவாதக் கண்ணோட்டத்தில்தான் எதுவும் – எங்கும் – இங்கு. குடியுரிமைச் சட்டம் ஒன்று போதாதா? வெளிநாட்டில் இருந்து அகதிகளாக இந்தியா வந்த இந்துக்களுக்குக் குடியுரிமை உண்டு. ஆனால், சிறுபான்மையினருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் அந்த உரிமை கிடையாது.
பில்கிஸ் பானு தொடர்பான வழக்கு – தீர்ப்பு – இதில் பி.ஜே.பி. அரசு நடந்துகொண்ட முறை உலக நாடுகள் மத்தியில் பிண நாற்றமாக வீசுகிறதே!
எவ்வளவோ எழுதலாம்!
கடலூர் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம் இந்தியாவுக்கே வழிகாட்டும் குரல் கொடுத்திருக்கிறது.
2024 தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்பதுதான் முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!!