‘‘தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன்’’ என்பதுதான் மிகவும் முக்கியம்!
அன்றைக்கும் மாணவன், இன்றைக்கும் மாணவன், நாளைக்கும் மாணவன்!
‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் – கடமையும்!” திராவிட மாணவர் கழகத்தினர் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, பிப்.5 என்னைப் பொறுத்தவரையில், நான் என்னை ஓர் ஆசிரியர் என்று கருதிக் கொள்வதைவிட, ஒரு மாணவன் என்று கருதுகிறேன். அதுவும் எந்த மாணவன் என்று கருதுகிறேன் என்று சொன்னால், ‘‘தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன்’’ என்பதுதான் மிகவும் முக்கியம். அன்றைக்கும் மாணவன், இன் றைக்கும் மாணவன், நாளைக்கும் மாணவன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் – கடமையும்!” -திராவிட மாணவர் கழகத்தின் சிறப்புக் கருத்தரங்கம்
கடந்த 1-2-2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும்- கடமையும்” -திராவிட மாணவர் கழகத்தினர் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரணி – ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டு!
மிகுந்த எழுச்சியோடு, தேவையான நேரத்தில், சரியான ஒருங்கிணைப்போடு, நல்ல அளவிற்கு ஒருங் கிணைக்கப்பட்ட மாணவர் அமைப்பாக, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இடதுசாரி அமைப்பு, முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆகிய அனைவரும், காங்கிரஸ் உள்பட என நினைக்கிறேன் – முற்போக்குச் சிந்தனையோடு புதிய தேசிய கல்விக் கொள்கை, நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து யார் யாரெல்லாம் மிகப்பெரிய பேரணி – ஆர்ப்பாட்டமாக நடத்திய அத்துணை அமைப்புகளுக்கும், அதில் பங்கேற்றவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு முடிவல்ல – தொடக்கம். அதனைச் சிறப்பாக, தமிழ்நாட்டிலே இளைஞர்களுக்கு வழிகாட்டி யாக இன்றைக்குப் பெரியார் கொள்கையை நிலை நிறுத்தக்கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய அமைச்சர் உதயநிதி அவர்கள், அதேபோல், கல்வி அமைச்சர் ஆகியோர் முன்னின்று நடத்திய அந்தப் பேரணியை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
ஒரு நல்ல எழுச்சியை
தலைநகரத்தில் உருவாக்கி இருக்கிறீர்கள்!
எல்லாக் கட்சிக் கொடிகளும் இருந்தன; திராவிடர் கழகக் கொடிகளும் சிறப்பாக இருந்தன. அவற்றையெல்லாம் பார்த்தேன் – ஒரு நல்ல எழுச் சியை தலைநகரத்தில் உருவாக்கி இருக்கிறீர்கள்.
இன்றைய தினம், வரவு – செலவுத் திட்டம் நாடாளு மன்றத்தில் இடைக்கால பட்ஜெட் என்று அறிவித்த காரணத்தினாலோ என்னவோ, இன்று நடைபெற்ற பேரணி – ஆர்ப்பாட்டம் ஊடகங்களில் உரிய இடத்தைப் பெறவில்லை. ஆனாலும், அதற்கடுத்து, மிகப்பெரிய அளவிற்கு ஒளிபரப்பினார்கள்.
விளம்பர வெளிச்சம் நமக்கு இருக்கிறதா, இல்லையா என்பதைப்பற்றி நாம் எப்பொழுதுமே, நம்மைப் பொறுத்தவரையில் கவலைப்படுவதில்லை.
நிறைய இளைஞர்கள் பல ஊர்களிலிருந்து வந் திருக் கின்றீர்கள். அவர்களை அழைத்து வந்த- ஒத்துழைத்த கழகத் தோழர்களுக்குப் பாராட்டினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களைப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது
கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் சொல்லி யதைப்போல, மாலை நேரத்தில், இளைஞர்களுடைய நேரம் ஏன் வீணாகவேண்டும் என்பதினால், நம்முடைய கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், செந்தூர்பாண்டியன் ஆகியோர் எல்லாம் சேர்ந்து, காலையில் பேரணி – ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் திராவிடர் கழக இளைஞரணியினர் பங்கேற்கும் கருத்தரங்கை மாலையில் நடத்தலாம் என்று முடிவெடுத்ததின் காரணமாக, இந்தக் கருத்தரங்கில் நீங்கள் எல்லோரும் சிறப்பாக வந்திருக்கின்றீர்கள். உங்களைப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது.
மாணவப் பருவம்தான்
நமக்குக் கிடைக்க முடியாத பருவம்!
இளைஞர்களுடைய, மாணவர்களுடைய பங்கைப் பற்றி இங்கே சொன்னார்கள். மாணவப் பருவம்தான் நமக்குக் கிடைக்க முடியாத பருவம்.
இளைஞர்களாக இருப்பதுகூட – அது வாய்ப்பு! ஏனென்றால், இளைஞர்கள் என்பவர்களை வெறும் உருவத்தை வைத்து மட்டும் பார்ப்பதில்லை பெரியார் அய்யா அவர்களுடைய வரையறையில்.
தந்தை பெரியாரின் பார்வையில்
இளைஞர்களுக்கான வரையறை!
‘‘நான் இளைஞர் என்றோ, வாலிபர் என்றோ ஒருவரைக் கருதுவது, அவருடைய வயதை வைத்தல்ல; அவருடைய செயலை வைத்துத்தான் நான் முடி வெடுக்கிறேன்” என்று அய்யா சொன்னார்.
அதை இன்னும் கொஞ்சம் சிறப்பாக, தூய்மையாக்கிக் கொண்டு வேகப்படுத்தவேண்டும் என்று சொன்னால், மாணவப் பருவம்தான்.
மாணவர்கள் என்று சொல்லும்பொழுது, கற்க வேண்டியது; அதன்படி நிற்கவேண்டியது; இரண்டுமே மிகவும் முக்கியம்.
‘‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!” என்பதுதான்.
ஆகவே, கற்றது – நாம் எல்லோரும் பெரியாருடைய மாணவர்கள். முதல் மாணவனாக இருக்கிறோமா, கடைசி மாணவனாக இருக்கிறோமா என்பது எனக்கு முக்கியமல்ல – வரிசையில்!
வாழ்நாள் முழுவதும் எனக்கு இருக்கின்ற பெருமை யெல்லாம், மகிழ்ச்சியெல்லாம் என்னவென்றால், என் னுடைய அறிமுகமே அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு ‘ஆசிரியர்’ என்று, ‘விடுதலை ஆசிரியர்’ என்பதை மனதில் வைத்துக் கொண்டு, அந்த வார்த்தையை உருவாக்கினார்கள்; அய்யா அவர்கள் ‘ஆசிரியர்’ என்று அழைத்தார்; அன்றையிலிருந்து எல்லோரும் ‘‘ஆசிரியர், ஆசிரியர்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தார்கள்.
‘‘தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன்!’’
ஆனால், என்னைப் பொறுத்தவரையில், நான் என்னை ஓர் ஆசிரியர் என்று கருதிக் கொள் வதைவிட, ஒரு மாணவன் என்று கருதுகிறேன். அதுவும் எந்த மாணவன் என்று கருதுகிறேன் என்று சொன்னால், ‘‘தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன்” என்பதுதான் மிகவும் முக்கியம்.
அன்றைக்கும் மாணவன், இன்றைக்கும் மாணவன், நாளைக்கும் மாணவன்.
நீங்கள் எல்லோருமே அப்படி இருந்து கற்கவேண் டியவர்கள் – நிற்கவேண்டியவர்கள். அதன்மூலமாக சமூகத்திற்குப் பயன் ஏற்படும்.
சமூகத்திற்கு ஏற்படும் பயன் – நமக்கு ஏற்படுவதுதான்.
நமக்குத் தன்மானம் – ‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
நாமெல்லாம் மனிதர்களாக ஆகவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?
மானமும், அறிவும் இருக்கவேண்டும்; அதுவும் அழகுள்ள மனிதர்களாக இருக்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?
முகப்பவுடர் டப்பா வாங்குவதினாலோ அல்லது ஒப்பனை கடைக்குப் போவதினாலோ நாம் அழகுள்ள மனிதர்களாக ஆக முடியாது; அந்த அழகு புற அழகு- அது கொஞ்சநேரம்தான். சிலருக்கு சில மணிநேரம்; இன்னும் சிலருக்கு சில நாள்கள்தான்.
தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர்
தந்தை பெரியார்!
ஆனால், வாழ்நாள் முழுவதும் அழகுள்ள வர்களாக இருக்கவேண்டுமேயானால், தமிழ் நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் அவர்கள் நமக்கு வழி காட்டியபொழுது, தெளி வாகச் சொன்னது என்னவென் றால், அழகுள்ள மனிதர்களாக வாழவேண்டுமா? மிகச் சுருக்கமான வழி – செலவில்லாத வழி – கடைக்குச் சென்று எந்தப் பொருள்களையும் வாங்கவேண்டாம்; அல்லது அழகு சாதனங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை.
உங்களிடையே இருக்கிறது – மானமும், அறிவும்தான் மிகவும் முக்கியம்.
நம்மைப் பார்த்து மற்றவர்கள் அஞ்சக்கூடிய அளவில் ஏன் இருக்கிறார்கள்?
‘திராவிட இந்தியா’ என்று சொல்லிவிட்டதினால், அதைப்பற்றி எழுதினார். அதை நானும் பார்த்தேன், என்னிடம் காட்டினார்கள்.
ஆனால், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று நான் விரும்பவில்லை. காரணம் என்னவென்றால், நாம் இருக்கிறோமா, இல்லையா என்பதை அவரே முடிவு செய்துவிட்டார்.
இருப்பதினால்தானே, பதில் சொல்கிறார். இல்லை என்றால், ஏன் பதில் சொல்லப் போகிறார்?
இருப்பது மட்டுமல்ல, உறுத்துகிறோம்!
இருப்பது மட்டுமல்ல, உறுத்துகிறோம்! இருப்பதை விட, அவரை உறுத்துகிற மாதிரி இருக்கிறது. அதனால், அவரால் மறக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பில், உங் களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற் றிருக்கின்றோம். காலையில் நடைபெற்ற பேரணியை வைத்து, மாலையில், திராவிட மாணவர் கழகம் சார்பில் இக்கருத்தரங்கத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருக் கிறீர்கள்.
இங்கே தோழர்கள் ஒவ்வொரும் சிறப்பாக உரை யாற்றினர். ஒரு பெரு வகுப்புப் போன்று, நல்ல கருத்தரங்கமாக இதை அமைத்திருக்கின்றீர்கள்.
வரவேற்புரையாற்றிய தொண்டறம் அவர்களே, தலைமை ஏற்றிருக்கக்கூடிய இரா.செந்தூர்பாண்டியன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய தோழர்கள் சிவபாரதி, மணிமொழி, இனியன், ராஜன் மற்றும் அறிவுச்சுடர் ஆகிய தோழர்களே,
‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமை யும் கடமையும்” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய மானமிகு கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
‘‘பண்பாட்டுத் தளத்தில்” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றிய இளமாறன் அவர்களே,
‘‘அரசியல் தளத்தில்” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றிய அறிவுமதி அவர்களே,
‘‘சமூக தளத்தில்” என்ற தலைப்பில் உரையாற்றிய அன்புமதி அவர்களே,
கருத்துரை வழங்கிய நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே, நம்முடைய துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக்கூடிய பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் தங்கமணி அவர்களே,
இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய சிறப்புமிகுந்த இளைய பேச்சாளர் திராவிட மாணவர் கழகத்தைச் சார்ந்த நர்மதா அவர்களே,
மற்றும் இங்கே சிறப்பாகக் கூடியுள்ள அனைத்து இயக்க நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு திட்டமாக இருந்த காலத்திலேயே…
புதிய தேசிய கல்விக் கொள்கை என்பதே நவீன குலக்கல்வித் திட்டம்தான். நவீன மனுதர்மத் திட்டம் என்பதை நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக் கிறோம்.
அது வரைவு திட்டமாக இருந்த காலத்திலேயே நாம் ஏராளமான கருத்தரங்குகளை நாம் நடத்தியிருக் கின்றோம்.
மனுதர்மத்தை எதிர்த்து அழிப்பதற்காகத் தோன்றியதுதான் திராவிடர் இயக்கம்!
சுருக்கமாக உங்களுக்குச் சொல்லவேண்டும் என்றால், மனுதர்மம் புகுந்த காரணத்தினால், நமக்குக் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்; அதுகுறித்து விளக்கிச் சொல்லவேண்டிய அவசியமில்லை.
அதனை எதிர்த்து அழிக்கக் கூடிய இயக்கமாக தோன்றியதுதான் திராவிடர் இயக்கம்.
ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த இயக்கம், மூன்று, நான்கு கட்டங்களாக, பல நிலையிலும் வந்த நேரத்தில், எந்தக் கட்டமாக இருந்தாலும், அதனு டைய மய்யம், எதை வைத்துச் சுழன்றது?
நம்முடைய மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி வாய்ப்பு என்கிற மய்யப்புள்ளிதான். அந்தக் கதவுகள் திறக்கப்படவேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்குக் கல்விக் கண்ணைக் குத்தி இருந்தார்கள். அவர்களை படிக்க முடியாமல் ஆக்கியிருந்தார்கள்.
அதற்கு உதாரணம்தான், மிகப்பெரிய அளவிற்கு ஏகலைவன், புராணத்தில்.
(தொடரும்)
என்றும் பெரியார் பணி முடிப்போம்
ஆசிரியர் வழி நடப்போம்