கருநாடகத்தில் ஒலிக்கும் ஒரு குரல்!

viduthalai
2 Min Read

“தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை ஒன்றிய அரசு தொடரு மானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்” என்று காங்கிரஸ் எம்.பியான டி.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அது குறித்து செய்தியாளர் களிடம் பேசிய பெங்களூரு புறநகர் எம்பி-யும் கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ், “ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரி விதிப்பில் தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய பங்கை ஒன்றிய அரசு முறையாக வழங்குவதில்லை. தென் இந்திய மாநிலங்கள் தொடர்ந்து அநீதியை எதிர்கொண்டு வருகின்றன. தென் இந்திய மாநிலங்கள் மூலம் பெறப்படும் வரி வருவாய் வட இந்திய மாநிலங்களுக்கு வாரி கொடுக்கப்படுகிறது. இது தொடர்ந்தால், தனி நாடு கோரிக்கைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். ஒன்றிய அரசு எங்களிடம் இருந்து பெறும் தொகையோ பெரிது. ஆனால், சொற்பத் தொகையையே எங்களுக்கு வழங்குகிறது. இது குறித்து நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதற்குத் தீர்வு காணப்படாவிட்டால், அனைத்துத் தென் இந்திய மாநிலங்களும் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்து வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

டி.கே.சுரேஷின் இந்த கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், “தென் இந்தியாவின் வலி குறித்தே அவர் பேசி உள்ளார். ஒட்டுமொத்த நாடும் ஒன்றுதான். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் நீங்கள் முக்கியத்துவம் தர முடியாது. பட்ஜெட்டில் சமமாக நிதிப் பங்கீடு நடைபெறவில்லை. கருநாடகா ஒன்றிய அரசுக்கு அதிக அளவில் வருவாயை வழங்கி வருகிறது. ஆனால், தென் இந்தியாவுக்கு எந்த பெரிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் பின் தங்குவதாக உணர்கிறோம். அதேநேரத்தில், நாடு முழுவதும் ஒன்றுதான். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். தனி நாடு கோரிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை” என தெரிவித்துள்ளார்.

டி.கே. சுரேஷ் காங்கிரஸ்காரராக இல்லாமல் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்திருந்தால் “ஓ, இது பச்சை பிரிவினைவாதம்” என்று ஆகாயத் துக்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்து இருப்பார்கள் பிஜேபியினர்.
அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு பிரச்சினையைக் (இந்திய – சீனப் போரின்போது) கைவிட்ட போது ஒரு கருத்தை வலியுறுத்த தவற வில்லை. “பிரிவினையை நாங்கள் கை விட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக் கின்றன” என்றார்.
பிஜேபி – சங்பரிவார்கள் இந்தியா ஒரே நாடு தான்; ஒரே மொழி தான், ஒரே மதம்தான், ஒரே கலாச்சாரம் தான் என்று ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்களேயானால், இந்தியா பலமாநிலங்களின் ஒன்றியம் (Union of States) என்ற இந்திய அரச மைப்புச் சட்டத்தைப் புறக்கணித்தால், கருநாடக காங் கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷின் குரல் மற்ற மாநிலங் களிலும் எதிரொலித்தால், அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *