சென்னை மெரினா கடற்கரைச் சாலை வழியாக, (22-08-2018) சென்றவர்கள் அனைவருமே நிச்சயம் அந்தச் சிலைகளைப் பார்த்து பிரமித்துத்தான் போயிருப்பார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி உயிரோடு இருந்தபோது எந்தத் தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளித்தாரோ, அதேபோல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அவரின் இரண்டு சிலைகளைச் சுமந்தபடி வாகனம் ஒன்று கடற்கரை காமராஜர் சாலையில் அங்கும், இங்குமாகச் சென்றுகொண்டிருந்தது. அந்தக் காட்சி அந்த வழியாகச் சென்ற அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெரிய அளவில் ஈர்த்தது எனலாம். அந்தச் சிலைகளைப் பார்த்தபோது, சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டு, பிறகு இடிக்கப்பட்ட கலைஞரின் சிலை குறித்த வரலாறு நம் நினைவில் வந்துபோனது.
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியால் கவரப்பட்ட தந்தை பெரியார் நிகழ்ச்சியொன்றில் “தம்பிக்குச் சிலை ஒன்றை அமைக்க வேண்டும்” என்றார். அப்போது கலைஞர் கருணாநிதி இடைமறித்து, “முதலில் உங்களுக்குச் சிலை அமைப்பதைப் பற்றி யோசிக்கிறேன். அதன்பிறகு இதைப் பார்க்கலாம்” என்றார். சொன்னபடியே, சென்னை சிம்சன் அருகே தந்தை பெரியாருக்குச் சிலை அமைத்தார் கலைஞர் கருணாநிதி. அப்போது, பெரியார் உயிருடன் இருந்தார். அதன்பிறகு கலைஞர் கருணாநிதிக்குச் சிலை அமைக்கும் பணியை திராவிடர் கழகம் மேற்கொண்டது. அதை அறிந்த கலைஞர் கருணாநிதி, “தனக்கு திராவிடர் கழகம் சிலை வைப்பதில் விருப்பம் இல்லை” எனக் கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும், திராவிடர் கழகம் அந்த முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை. அண்ணா சாலையில் தர்கா அருகே அந்தச் சிலையை நிறுவியது. பெரியாரின் மனைவி மணியம்மைதான் இந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார். குன்றக்குடி அடிகளார் இந்தச் சிலையை திறந்து வைத்தார்.
கலைஞர் கருணாநிதி நின்றுகொண்டு, வலக்கையைத் தூக்கி இரண்டு விரல்களை மடித்து, மூன்று விரல்களைக் காட்டியபடி இருக்குமாறு, அந்தச் சிலை அமைக்கப்பட்டிருந்தது. அண்ணா சாலையின் தொடக்கத்தில் சிம்சன் அருகே பெரியார் சிலை, வாலாஜா சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலை, அதிலிருந்து சில மீட்டர் தூரத்தில் தர்கா சந்திப்பில் கருணாநிதியின் சிலை மற்றும் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் மறைந்த மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலை எனத் திராவிடக் கட்சிகளின் நான்கு தூண்கள் அண்ணா சாலையில் இருந்திருக்கும். ஆனால், எம்.ஜி.ஆர். மரணமடைந்த சமயத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு ஆபத்து வந்தது.
1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது, அவருடைய தொண்டர்கள் சிலர், அண்ணாசாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை கடப்பாரையைக் கொண்டு சேதப்படுத்தியதுடன், சிலையை இடித்துத் தள்ளினார்கள். அந்தப் ஒளிப்படம் அதற்கு அடுத்தநாள் பத்திரிகைகளில் வெளியானது. இதைப்பார்த்த கலைஞர், அப்போது முரசொலி பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்…
“உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத் தம்பி
என் முதுகில் குத்தவில்லை,
நெஞ்சிலேதான் குத்துகிறான்
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!”
அதையடுத்து, கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் சிலை வைக்கலாம்’ என திராவிடர் கழகம் கேட்டபோது அவர் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். பிறகு, அவரின் ஆட்சிக்காலத்தில், அவருடைய சிலை இருந்த அந்த பீடத்தையும் நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். அதன்பிறகு கலைஞர் கருணாநிதிக்குச் சிலை வைக்கும் எண்ணமே யாருக்கும் எழவில்லை. இந்தநிலையில்தான், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி, 07-08-2018 அன்று காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா சமாதியின் வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதிக்குச் சிலை செய்வதற்கான முயற்சிகளை, தி.மு.க உயர்மட்டத் தலைவர்கள், ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில்தான், சென்னையை அடுத்த சோழவரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கலைஞர் கருணாநிதி சிலையை உருவாக்கி, மெரினா சாலைக்கு எடுத்துவந்தார். அதில் ஒன்று கருணாநிதி நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், மற்றொன்று நின்றுகொண்டு இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் பெருந்திரளானோர், கலைஞர் கருணாநிதி சிலைகளுடன் ஒளிப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
சிலையை உருவாக்கிய முருகன்
சிலையை வடிவமைத்த ஸ்தபதி முருகனிடம் இதைப் பற்றிப் பேசினோம். “சோழவரத்தில் நான் சிலைசெய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலையை அழகாகச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். இதைச் செய்ய எனக்கு ஒரு மாத காலம் ஆனது. ஒவ்வொரு சிலையையும் நேர்த்தியாக வடிவமைப்பதற்கு இத்தனை நாள்கள் தேவைப்பட்டன. இந்தச் சிலையை கலைஞர் கருணாநிதி சமாதியில் வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காகத்தான் இங்கு கொண்டுவந்தேன். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பி.கே. சேகர் பாபுவைத் தொடர்பு கொண்டு சிலை வைப்பது பற்றிப் பேசினேன். அவரும் அதற்கான முயற்சியை எடுப்பதாக என்னிடம் கூறியுள்ளார்” என்றார்.
– ஜெ.அன்பரசன்
நன்றி: விகடன்.காம் – ஆகஸ்ட் 23, 2018