கள் வெறியை விட அதிகார வெறி மிகக் கொடி யது என்பார்கள். அது மெய்யான அபிப்பிராயம் என காங்கிரஸ்காரர்கள் இம்மாதம் 3ஆம் தேதி சென்னை நகரசபையில் காட்டி விட்டார்கள். காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்றிருப்பதினால் காங்கிரஸ்வாதிகள் மேயராகவும், உதவி மேயராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டதைக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், நிரந்தரக் கமிட்டிகளில் இதர கட்சி மெம்பர்களை காங்கிரஸ்காரர் சேர்த்துக் கொள்ளாதது அவர்களது ஜனநாயக ஞான சூனியத்தையும், பழிக்குப் பழி வாங்கும் குணத்தையும், அற்பத்தனத்தையும், பேரா சையையுமே காட்டுகிறது. நிரந்தரக் கமிட்டிகளில் எதிர்கட்சியாருக்கு 40 சதமானம் ஸ்தானங்கள் வழங்குவது பார்லிமெண்டரி முறை. ஆனால், பாசிஸ்ட் நாடகமாடும் காங்கிரஸ்காரர்களுக்கு அந்த உண்மை விளங்கவில்லை. பேராசை மிகுதியினால் கைப்பற்றக் கூடிய ஸ்தானங்களைக் கைப்பற்றி விட்டார்கள். இது காங்கிரஸ்காரரை ஆதரிக்கும் சென்னை ‘மெயி’லுக்குக் கூடப் பிடிக்கவில்லை “பேராசையினால் காங்கிரஸ்காரர் அழிந்து போகப் போகிறார்கள். அவர்கள் வாழ்வு நெடுநாள் நிலைத்து நிற்கப்போவதில்லை” என காங்கிரஸ் அபிமானியான “மெயில்” சாபமிடுகிறது.
நிரந்தரக் கமிட்டிகளில் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஸ்தானங்கள் வழங்கப்படாததைப் பற்றி நாம் வருந்தவில்லை. ஏனெனில், நமது பிரதிநிதிகளின் கூட்டுறவைப்பெற காங்கிரஸ்காரருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அழிவு வேலைக்காரரும், ஆக்க வேலைக்காரரும் ஒத்துப் போக முடியுமா? எனவே “இனம் இனத்தோடே வெள்ளாடு தன் னோடே’’ என்றபடி அழிவு வேலைக்காரர்களான காங்கிரஸ் வாலாக்கள் தம் இனத்தவரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற் கில்லை. மற்றும், சுமார் 15 வருஷ காலம் பைத்தியக் காரர் மாதிரி, காடு மேடெல்லாம் சுற்றியலைந்து தடியடிபட்டு, உப்புக் காய்ச்சி, மறியல் கிடந்து சீரழிந்தவர்கள் ஒரு நாளுமில்லாத திருநாளாகப் புது வாழ்வில் இறங்கினால் தலைகால் தெரியாமல் குதிக்கத்தானே செய்வார்கள்? “வெற்றிக் காலத்திலே வணங்கி நட’’ என காந்தியார் சொல்லுகிறார்.
ஆனால், அவர் பெயரால் வோட்டு வாங்கும் காங்கிரஸ் வம்பர்களோ வெற்றிக் காலத்துக் குடி வெறியர் மாதிரி கூச்சல் போடுகிறார்கள்; கூத்தாடு கிறார்கள். ஆனால், ‘துள்ளின மாடு பொதி சுமக்கும்’ என்ற நீதிப்படி அவர்கள் செய்த வினைக்கு ஏற்ற பலனை அவர்கள் அடைவார்கள் என நாம் திருப்தி யடைவதைத் தவிர வேறு வழியில்லை. 3ஆம் தேதி சம்பவத்திலிருந்து ஒரு விஷயத்தை நம்மவர்கள் உணர வேண்டும். வரப்போகும் சீர்திருத்த அரசிய லில் காங்கிரஸ்காரர் அதிகார பதவிக்கு வந்தால் மைனாரிட்டிகளின் கதி என்னாகுமென்பதை 3ஆம் தேதி சம்பவத்திலிருந்து ஒருவாறு ஊகித்தறிந்து கொள்ளலாம். அரசியலிலே தாம் இழந்த செல் வாக்கை மீண்டும் பெற பார்ப்பனர்கள் வெகு தந்திர மாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை அறியாத நம்மவர்களும் அவர்களுக்கு பக்க பலமாய் நிற்கிறார்கள் திரு. முத்துரங்க முதலியா ருக்கு இரண்டு முறை ஏற்பட்ட ஏமாற்றத்தை அறிந்த பிறகும், நம்மவர்களுக்கு நற்புத்தி பிறக்கவில்லை. ஆனால், தாவுத்ஷாவுக்கு நேர்ந்த கதியை உணர்ந்த பிறகும் நம்மவர்களுக்கு மயக்கம் தெளியவில்லை. எனினும், வெகு சீக்கிரத்தில் அவர்களது மயக்கம் தெளியப் போவது நிச்சயம்.
சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; பலரைப் பல காலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. திருநெல்வேலி, திருச்சி, வேலூர் சம்பவங்களுக்குப் பிறகும் காங்கிரஸ் பார்ப்பனர் நற்புத்தி கற்றுக்கொள்ளாதது அவர்களது அறிவீனத்தையே காட்டுகிறது. அதிகார வெறியினால் அவர்களுடைய ‘சாதாரண அறிவும் கூட மழுங்கி விட்டது. பார்ப்பனரல்லாதாரை எப்படியா வது நசுக்கிவிட வேண்டுமென்ற ஆசைப் பெருக் கினால் பலாபலன்களை லட்சியம் செய்யாமல் தான் தோன்றித்தனமாக நடக்கிறார்கள். நம்மவர்களுக்கு எதிராக நம்மவர்களையே கிளப்பிவிட்டு நாடகம் பார்க்கிறார்கள். நம்மவர்களைக் கொண்டே நம்ம வர்களைத் திட்டும்படி செய்கிறார்கள். நாம் செய்வது என்ன, தமது செயலின் பலாபலன்கள் என்ன என்பனவற்றைச் சிந்தித்துப் பாராமல் நம்மவர்களும் கண் மூடித்தனமாக அவர்களுக்கு ஒத்தூதுகிறார்கள். ஆனால், சூழ்ச்சிகளும், சதிகளும் நெடுநாள் நிலை நிற்க மாட்டா. பார்ப்பனர் சூழ்ச்சிகளை நம்மவர்கள் முன்பு பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தார்கள்; பல சந்தர்ப்பங்களில் அவர்களை எதிர்க்கவும் முனைந் தார்கள். எனினும், பார்ப்பன சூழ்ச்சியில் – வலையில் -எப்படியோ மீண்டும் சிக்கி விட்டார்கள். எனினும், நிரந்தரமாக அவர்கள் சிக்கிக் கிடப்பார்கள் என எண்ண இடமில்லை.
காலோசிதமான பிரச்சாரங்களினாலும் தந்திரங் களினாலும் பார்ப்பனர்கள் காலப்போக்கைத் தமக்கு அனுகூலமாக்கிக் கொள்கிறார்கள். நெருக்கடியேற் படும் போது வட நாட்டுத் தலைவர்களை அழைத்து வந்து பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். எனினும் வரப்போகும் தேர்தலோடு காங்கிரஸ் பார்ப்பனர்களின் உண்மைச் சொரூபம் வெட்ட வெளிச்சமாகி விடுமென்பது உறுதி. அக்காலத்துப் பார்ப்பனர் வலையில் சிக்குண்டு கிடக்கும் நம்ம வர்கள் மயக்கத் தெளிந்து உண்மை நிலை காண் பார்கள் என்பது நிச்சயம். அந்நிலை ஏற்படும்போது பார்ப்பனியத்துக்குச் சாவுமணி அடிக்கப்படுவது நிச்சயம். அந்நாள் வரை நாம் நமது கடமையைப் பொறுமையுடன் செய்துகொண்டு இருப்போமாக!
– ‘விடுதலை’ – 7.11.1936