சென்னை, ஜன. 30- ஒன்றியத்தில் அதிகாரத்தில் உள்ள பாஜக அரசு கார்ப்பரேட் சக்திகளுக்கு ஆதரவாக விவசாயிகளின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு குற்றம் சாட்டினார்.
இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 3 நாள் தேசிய குழு கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 2ஆம் நாள் கூட்டம், சங்கத்தின் அகில இந்திய தலைவர் நா.பெரியசாமி தலை மையில் நேற்று (29.1.2024) நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் பங்கற்ற இந்த கூட்டத்தில் வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் குல்சார் சிங் கொரியா தாக்கல் செய்து பேசினார். அதைத்தொடர்ந்து மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கான நிதியை பாஜக அரசு தொடர்ந்து குறைத்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது.
2024-2025ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்துக்கு ரூ.4 லட்சம் கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நல்லகண்ணு பேசியதாவது:
பாஜக அரசு விவசாயிகளின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. கார்ப்பரேட் சத்திகளுக்கு ஆதரவான கொள்கைகளை வகுத்து இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டாளிகளும் முழுமையாக தோற்கடிக் கப்பட வேண்டும்.
இதுதான் ஜனநாயகத்தையும், அரசமைப்பையும் பாதுகாக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.பாஸ்கர், கேரள முன்னாள் வனத்துறை அமைச்சர் கே.ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.