பீகார் மக்களுக்கு நிதீஷ்குமார் செய்த துரோகம் : கட்சித் தலைவர்கள் கண்டனம்

viduthalai
2 Min Read

புதுடில்லி,ஜன.29-கூட்டணி மாறியதன் மூலம் பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்ததாக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி: நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி. பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்துவிட்டார். நிதிஷ்குமார் கடந்த 3-4 மாதங்களாக பெரும் கூட்டணியை உடைக்க திட்டமிட்டு உள்ளார்.

நிதிஷ் நடவடிக்கை “இந்திய அரசியலில் ஒத்துப்போக தெரியாதவர்” என அவரை அடையாளம் காட்டி உள்ளது. சுய நன்மைக்காக அவர் இத்தகைய நடவடிக் கையை எடுத்து உள்ளார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக, அவர்கள் யாரையும் அணைத்துக்கொள்வார்கள்.

இந்திய அரசியலில் இது ஒரு பிரச்சினை. நிதிஷை பொறுத்தவரை அவரிடம் எந்த ஒரு நம்பகத் தன்மையும் இல்லை. மூன்று-மாதங்களுக்கு முன்னர் அவர் இதைப் போலவே திட்டமிட்டிருந்தார் என்று அறிந்தோம் -இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:- இது நடக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், நாங்கள் வெளியில் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் எதாவது கூறினால், தவறான செய்தி மக்களிடம் சென்றடையும் என்பதால் விட்டு விட்டோம்.

“இந்தியா” கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறப் போவதாக லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஏற்கெனவே எங்களிடம் தெரிவித்தனர். இன்று அது உண்மையாகிவிட்டது. அவர் கூட்டணியில் இருக்க விரும்பி இருந்தால் இருந்திருப்பார். ஆனால், அவர் வெளியேற விரும்பினார், வெளியேறிவிட்டார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்: காங்கிரசின் இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இந்த அரசியல் நாடகம். விரைவில் பீகாரில் நுழைய உள்ள ராகுல் காந்தியின் நடைப்பயணம் குறித்து பிரதமரும், பா.ஜனதாவும் பயந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அரசியல் கூட்டணிகளை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் நிதிஷ்குமார், பச்சோந்திகளுக்கே கடும் போட்டியாக நிறம் மாறுகிறார். பீகார் மக்கள் நிதிஷ் குமாரின் துரோகத்தை ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.
பீகார் மாநில மேனாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி: எங்கள் அரசின் பல சாதனைகளுக்கான பெருமையை நான் பெறுவதில் நிதிஷ்குமாருக்கு சிக்கல் இருந்தது. இது பா.ஜனதாவுக்கான எச்சரிக்கை மணி.

கூட்டணி மாறுவதற்கு நிதிஷ் கூறும் காரணம் எதுவாக இருந்தாலும் சரி, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி அழிந்துவிடும் என்பது மட்டும் உறுதி.
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர்:- ‘எங்கே வாய்ப்பு இருக்கிறதோ – அங்கெல்லாம் திருப்பத்தை எடுத்து கொள்ளுங்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. அது நிதிஷ்குமாருக்கு நன்றாக பொருந்துகிறது. மக்கள் அவரை அறிவார்கள், அவருக்கு பாடம் கற்பிப்பார்கள்.

ஒரு நிதிஷ் குமார் இந்தியா கூட்டணிக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டார். பா.ஜனதா அதிகாரப் பசியில் உள்ளது. அதற்கும் மக்கள் நலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்: பா.ஜனதா இன்றுபோல் பலவீனமாக இருந்ததில்லை. இன்று துரோகம் செய்வதில் புதிய சாதனை படைக்கப்பட்டுள் ளது. இதற்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப் பார்கள். ஒருவர் உங்களை ஒரு நபராக நம்பாததை விட பெரிய தோல்வி எதுவும் இருக்க முடியாது.

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் சுரேந்திர ராஜ்புத்: பா.ஜனதாவும் ஊடகங்களின் பெரும் பகுதியும் “இந்தியா” கூட்டணி உடைந்து பலவீனமாக இருப்பதாக காட்ட முயல்கின்றன. பீகாரில் என்ன நடந்தாலும் வரும் நாட்களில் “இந்தியா” கூட்டணி வலுவடைவதை நீங்கள் காண்பீர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *