அம்பேத்கர் படத்தைக் கிழித்த காவல்துறை!
போபால், அக்.13 பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் பீட்டல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக இருந்தவர் நிஷா பாங்ரே. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் தனது சொந்த கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநில அரசு துறை அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு விடுப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பல்வேறு உயரதிகாரிகளிடம் தனது நிலை யைக் கூறி விடுமுறை தருமாறு கோரியுள்ளார். ஆனால், இறுதிவரை அவருக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில், அவர் தனது பதவி விலகுவதாக துறை அலுவலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பதவி விலகல் கடிதத்தையும் மாநில அரசு அதிகாரிகள் ஏற்கவில்லை. அதனால், நிஷா பாங்ரே தான் பணியாற்றும் பீட்டல் மாவட்டத்திலிருந்து தலைநகர் போபால் நோக்கி பாதயாத்திரை செல்வதாக அறிவித்து, கடந்த செப்.28 அன்று நடைபயணத்தைத் தொடங்கினார்.
அக். 9 அன்று நிஷா பாங்ரே தலைநகர் போபாலை வந்தடைந்தார். அண்ணல் அம்பேத்கர் படத்துடன் பாஜக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் வீடு நோக்கி பாத யாத்திரையை தொடங்கினார். இதற்கு அனுமதி மறுத்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நிஷா பாங்ரேவை வலுக்கட்டாயமாக தரதர வென இழுத்து கைது செய்தனர்.
நிஷா பாங்ரேயை கைது செய்யும் பொழுது அவர் அணிந்து இருந்த ஆடையை இழுத்து கிழித்து அரை நிர்வாணப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மேலும் அவர் கையில் வைத்து இருந்த அம்பேத்கர் படத்தையும் வாங்கி காவல்துறையினர் கிழித்துள்ளனர்.
எனினும் நிஷா பாங்ரே கிழித்து தூக்கி எறியப்பட்ட அம்பேத்கர் படத்தை எடுத்துக் கொண்டும், கிழிந்த நிலையிலான உடையுடனும் காவல்துறை வாகனத்தில் சென்றார். நிஷா பாங்ரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு விடுமுறையும் அளிக்காமல், பதவி விலகல் கடிதத்தையும் பெறா மல் தீண்டாமை எண்ணத்துடன் கொடுமைப்படுத்தி இறுதி யில் உடையைக் கிழித்து கைது செய்துள்ளது ஆளும் பாஜக அரசு.