கோவில்பட்டி, ஜன.26 கழுகு மலையில் உள்ள வெட்டுவான் கோயில், சமண சின்னங்கள் உள்ள மலை ஆகியவற்றைப் பாதுகாக் கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலையைக் குடைந்து அமைக் கப்பட்ட குடவரை கோயிலான இக்கோயில் முற்காலப் பாண்டி யர்கள் காலத்தில் உருவாக்கப் பட்டது. இதேபோல, பாண்டியர் காலத்திலேயே கழுகுமலை மலை மீது சமணப்பள்ளி மற்றும் வெட்டுவான் கோயிலும் அமைக் கப்பட் டுள்ளது.
பெரிய மலைப்பாறையில் 7.50 மீட்டர் ஆழத்துக்கு சதுரமாக வெட்டியெடுத்து, நடுப்பகுதி பாறை கோயிலாக செதுக்கப்பட் டுள்ளது. இதை வெட்டுவான் கோயில் என்று அழைக்கின்றனர். இது எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் போன்று அமைந்துள்ளது. இத்தகைய கோயில், தமிழ்நாட்டிலேயே இது ஒன்றுதான் என்பது இதன் தனிச் சிறப்பாகும்.
வெட்டுவான் கோயில் மற்றும் சமண சின்னங்கள் தமிழ்நாடு அரசின்தொல்லியல் துறை கட்டுப் பாட்டில், பாதுகாக்கப்பட்ட மரபுச் சின்னங்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில், கழுகு மலை மலைப் பகுதி முழுவதையும், தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் டி.உதயசந் திரன், இணை இயக்குநர் ஆர்.சிவானந்தம் ஆகியோர் உத்தரவின்பேரில், தொல்லியல் துறை உதவிப் பொறியாளர் ராஜேஷ், வட்டாட்சியர் லெனின் மற்றும் அதிகாரிகள் கழுகுமலை யில் ஆய்வு மேற்கொண்டனர். தொல்பொருள் தளங்களின் எல்லை யிலிருந்து 300 மீட்டர் சுற்றளவில் உள்ள கனிமம் அல்லது பழங்கால மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள், தொல் பொருள் தளங்கள் ஆகியவற்றை தொல்லியல் துறையின் பாது காக்கப்பட்ட பகுதியாக கருத வேண்டும். எனவே, கழுகுமலை பாறையின் எந்தப் பகுதியிலும் சுரங்கத்தை அனுமதிக்கக் கூடாது. இந்த மலையில் எந்த குவாரிக்கும் குத்தகை உரிமம் வழங்கப்படாது என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
உலக பாரம்பரிய சின்னம்: இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு கூறியதா வது: முற்காலப் பாண்டியர்களின் கலைப் பாணியில் கழுகுமலை வெட்டுவான்கோயில் மற்றும் சமணச் சிற்பங்கள் விளங்குகின்றன. மலையின் கிழக்குச் சரிவில் 100-க்கும் மேற்பட்ட சமணத் தீர்த் தங்கரர்களின் புடைப்புச் சிற் பங்கள் உள்ளன. இவை பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடை யன் காலத்தில் செதுக்கப்பட்டவை. சிற்பங்களின் கீழ் அவற்றை உரு வாக்கியவரின் பெயர் விவரங்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட் டுள்ளன. இங்கு சமணப் பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது.
எல்லோரா கைலாசநாதர் கோயில் சிற்பங்களுக்கு முந்தைய காலத்திலேயே கழுகுமலையில் வெட்டு வான் கோயில், சமணர் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு விட் டன.
எனவே, இவற்றை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.