போட்டுடைத்த நிட்டி ஆயோக் சி.இ.ஓ!
அனைத்துச் சாலைகளும் அயோத்தியை நோக்கித் திரும்பியிருக்கும் சூழலில்,“ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந் தளிக்கப்படும் நிதியைச் சுருக்குவதற்கு, பிரதமர் மோடி திரைமறைவு பேரத்தில் ஈடுபட்டார்” என்று வெளியாகியிருக்கும் தகவல், அய்ந்து மாதங்கள் கழித்துப் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது!
கடந்த ஆண்டு, ஜூலை 23-ஆம் தேதி, டில்லியில் ‘சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான மய்யம்’ எனும் அரசுசாரா அமைப்பின் சார்பில் ‘நிதி நிர் வாகத்தில் வெளிப்படைத்தன்மை’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், ‘நிதி ஆயோக்’ அமைப்பின் தலைமைச் செயலதிகாரியான பி.வி.ஆர்.சுப்பிரமணியம் உரையாற்றினார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசிலும், மோடி ஆட்சி யிலும் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாள ராகப் பணியாற்றியவர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம். கருத்தரங்கத்தில் அவர் பேசும்போது வீசிய சில குண்டுகள், அய்ந்து மாதங்கள் கழித்து இப்போது வெடித்திருக்கின்றன.
பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கருத்தரங்கத்தில் பேசிய காணொலி யூடியூப் சேனல் ஒன்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த காணொலி கடந்த ஜனவரி 18-ஆம் தேதி திடீரென நீக்கப்பட்டது. காரணம், ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக் டிவ்’ என்ற அமைப்பு, ஆர்.டி.அய் சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்துக்குச் சில கேள்விகளை அனுப்பியிருக்கிறது. அதையடுத்தே குறிப்பிட்ட காணொலி யூடியூபிலிருந்து நீக்கம் செய்யப்பட்டி ருக்கிறது.
அந்தக் காணொலியில் இடம் பெற்றிருந்த கருத்துகள்தான் தற்போது சூறாவளி யைக் கிளப்பியிருக்கின்றன.
அரசமைப்புச் சட்டத்தின்படி, அய்ந்தாண்டு களுக்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நிதி ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம்தான், ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது. அந்த வகையில், மன்மோகன் சிங் ஆட்சியில் அமைக்கப்பட்ட 13ஆவது நிதி ஆணையம், ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து 32 சதவிகித நிதியை மாநிலங் களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று பரிந் துரைத்தது. அப்போது, குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, ‘மாநிலங்களுக்கு 32 சதவிகிதம் போதாது. 50 சதவிகித நிதியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்’ எனக் குரல் கொடுத்தார். அடுத்த சில மாதங்களில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மோடி பிரதமரான பிறகு காட்சிகள் மாறின.
ஒன்றிய வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியை 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக 14ஆவது நிதி ஆணையம் உயர்த்தியது. அப்போது, ‘42 சதவிகிதத்தை மீண்டும் 32 சதவிகிதமாகக் குறையுங்கள்’ என்று 14ஆவது நிதி ஆணையத்தின் தலைவரான ஒய்.வி.ரெட்டியிடம் திரைமறைவில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லியிருக்கிறார் பி.வி.ஆர்.சுப்பிர மணியம்.
ஒய்.வி.ரெட்டி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர். ‘மாநிலங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டும்’ என்ற மோடியின் அழுத்தத்துக்கு ஒய்.வி.ரெட்டி பணியவில்லை. அதனால் நிதி ஆணையத்தின் பரிந்துரையை மிகவும் தாமதமாகவே ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு, ஒன் றிய அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட்டும் இரண்டே நாட்களில் மாற்றியமைக்கப்பட்டது. “இரண்டு மணி நேரம் நீடித்த அந்த ரகசிய பேரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டபோது, நானும் அங்கு இருந்தேன். எங்கள் மூவரையும் தவிர வேறு எந்தவோர் அமைச்சரும், அதிகாரியும் அந்த இடத்தில் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கும் பி.வி.ஆர்.சுப்பிரமணியம், இன்னும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களையும் போட்டுடைத்திருக்கிறார்.
“மோடி பிரதமரானவுடன் பா.ஜ.க அரசு தாக்கல் செய்யவிருந்த முதல் பட்ஜெட்டில், மாநிலங்களுக்கான நிதியை 42 சதவிகிதமாக நிதி ஆணையம் பரிந் துரைத்ததால் பெண்கள், குழந்தைகள், உள்ளிட்டோ ருக்கான நலத்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்ட நிதியை அவசர அவசரமாகக் குறைத்து விட்டனர். ஆனால், திரை மறைவில் இந்த வேலைகளைச் செய்துவிட்டு, நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘மாநிலங்களுக்கு 42 சதவிகித நிதியை வழங்க நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறோம். எனது அரசு மாநிலங்களுக்கு ஆதரவானது. மாநிலங்களை வலுப்படுத்துவதை ஒரு கடமையாக நாங்கள் கொண்டிருக்கிறோம். இவ்வளவு நிதியை வைத்துக்கொள்ளும் அளவுக்கு சில மாநிலங்களிடம் கருவூலம்கூட கிடையாது’ என்றார். அதை ஒரு ‘ஜோக்’ என்று கருதி பா.ஜ.க எம்.பி-க்கள் கைகொட்டிச் சிரித்தார்கள். இப்போது பிரதமரின் செயலால் சிரிப்பாய் சிரிக்கிறது பா.ஜ.க-வின் மாநில அக்கறை” என்று கடுகடுக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
குறிப்பிட்ட அந்தக் கருத்தரங்கில் பேசிய பி.வி.ஆர்.சுப்பிரமணியம், ‘ஜி.எஸ்.டி அமலாக்கத் துக்குப் பிறகு, மாநிலங்களுக்கான வருவாய் வரும் வழிகள் பெருமளவு அடைபட்டுவிட்டன’ என்கிறார்.
அதாவது, “செஸ் (Cess), சர்சார்ஜ் (Surcharge) என்ற பெயரால் அரசால் வசூலிக்கப்படும் நிதி, ஒன்றிய அரசுக்கானது. அதை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் கிடையாது’ என்று கூறியதோடு, அந்த வரிகளையும் கணிசமாக உயர்த்திவிட்டது.
தற்போது இந்த வரிகளின்மூலம் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் நிதி, ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் சுமார் 20 சதவிகிதம். மாநிலங்களுக்கு 42 சதவிகித நிதிப் பங்கீட்டை வழங்கும் பரிந்துரையை வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுவிட்டு, அதற்கு ஈடாக வேறு வகைகளில் மாநிலங்களிடமிருந்து வரி வசூலிக்கும் இது போன்ற நரித் தந்திரமான வேலை களை மோடி அரசு செய்திருக்கிறது” என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
இதைத்தான் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர்ச்சியாகச் சொல்லிவருகின்றன.
ஜி.எஸ்.டி நிதிப் பங்கீடு தொடர்பாக மாநிலங்கள் எழுப்பும் உரிமை முழக்கம் நிதர்சனமானது என்பதை உறுதிப்படுத்தியிருக்கும் பி.வி.ஆர்.சுப்பிரமணியம், மோடியின் முகமூடியையும் தன் கருத்தரங்க உரையில் கிழித்திருக்கிறார்.
“நிதி ஆணையத் தலைவருடன் மறைமுக பேரத் தில் பிரதமர் மோடி ஈடுபட்ட செயல், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்பு எந்தவொரு பிரதமரும் மாநிலங்களுக்கு எதிராக இப்படியொரு கேட்டைச் செய்ததில்லை” என்று கொதிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
‘அதிகார வெறிகொண்ட அரசு’ என்று காங்கிரஸ் அரசை மோடி விமர்சித்தார். இப்போது, மாநிலங் களுக்கு எதிராக மோடி செயல்படுவது மட்டும் அதிகார வெறி இல்லையா?
– நன்றி: ஜூனியர் விகடன், 28.1.2024