இளமையாக இருக்க யாருக்குதான் பிடிக்காது. தங்களின் வயதைக் குறைத்துக் காண்பித்துக்கொள்ள பலரும் பல வழிகளில் மெனக்கெடுவதுண்டு.
இதற்காக எலிகள் மீது நடத்தப்பட்ட வயதைக் குறைக்கும் சோதனையில் விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர்.
இச்சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பழங்காலத்தில் இருந்தே வயதைக் குறைப்பதற்கான சடங்கு, சம்பிரதாய மூடநம்பிக்கைகள் இருந்தன. அறிவியலின் ஆராய்ச்சிகள் வளர்ச்சியடைந்த நிலையில், உயிரினங்களில் வயதை அதிகரிக்கக்கூடிய காரணிகளையும், அதை மாற்றியமைக்கக்கூடிய தொடர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
வயதைக் குறைக்கும் ஆய்வுகளும் முயற்சிகளும் காலம் தொட்டே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில் எலிகளின் வயதைக் குறைக்கும் சோதனையில் 70 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எப்படிச் சாத்தியமானது..?
இளம் பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் சிக்கலான நானோ துகள்களைக் கொண்டு வயதைக் குறைக்கும் ணி5 எனப்படும் வயதை மாற்றியமைக்கக்கூடிய காரணியைக் கண்டுபிடித்துள்ளனர். இதை எலிகளின் உடலில் செலுத்தி உள்ளனர். இந்த ஆன்டி ஏஜிங் தெரபி சிகிச்சையின்போது எலிகளின் திசுக்கள் மாற்றமடைந்துள்ளன.
எலியின் ரத்தம், இதயம், கல்லீரல் திசுக்களின் மரபியல்ரீதியான வயது பாதியாகக் குறைந்துள்ளது. அதோடு எலியின் செயல்பாடுகள், அறிவாற்றல் மற்றும் நடத்தையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எலியின் மரபணுவில் நம்பமுடியாத அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி வயது குறைந்துள்ளது என லாஸ் ஏஞ்சல்ஸின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் முதியவரை இளைஞராக மாற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
“ஆரம்பத்தில் ணி5-இன் மரபியல் ரீதியான புதுப்பித்தல் மாற்றங்களை என்னால் நம்பமுடியவில்லை. எவ்வாறாயினும் வெவ்வேறு ஆய்வகங்களில் ஆய்வுகள் எங்கள் கண்டு பிடிப்புகளை வலுவாக ஆதரிக்கின்றன” என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியர் ஸ்டீவ் ஹார்வத் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் வருங்காலத்தில் நோய்களுக்குத் தனித்தனியாக சிகிச்சை அளிப்பதைவிட, நோய் தொடங்கும் அபாயத்தைக் குறைக்க இந்தப் புதுப்பித்தல் முறை பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
முதியவரை இளைஞராக மாற்ற முடியுமா? – எலிகள் சோதனையில் வெற்றி
Leave a Comment