வைரல் எங்களுக்கு எந்த ஆசீர்வாதத்தையும் வழங்கவில்லை. கோவில்களை விட பள்ளிக் கூடங்களுக்கு செல்வதுதான் முக்கியம். கல்விதான் எங்களுக்கு வேலை பெற்றுத்தரும் என்ற உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனின் பேச்சு வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 2022 மார்ச் மாதத்தில் நடந்த ஒரு நிகழ்வில், சாமியார் ஒருவரிடம் அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்படுவது குறித்து ‘எஸ்.எம்.’ எனும் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கேள்வி எழுப்பி மைக்கை நீட்டுகிறார். அவர், கோவில் கட்டுவதைப் பெருமிதத்துடன் கூற ஆரம்பிக்கிறார். அப்போது பின்னால் இருந்த சிறுவன், அந்த சாமியாரின் பேச்சுக்கு எதிராக பதில் கூறுகிறார். செய்தியாளரின் கவனம் அச்சிறுவனிடம் திரும்புகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு (மார்ச் 2022 இல்) வெளியான இந்த காட்சிப் பதிவு, தற்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.
அயோத்தியில் ரூ. 1,800 கோடி மதிப்பில் அண்மையில் ராமன் கோவில் திறக்கப்பட்ட நிலையில் அது சார்ந்த விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆதர்ஷ் ராஜ் என்ற இச்சிறுவனின் காணொலி வைரலாகியுள்ளது.
அந்தக் காட்சிப் பதிவில் வரும் செய்தியாளர் அச்சிறுவனிடம், நீ பெரியவனாகி என்ன செய்ய போகிறாய்? என்று கேட்கிறார்.
அதற்கு அச்சிறுவன், நான் வளர்ந்து அய்.ஏ.எஸ் அதிகாரியாக விரும்புகிறேன். அதற்காக யுபிஎஸ்சி தேர்வு எழுதப் போகிறேன் என்று பதிலளித்துள்ளார்.
மேலும் செய்தியாளரின் கேள்விகளும், சிறுவனின் உரையாடலும்…
கேள்வி: கோவில்கள் முக்கியமா? பள்ளிக்கூடங்கள் முக்கியமா?
பதில்: பள்ளிக்கூடங்கள்தான் முக்கியம்.
கேள்வி: கோவில்களுக்கு செல்லவில்லையென்றால் எவ்வாறு அய்பிஎஸ், அய்ஏஎஸ் ஆக முடியும்?
பதில்: நான் கோவில்களை காட்டிலும் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்குத்தான் முக்கியத்துவம் தருவேன். தினசரி கோவிலுக்குப் பதிலாக பள்ளிக்குச் சென்று படித்தாலே யுபிஎஸ்சி பாஸ் செய்துவிடலாம்.
கேள்வி: நல்ல வாழ்க்கைக்கு கடவுளின் ஆசி முக்கியம் என்றுதானே மக்கள் தினசரி அவரை வணங்குகின்றனர்.
பதில்: நான் என் தாய், தந்தை, ஆசிரியரையே வணங்குவேன்.
கேள்வி: நீங்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்?
பதில்: ‘சாமர்’ என்ற வகுப்பு (தாழ்த்தப்பட்டோர் வகுப்பு)
கேள்வி: நீங்கள் அந்த சமூகத்தை சேர்ந்தவர் என்று மிகவும் பெருமையுடன் கூறுகிறீர்களே. இந்தியாவை பொறுத்தவரை இந்த ஜாதியை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பின் கீழ் அட்டவணைப்படுத்தப் படுகிறார்கள். இந்தப் பெயரில் அழைக்கப்படுவதே இந்தியாவில் இழிவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் தடை செய்யப்பட்டாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் உயர் ஜாதியினருக்கு என்று தனி அடையாளம் வழங்கப்படுவதும், அதே நேரத்தில்தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்டவராகவும், வேலை வாய்ப்புகளில் மட்டுப்படுத்தப்பட்டவர் களாகவும் கையாளப்படுகிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: ஆம். சொல்வேன். ஏனெனில் எங்களுக்கு பாபா சாகேப் அம்பேத்கர், உரிமை, இடஒதுக்கீடு மற்றும் அரசமைப்புச் சட்டத்தை வழங்கியிருக்கிறார். அதனால் நாங்கள் யார் என்பதை பெருமையுடன் நிச்சயம் சொல்வோம். கடவுள் ராமர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அம்பேத்கர்தான் எங்களுக்கு செய்தார். இந்தக் காரணத்திற்காகத்தான் நான் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன்.
கேள்வி: அப்படியென்றால் நீங்கள் கோவில்களுக்கு செல்ல மாட்டீர்களா?
பதில்: இல்லை. அந்த நேரத்தில் பள்ளி சென்று புதிதாக எதையாவது கற்பேன். எங்கள் ஊரில் யாரும் கடவுளை வணங்குவதில்லை. கோவில்களே எங்கள் பகுதியில் கிடையாது.
கேள்வி: உங்கள் வயது?
பதில்: 13 வயதாகிறது
கேள்வி: இந்த சிறுவயதில் எப்படி இவ்வளவு அறிவுடன் பேசுகிறீர்கள்?
பதில்: ஏனெனில் நான் பள்ளிக்கு செல்கிறேன்.
கேள்வி: ஒருவேளை நீங்கள் பள்ளி செல்லாமல் கோவில்களுக்கு சென்றால் என்ன நடக்கும்?
பதில்: நான் கோவில் வாசலில் 2 ரூபாய், 5 ரூபாய் யாசகம் பெறவேண்டிய நிலை ஏற்படும், வேறென்ன நடக்கும்? கோவில்களில் நேரத்தை வீணடிப்பதற்கு பதில் பள்ளிக்கு சென்றால் படிக்கவாவது செய்யலாம்.
இந்த நேர்காணல் இன்னும் சுவாரஸ்யமாக நீள்கிறது.
ஏற்கெனவே வெளியான இந்தக் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. சிறுவனின் இந்தப் புரிதல், கல்வியின் மீது உள்ள ஆர்வம், “கல்விதான் ஜாதி போன்ற தீண்டாமை என்னும் கொடிய நோயை அழிப்பதற்குரிய சரியான ஆயுதமும், கேடயமும்” என்பதை உணர்ந்த சிறுவனின் பகுத்தறிவு பேச்சு மிகவும் பாராட்டுக்குரியது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜாதியின் பெயரால் நடக்கும் கொடூர நிகழ்வுகளும், மரணங்களும், ஒடுக்குமுறைகளும், பட்டியலின பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிப்பும் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்.
கல்வி ஒன்றுதான் பிறப்பால் அனைவரும் சமம் என்பதை பசுமரத்தாணி போல் பதிய வைக்கும் மிகப்பெரிய ஆயுதம். கல்வி மட்டுமே பிறப்பால் மனிதர்களால் சித்தரிக்கப்பட்ட ஏற்றத் தாழ்வுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் தகர்த்தெறிவதற்கான புரிதலை வழங்கும்.
நன்றி: ‘தீக்கதிர்’, 25-1-2024
கோவில்களை விட பள்ளிக்கூடங்கள் தான் முக்கியம்! வாரணாசி சிறுவனின் ‘வைரல்’ பேச்சு

Leave a Comment