நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் சுயநல அரசியலைத் தோலுரிப்போம்!
‘தீக்கதிர்’ டிஜிட்டல் பதிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்.பத்ரியின் சிறப்புப் பேட்டி!
சமூக வலைதளமான ‘தீக்கதிர்’ டிஜிட்டல் பதிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி அளித்துள்ள சிறப்புப் பேட்டி வருமாறு:-
ஜனவரி 22இல் அயோத்தியில் ‘ராமர் ஆலயம்’ பிரமாண்டமாக கட்டப்பட்டு, பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கப் போகிறார்.
இது குறித்து நாடு முழுவதும் இரண்டு விவாதம் நடைபெறுகின்றது. இது அரசியல் நிகழ்ச்சியா? அல்லது ஆன்மிக நிகழ்ச்சியா? என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்தவர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இது முழுக்க முழுக்க ஆன்மிக நிகழ்ச்சி என்று சொல்கிறார்கள். ஆனால், இதனை எதிர்க்கக்கூடிய பல பேர், “பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்காக இந்த ராமர் கோவில் திறப்பை நடத்துகிறார்கள், பயன்படுத்துகிறார்கள்” என்று ஒரு கருத்தை வைத்து கொண்டே இருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக ஏராளமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நான்கு சங்கராச்சாரியார்கள், இவர்கள்தான் இந்து மதத்தினுடைய அடையாளம் என்று சொல்லக்கூடியவர்கள் இவர்கள் நான்கு பேரும், இந்த ஆலயத் திறப்பு விழாவிற்கு வரப்போவதில்லை என்று திறப்பு விழாவை புறக்கணித்து விட்டார்கள்.
அவர்கள் கூறும் காரணம் என்ன?
இது ஒரு அரசியல் நோக்கம்; இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஸோ, பா.ஜ.க.வோ, பிரதமர் மோடியோ “இல்லை, இல்லை இது நாடு முழுவதும் கொண்டாடப் பட வேண்டிய இரண்டாவது சுதந்திரத் திருநாள்” என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதங்களை எல்லாம் விட்டு விடுவோம், இது அரசியலா, ஆன்மிகமா என்ற இந்த விவாதங்களைத் தள்ளி வைத்து விடுவோம். “கேரவன்” இதழானது மிகவும் சுவாரசியமான,- மறைக்கப்பட்ட சில உண்மை களை வெளியிட்டுள்ளது. அது சம்பந்தமாக நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸும், பா.ஜ.க.வும் சொல்கின்ற மாதிரி, இப்போது அமைக்கப்பட்டு இருக்கின்ற அறக்கட்டளை (Trust) ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா. அதுதான் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டிரஸ்ட். இந்த அமைப்பு ஆன்மிக
அமைப்பா? என்றால் இல்லை!
‘கேரவன்’ இதழ் என்ன சொல்கிறது?
அந்த டிரஸ்ட்டின் ஜெனரல் செக்ரட்டரி யார் என்றால் – விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பைச் சேர்ந்த சம்பத் ராய் பன்ஜால், அவர்தான் இதனுடைய ஜெனரல் செக்ரட்டரி. இதனுடைய டிரஸ்டி யார்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோவிந்த் கிரி. அப்படி என்றால் வி.எச்.பி.யும், ஆர்.எஸ்.எஸ்ஸும் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கின்ற ஒரு டிரஸ்ட், எப்படி ஆன்மிக அமைப்பாக இருக்க முடியும்? இதனை விட மிகவும் முக்கியமானது; இந்த ஆலயக் கட்டுமானங்களை முழுக்க முழுக்க மேற்பார்வையிடக்கூடிய பொறுப்பு யாரிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றால், பிரதமருடைய பிரின்ஸ்பல் செக்ரட்டரி நிர்வேந்திர மிஸ்ரா, அவரிடம் தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்தான் முழுக்க முழுக்க இதனைக் கண்காணிக்கிறார். இதன் வேலை களை வழி நடத்துகிறார். அப்படி என்றால் மோடியினு டைய விருப்பத்திற்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற டிரஸ்ட் தான் இந்தக் கோவிலைக் கட்டுகிறது. அப் போது அரசியலுக்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்த மில்லை என்று சொல்லக்கூடிய விவாதம் இந்த இடத் தில் அடிபட்டுப் போகின்றது.
இரண்டாவது முக்கிய மான விஷயம், ‘கேரவன்’ இதழ் வெளிப்படுத்தி இருக்கின்ற முக்கியமான உண்மை என்னவென்றால், இந்த டிரஸ்ட்க்கு இதுவரை எவ்வளவு பணம் சேர்ந் திருக்கிறது? 2019-இல் அமைக்கப்பட்டது இந்த டிரஸ்ட். மோடி முதன் முதலாகப் போய் ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்து, இந்த டிரஸ்ட்க்கான நிதி திரட்டலை ஆரம்பித்து வைத்து இருக்கிறார். மோடி ஒரு ரூபாய் கொடுத்த அந்த ஆண்டில் அந்த டிரஸ்ட்டுக்கு 42 கோடி ரூபாய் சேர்ந்து இருக்கிறது. மூன்றே ஆண்டு களில் 3500 கோடி ரூபாய் அந்த டிரஸ்ட்க்கு பணம் சேர்ந்திருக்கிறது. எப்படி மூன்று ஆண்டுகளில் இந்த டிரஸ்ட்க்கு 3500 கோடி ரூபாய் பணம் கிடைக்கும்.? ‘கேரவன்’ இதழ் என்ன எழுதுகிறது? என்றால், உள் நாட்டில் இருக்கக்கூடிய பணக்காரர்கள் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பணக்காரர்களிட மிருந்து இந்த அமைப்பு மிகப்பெரிய அளவிற்கு நிதியைத் திரட்டி இருக்கிறது என்று எழுதி இருக்கிறது. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், 2019 முதல் 2021 வரைக்குமான இரண்டு ஆண்டுகளில், இந்த மோடியினுடைய பா.ஜ.க. 2000 என்.ஜி.ஓ.க்களையும் – டிரஸ்ட்களையும் தடை செய்கிறார்கள். என்ன காரணம் சொல்லி தடை செய்கிறார்கள்?
நீங்கள் வெளிநாடுகளில் இருந்து நிறைய பணத்தை உள்ளே கொண்டு வருகிறீர்கள், எதற்குக் கொண்டு வருகிறீர்கள் என்று தெரியவில்லை. உங்களுடைய நடவடிக்கைகள் முழுவதும் சந்தேகத்திற்கிடமாக இருக்கிறது- என்ற காரணத்தைச் சொல்லி, 2000-க்கும் மேற்பட்ட என்.ஜி.ஓ.க்களின் டிரஸ்ட்டுகளைத் தடை செய்கிறார்கள். அதே காலத்தில்தான், இந்த ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா (shri ram janma boomi teerth kshetra) என்ற இந்த டிரஸ்ட்டுக்கு 3500 கோடி ரூபாய் பணம் வந்திருக்கிறது. வந்திருக்கின்ற பணத்தில் மிகப்பெரிய அளவிற்கு வெளிநாடுகளில் இருந்தே வந்திருக்கிறது.
இன்னொரு முக்கியமானவிஷயம், இவர்கள் எப்போதுமே சொல்வார்கள், “கருப்புப் பணத்தை நாங்கள்தான் மீட்டோம், வருமான வரி ஏய்ப்பை நாங்கள்தான் தடுத்தோம். ஆகவே தான் அமலாக்கத்து றையோ அல்லது வருமான வரித்துறையோ பெரிய அளவில் வேலை செய்துகொண்டே இருக்கிறது” என்று சொல்வார்கள்.
இதில் மிகவும் முக்கியமான விஷயமாக ‘கேரவன்’ இதழ் என்ன சொல்கிறது?. இந்த 3500 கோடி ரூபாய்க்கு வருமான வரி கட்ட வேண்டும். 30 சதவிகிதம் வருமான வரி கட்ட வேண்டும். வேண்டாம் பத்து சதவிகிதம் என்று எடுத்தால் கூட குறைந்த பட்சம் 350 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும். ஆனால், இந்த டிரஸ்ட் கட்டி இருக்கிறதா? வருமான வரித்துறையை இந்த டிரஸ்ட் மிகப்பெரிய அளவில் ஏமாற்றி இருக் கிறது. எப்படி ஏமாற்ற முடியும்? அதில்தான் இவர்களு டைய மிகப் பெரிய புத்திசாலித்தனத்தைப் பார்க்க முடியும். இவர்கள் 3,500 கோடி ரூபாயை எப்படித் திரட்டி இருக்கிறார்கள் என்றால். ஆலயத்தைப் புனர மைப்பது, ஏற்கனவே இருக்கின்ற கோயில் இடிந்து போய் விட்டது, அதனை நாங்கள் புனரமைப்பு செய்கிறோம், அப்படியென்று சொல்லி நிதி திரட்டி இருக்கிறார்கள். புதியதாக கோயிலைக் கட்ட நிதி திரட்டுகிறோம் என்றால் வருமானவரி கட்ட வேண்டும், ஆனால் புனரமைப்பு செய்கிறோம் என்றால் வருமான வரி கட்ட வேண்டியதில்லை.
உள்நாட்டிலும், வெளி நாட்டிலும்
3,500 கோடி ரூபாய்
மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தி டம் 5 இலட்சம் ரூபாய் நன்கொடை வாங்கி இருக் கிறார்கள். அதற்கு ரசீது கொடுத்து இருக்கிறார்கள். அந்த ரசீதில் புனரமைப்பு என்று இருக்கிறது. ஆலயத் தைப் புனரமைப்பது என்கின்ற பெயரால் மேனாள் குடியரசுத் தலைவர் உட்பட உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் 3,500 கோடி ரூபாய் பணத்தைத் திரட்டி, இந்தியாவின் வருமான வரித் துறையையும் இவர்கள் மிகப்பெரிய அளவிற்கு ஏமாற்றி இருக்கிறார்கள். அந்த மோசடியும்இதில் நடந்திருக்கிறது – என்று ‘கேரவன்’ இதழ் வெளிப்படுத்தியிருக்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்தான், இந்த ராமர் ஆலயம் கட்டுகிறார்கள். அப்படியென்றுதான் இந்தியா முழுவதும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால்? பாபர் மசூதி மட்டுமல்ல; அந்த வளாகத்தில் இருக்கின்ற 12-க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு இருக் கின்றன.
‘பக்கிர் ராம் மந்தீர்’- என்கின்ற கோவில் அங்கே இருக்கிறது. ‘கோசலை பவன்’- என்கிற கோவில் அங்கே இருக்கிறது.
‘கைகேயி காபவன்’- என்கிற கோயில் அங்கே இருந்திருக்கிறது. இப்படி 12 க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் அங்கே இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு கதை இருக்கிறது. 14 ஆண்டுகள் ராமர் வனவாசம் போனார். அவருக்கான உடைகள் எல்லாம் இங்கே இருந்துதான் தைக்கப்பட்டு அனுப்பப் பட்டன – என்ற கதையின் பெயரால் பல கோவில்கள் அங்கே கட்டப்பட்டு இருக்கின்றன. எல்லாக் கோவில் களையும் வலுக்கட்டாயமாக இடித்து இருக்கிறார்கள். இந்த ஆலய இடிப்பை எதிர்த்து ஒருவர் நீதிமன்றம் சென்றிருக்கிறார். அவர் பெயர் சந்தோஷ் பூபே. இவர் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் நீதிமன்றத்தில் மிகவும் சுவாரசியமான வாதத்தை முன் வைத்து இருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்? “இவர்கள் வலுக்கட்டாயமாக எங்கள் கோவில்களை இடித்து கடவுளை வேறு இடத்தில் வைக்கலாம் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் கடவுள்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றம் செய்ய முடியும் என்று சொன்னால், பாபர் மசூதி இருந்த இடத்தை இடித்து விட்டு, ராமருக்கு ஏன் கோயில் கட்ட வேண்டும்? அந்த ராமர் கோவிலை வேறு இடத்தில் கட்ட முடியாதா? அப்படியென்றால் இவர்கள் கட்டக்கூடிய ராமர் ஆலயத்திற்கு ஒரு வாதம், எங்களைப் போன்றோர் வணங்கும் 12-க்கும் மேற்பட்ட ஆலயங்களை இடித்து, எங்கள் கடவுள் களை இடமாற்றம் செய்யக்கூடிய ஒரு மோசமான நடவடிக்கையை இவர்கள் செய்கிறார்கள்.” என்கின்ற வாதத்தை அவர் நீதிமன்றத்தில் எடுத்து வைத்து இருக்கிறார்.
‘கேரவன்’ இதழ் மிகவும் அதிர்ச்சிகரமான இன்னொரு தகவலையும் வெளியிட்டு இருக்கிறது. அது மிகவும் முக்கியமானது. இந்த டிரஸ்ட் இருக்கிறதே, இது கோவிலை மட்டும் கட்டவில்லை, மிகப்பெரிய ரியல் எஸ்டேட் – மாஃபியா தொழிலையும் இந்தக் காலக்கட்டத்தில் டிரஸ்ட்டின் பெயரால் செய்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அங்கே வஃப் வாரியத்தின் நிலம் இருக்கிறது. ஏராளமான தனியார் நிலங்கள் இருக்கிறது. ஆலயத்திற்குச் சொந்தமான பல நூறு ஹெக்டேர் நிலங்கள் இருக்கிறது. எல்லா நிலங் களையும் குறைந்த விலைக்கு வாங்கி, மிக அதிகமான விலைக்கு இந்த ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா – டிரஸ்ட்டுக்கு கை மாற்றி இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் 2006-இல் நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற நில வருவாய்ச் சட்டம் சில வழிகாட்டுதல்களை உள்ள டக்கியதாக இருக்கிறது.
அந்தச் சட்டத்தின் வழிகாட்டுதல்களை எல்லாம் மீறி இந்த நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு அதிகமான விலைக்கு டிரஸ்ட்டுக்கு விற்கப்பட்டு இருக்கிறது. இந்த டிரஸ்டில் இருக்கின்ற பல பேர், இந்த ராமர் ஆலயத்தின் பெயரால் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலைப் பார்த்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை இந்தக் காலத்தில் சேர்த்து இருக் கிறார்கள். இவ்வாறு அதிர்ச்சிகரமான தகவலை ‘கேரவன்’ இதழ் வெளியிட்டு இருக்கிறது. இதனைவிட மிகவும் முக்கியமான விஷயம்.
ஆலய கட்டுமானப் பணியை – அடிக்கல் நாட்டும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைக்கப் போனார். அப்போது அத்வானிக்கு அழைப்பு இல்லை, அன் றைக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் குக்கு அழைப்பு இல்லை, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு இல்லை, உமாபாரதிக்கு அழைப்பு இல்லை. அப்போது கரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரம். இவர் அடிக்கல் நாட்டவிருந்த அந்த நாளில் மட்டும் 852 பேர் கரோனாவால் இந்தியாவில் இறந்துபோய் இருக்கிறார்கள். 52 ஆயிரம் நோயாளிகள் இருந்தார்கள். அன்றைக்குத்தான் இவர் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் போனார். இவர்களுக்கு எல்லாம் அழைப்பு அழைக்கப் படாததற்கு ஒரு காரணம் மோடி தரப்பில் முன் வைக் கப்படுகிறது. என்னவென்றால் கரோனா நோய் பரவிக் கொண்டிருக்கின்றது. இப்போது நீங்கள் எல்லாம் 70 வயதைக் கடந்து விட்டீர்கள். உங்களுடைய எதிர்காலத் தையும், பாது காப்பையும் கருதி நீங்கள் வரவேண்டாம் என்று சொன்னார்கள். சரி இப்போது ஜனவரி 22-க்கு இவர்களைக் கூப்பிடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை! இப்போது என்ன காரணம்சொல்லப்படுகிறது என்றால், அத்வானிக்கோ, ஜோஷிக்கோ, உமா பாரதிக்கோ, கல்யாண்சிங்கிற்கோ அழைப்பில்லை. “இப்போது அயோத்தியில் அதிகமான குளிர் நிலவு கிறது. உங்களுடைய உடல்நலத்தை கணக்கில் எடுத் துக்கொண்டு, நீங்கள் அதிகமான குளிரில் வர வேண்டாம்” என்று சொல்கிறார்கள்.
அன்றைக்கு ஒரு காரணம் சொல்வதற்கும், இன் றைக்கு ஒரு காரணம் சொல்வதற்கும் பின்னணியில் மோடியினுடைய அரசியல் இருக்கிறது. என்ன வென்றால், ஆலயத் திறப்பு விழாவிற்கு அத்வானியும், உமாபாரதியும் வந்தால் அவர்கள்தான் உயரமாகத் தெரிவார்கள், மோடி குள்ளமாகத் தெரிவார். அப்போது அவர்களைத் தள்ளி வைத்துவிட்டு, தான் மட்டுமே இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரனாக இருக்க வேண் டும் என்று மோடியினுடைய ஒரு சுயநல அரசியல் இதற்குப்பின்னால் இருக்கிறது. இப்படி எல்லாவற் றையும் கடந்து, வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த ஆலயக் கட்டுமானத்தை தன்னுடைய அரசியல் வெற்றிக்காக இணைக்கின்ற ஒரு அருவருப் பான அஜெண்டாவாகத்தான் இந்த ராமர் ஆலயத் திறப்பு விழா என்பது இருக்கிறது.
அதானி ஊழலை பார்த்திருக்கிறோம், ரஃபேல் ஊழலை பார்த்திருக்கிறோம், பி.எம்.கேர்ஸ் ஊழலை கேள்விப்பட்டு இருக்கிறோம். – அதேபோல ராமர் ஆலயத்தின் பெயரால் நடைபெற்று இருக்கின்ற பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் என்பது இதற்குப் பின்னால் நாம் பேச வேண்டிய உண்மையாக இருக் கிறது. நம்பக்கூடியவர்களுக்கு ராமர் கடவுள். ஆனால்; மோடி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விற்கு ராமர் ஒரு பிராண்ட் – அவ்வளவுதான்! மக்களால்நம்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு கடவுளை, தனக்கான ஒரு பிராண்டாக மோடி உருவாக்கியிருக்கிறார். இந்த ராமர் என்கின்ற பிராண்டை முன்வைத்து 2024 நாடாளு மன்றத் தேர்தலில் அவர் நிற்கப்போகிறார். அப்போது கடவுளை நம்புகின்றவர்களும் சரி, நம்பாதவர்களும் சரி; ஆன்மிகமும், அரசியலும் இரண்டும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்களும் சரி, இதில் மறைக்கப்பட்டு இருக்கின்ற எல்லா உண்மை களையும் கணக்கெடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் ராமரையும் விட்டு வைக்காத மோடியினு டைய சுயநலத்தைத் தோலுரித்து விவாதிப்பது தான் மிக முக்கியமான பிரச்சினை.
இவ்வாறு ஆர்.பத்ரி “தீ” (தீக்கதிர்) இணையதள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.