கேள்வி 1: சென்னை பெரியார் திடலில் இதற்கு முன் இரண்டு, மூன்று நாள்கள் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழா ஒரே ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறதே?
– பா.விஜயலட்சுமி, சென்னை-14
பதில் 1 : கால நெருக்கடி – தொடர்ந்து பல பணிகள் – தொலைதூரம் தோழர்கள் அவரவர் சென்று திரும்புதல். முதல் நாள் புத்தகக் கண்காட்சி – புத்தக அறிமுகக் கூட்டம் – இப்படி பல நெருக்கடிகள். அடுத்த ஆண்டு குறைந்தது 2 நாள் நடத்த முயற்சிக்கிறோம்.
—
கேள்வி 2: ஜல்லிக்கட்டு விளையாட்டை ஸநாதன விளையாட்டு என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறியிருக்கிறாரே?
– கே.கணேஷ், வந்தவாசி
பதில் 2 : இதன் காரணம் திட்டமிட்ட ஆரிய ஆணவமே – அரைவேக்காடு கூலிப் புலவர்கள் சிலர் குறித்த அபத்தத்தைத்தான் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்தில் ‘பார்ப்பனர் புரோகிதம்’ கூட உள்ளது என்றெல்லாம் இருக்கின்றதே. சங்க கால இலக்கியங்களின் பிற்பகுதியில் ஊடுருவல் ஏற்பட்டதன் விளைவே அத்தகைய கூற்றுகளுக்கான அடிப்படை. அறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூலைப் படியுங்கள். பதில் கிடைக்கும்!
—
கேள்வி 3: அயோத்தியில் இராமன் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு சங்கராச்சாரியார்களின் எதிர்ப்பு தீவிரமாகி வருகிறதே?
– லோ.ஜெகதீஷ், பெங்களூரு
பதில் 3 : சங்கராச்சாரியார்கள் மோடி போன்று பிரதமர் ஆகக் கூடாது – ஆக முடியாது என்பது போலவே, பிரதமர் மோடியும் சங்கராச்சாரியார்களாகிவிட முடியாது – கூடாது என்பதலாயே இந்த நிலை! சங்கராச்சாரியார்களை ஹிந்து விரோதிகள் என்று காவிகள் கூறுவார்களா?
—
கேள்வி 4: சென்னையில் நடந்த அரசுப் பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடிய பிறகு, சமூகநீதிப் பாடல் பாடுவதற்கு ஏதுவாக பள்ளிக் கல்வித்துறை வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது கையொலி எழுப்பி வரவேற்க வேண்டிய விடயம் அல்லவா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில் 4 : நிச்சயமாக – எளிமையாக சமூக நீதி பாடலை சுருக்கமான வரிகளில் “அனைவருக்கும் அனைத்தும்” என்பதை மய்யமாகக் கொண்டு அமைப்பது அவசியம்!
—
கேள்வி 5: ‘‘புற்றுக்குள் ஓடி ஒளிந்துகொண்ட பாம்பு போன்று” சிறிது காலம் இருந்த தமிழ்நாடு ஆளுநர் என்கிற பாம்பு, மீண்டும் தன்னுடைய விஷத்தைக் கக்குகிறதே?
– மு.இளங்கோ, கன்னியாகுமரி
பதில் 5 : விஷப்பல்லை – உச்சநீதிமன்றம் போன்றவை கூட வேடிக்கை பார்க்கிறதோ என்று மக்களுக்கு சந்தேகம் ஏற்படும் முன்னர் சட்டப்படி இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால் மக்கள் கிளர்ந்தெழும் நிலை உருவாகக் கூடும்.
—
கேள்வி 6: அயோத்தியில் ராமன் கோவில் திறப்புக்குப் பின் என்ன நடக்கும்? தங்கள் கருத்து என்ன?
– திவ்யபாரதி, அரும்பாக்கம்
பதில் 6 : தேர்தல் பிரச்சாரம் – உ.பி.யில் ஜனவரி 25 முதல் பிரதமர் மோடியால் நடக்கும் – புரிகிறதா? அறிவிப்பு வந்துவிட்டது – பூனைக்குட்டியும் வெளியே வந்துவிட்டது.
—
கேள்வி 7: இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? தேர்தலுக்குப் பிறகும் அக்கூட்டணி இணைந்திருக்குமா?
– ஓவியன், பழனி
பதில் 7 : நிச்சயம்! வெற்றி பிரகாசமாக உள்ளது. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களின் அதிருப்தி பெருகி வருகிறது. “ராமன் மயக்க பிஸ்கட்” செல்லுவதும் கடினம்! இம்முறை ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையும் உறுதிப்பட்ட ஒன்று.
—
கேள்வி 8: விவசாய நிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறிவருவது எதிர்காலத்திற்கு நல்லதா?
– செல்வம், செங்கல்பட்டு
பதில் 8 : நல்லதல்லதான் – என்றாலும் வீடுகளை வாங்க வருகிறவர்களும், விவசாயிகளும் குடும்பத்தவர்களாகத்தானே இருக்கிறார்கள். அவரவர்களுக்குரிய சூழ்நிலைகளையும் அலட்சியப்படுத்த முடியாதே!
—
கேள்வி 9: தமிழ்நாட்டில் தமிழ் மொழியை அதிகம் வளர்த்தது அறிஞர் அண்ணா – கலைஞர் – எம்.ஜி.ஆர். மூவரில் யார்?
– மு.அப்பு, செவ்வாய்ப்பேட்டை
பதில் 9 : ஒவ்வொருவரின் பங்கும் ஒவ்வொரு வகையில், எதனை எடுத்துக் காட்ட? தனிக் கட்டுரையே எழுத வேண்டும்!
—
கேள்வி 10: தேய்ந்த தெற்கு இப்பொழுது வளர்ந்துவிட்டதா?
– தீ.திருமேனி, திருவண்ணாமலை
பதில் 10 : திராவிடத்தால் எழுகிறது; டில்லியால் தொய்வு – நாளும் வளர்கிறது என்பதே எதார்த்தம்!