ராமன் கோயிலை அரசியலுக்குப் பயன்படுத்துவதா?
ராமன் சிலையை மோடி தொடலாமா? சாஸ்திரத்திற்கு எதிரானது! சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு!
புதுடில்லி, ஜன. 18- அயோத்தியில் ராமன் கோயிலில் பிரதமர் நரேந் திர மோடி, ராமன் கிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்வது சாஸ்திர விரோதம் என்று சங்கராச் சாரியார்கள் போர்க்கொடி தூக்கி யுள்ளனர்.
மேலும் ராமனை மய்யப்படுத்தி அரசியல் செய்வதை ஏற்க முடியாது என்றும் சங்கராச்சா ரிகள் கூறியுள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப் பைத் தொடர்ந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ராமன் கோவில் கட்டும் பணிகள் தொடங்கின. இதற்கு பிரதமர் மோடிதான் அடிக்கல் நாட்டினார். உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கின. இதில், பல்வேறு நிலமோசடி, நிதி மோசடி புகார்களும் எழுந்தன. எனினும், அவை கமுக்கமாக அமுக் கப்பட்டன. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட் டன.
கட்டுமானம் முடிவதற்கு முன்பே திறப்பு விழா
மொத்தம் நான்கு தளங்களைக் கொண்ட ராமன் கோவிலின் கட்டுமானப் பணியில், தற்போது இரண்டு தளங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
எனினும், 2024 தேர்தலில் இந்துமத உணர்வைத் தூண்டி எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக் கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், கோவில் கட்டுமானம் பாதி மட்டுமே முடிந்திருந்தாலும், அதனை தேர்தலுக்கு முன்பாகவே திறப்பது, அதிலும் ஜனவரி 22 அன்று பிரதமர் மோடி கைகளினாலேயே ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வது என்று திட்டமிட்டு, அது தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.
மதத் தலைவர்கள் – சங்கராச்சாரிகள் எதிர்ப்பு
ஆனால், இதற்கு இந்து மதத் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரைகுறையாக கட்டப்பட்டுள்ள ராமன் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைப்பது சாஸ்திரங்களுக்கு எதிரானது; அதிலும் பிரதமர் மோடியே நேர டியாக சிலையை பிரதிஷ்டை செய்வது, அரசியல் லாபத்திற் கானது; இது அனைத்தும் தெரிந் தும், விஸ்வ ஹிந்து பரிஷத் கோயில் திறப்பில் தீவிரம் காட்டி வருகிறது என்று தங்களின் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, ராமன் கோவில் கும் பாபிஷேக விழாவில் பங்கேற்கப் போவ தில்லை என அறிவித்துள்ள பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, “கோவிலில் சிலையை தொட்டு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வார், நான் அங்கு சென்று கை தட்டிக் கொண்டு இருக்க வேண்டுமா? அயோத்தியில் பிரதமரே அனைத்தையும் செய்து விட்டால் மத குருமார்களுக்கு செய்வதற்கு மிச்சம் என்ன இருக் கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.
ஸநாதன தர்மத்தை மதிப் பதற்கும், மதச்சார்பற்ற தலைவராக பிரதமர் தன்னை சித்தரித்துக் கொள் ளாமல் இருப்பதற்கும் பாராட்டுகள். ஆனால், மதகுருமார்கள் செய்யும் யோகாவையும் பிரதிஷ்டை விழா முதற்கொண்டு அனைத்தையும் பிரதமரே செய்து விடுகிறார்” என்று கொந்தளித்துள்ளார்.
அரசியல் தலைவரே மதத்திற்கும் தலைவரானால் நாங்கள் எதற்கு?
உத்தரகாண்ட் சங்கராச்சாரி யார் சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ்வதியும், “அரசியல் லாபத்திற் காக மட்டுமே அரைகுறையாக கட்டப்பட்டுள்ள ராமன் கோவில் திறக்கப்படுகிறது.அயோத்தி ராமன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பாரம் பரியத்தை பின்பற்றவில்லை. இந்தி யாவை பொறுத்தவரையில் மன்னர் களும் மதகுருமார்களும் வேறு வேறு ஆட்களாகவே இருந்துள் ளனர்.
ஆனால், தற்போது, அரசியல் தலைவர், மதத்தின் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார். இது பாரம் பரியத்துக்கு எதிரானது. அரசியல் லாபத்திற்காக செய்யப்படுகிறது” என்று கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், “ஜனவரி 22 அன்று அயோத்தியில் நடைபெறும் ராமன் கோவில் திறப்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை. இந்த நிகழ்வை நடத்துவதற்கான முறையான விதிமுறைகள் பின் பற்றப்படவில்லை.
பிரதமர் மோடி கருவறையில் இருந்து சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்கிறார். இதில் ஏதோ அரசியல் இருக்கிறது, அதாவது இந்த நிகழ்வுக்கு ஏதோ ஓர் அரசி யல் கோணம் கொடுக்கப்படுகிறது. கண்ணியமான முறையில் இந்த நிகழ்வு நடத்தப்பட வேண்டும்.
நான் அதை எதிர்க்கவும் இல்லை, அதில் கலந்து கொள்ளவும் மாட் டேன். நான் எனது கருத்துகளை முன்வைத்துள்ளேன், அனைத்து நிகழ்வுகளும் சுமூகமாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.
ராமன் கோவில் பற்றிப் பேச சைவர்களுக்கு உரிமையில்லை
இவ்வாறு அயோத்தியில் ராமன் கோவில் திறப்பு விழா சாஸ்திர, சம்பிரதாயங்களை மீறி நடப்பதாக சங்கராச்சாரியார்கள், இந்து மதத் தலைவர்களிடமிருந்து வலுவான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அது பற்றி தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை; யார் எதிர்த்தாலும் ராமன் கோவில் திறப்பு விழாவை நடத்தியே தீரு வோம்; ராமன் சிலையை மோடி தான் பிரதிஷ்டை செய்வார் என்று விஎச்பி மூத்த தலைவரும், ராமன் கோவில் அறக்கட்டளைப் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் கூறியுள்ளார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று, “அயோத்தி ராமன் கோவில், ராமா னந்த் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கே சொந்தம். சங்கராச்சாரியார்களோ சைவர்களோ சொந்தம் கொண் டாட முடியாது” என்று அதிரடி யாக கூறி, இந்து மதத் தலைவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள் ளாக்கியுள்ளார்.
11 நாள் விரதத்தை ஆரம்பித்தாராம் மோடி
இதனிடையே, “ராமன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இன்னும் 11 நாள்களே உள்ளன. இந்த மங்கலகரமான நிகழ்விற்கு நானும் சாட்சியாக இருப்பது எனது நல் வாய்ப்பு. ராமன் கோவில் குட முழுக்கு நிகழ்வின்போது அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் கருவியாக என்னைக் கடவுள் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதனை மனதில் வைத்து 11 நாள்களுக்கு சிறப்புப் பிரார்த்தனை பயிற்சியை (விரதம்) மேற்கொள்ள உள்ளேன். இந்த தருணத்தில் எனது உணர்வு களை வார்த்தை களால் விவரிப்பது மிகவும் கடின மாக உள்ளது” என்று பிரதமர் மோடி டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் நெக்குருகியுள்ளார்.
ராமனை அரசியல் கருவியாக்கிய பாஜக; விழாவைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
ராமன் கோவில் திறப்பு விழா விற்கு வருமாறு அறக்கட்டளை நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், “இந்திய ஆட்சி அதி காரத்தின் அடிப்படைக் கொள் கையானது, இந்தியாவில் அரச மைப்புச் சட்டத்தின் கீழ் அமைந் துள்ள அரசு, எவ்விதமான மதத் தையும் சார்ந்து இருக்கக் கூடாது என்பதாகும்.
ஆனால், இது ஆளும் தரப்பின ரால் இந்த நிகழ்வில் மீறப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு மதக் கொண்டாட்டத்தை, பிரதமர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் நேரடியாகவே சம்பந்தப்பட்டு அதனை ஓர் அரசு நிகழ்ச்சியாக ஆர்.எஸ்.எஸ்., -பா.ஜ.க. மாற்றி யிருப்பது மிகவும் கெட்ட வாய்ப் பாகும். எனவே, இந்த நிகழ்வில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக கடந்த டிசம்பர் 26 அன்று அறிவித்தது.
அதைத்தொடர்ந்து, ஏனைய பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, சிவசேனா அனைத்துக் கட்சிகளும் ராமன் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.