‘‘நான்கு சங்கராச்சாரிகளும் – பிரதமர் மோடியும்!” ”உண்மையான ஹிந்து தர்ம விரோதி மோடிதான்!”

viduthalai
3 Min Read

‘‘ஊசிமிளகாய்”

‘‘நான்கு சங்கராச்சாரிகளும் – பிரதமர் மோடியும்!” ”உண்மையான ஹிந்து தர்ம விரோதி மோடிதான்!”
– இப்படி குற்றம் சாட்டி ஸநாதன கோர்ட்டில் கூண்டில் ஏறி நிற்கச் சொல்லும் குற்றவாளி யார் தெரியுமா?

தி.க.வோ, தி.மு.க.வோ அல்லவே!
உதயநிதி ஸ்டாலினோ, வீரமணியோ அல்ல!

பின் யார்?

கட்டி முடிக்கப்படாத அயோத்தி இராமன் கோவிலில் 22 ஆம் தேதி (இன்னும் நாலே நாள்களில்) ‘பிரான் பிரதிஷ்டை’ செய்யவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான் என்று கூறியதோடு, கடவுளின் தலை, கண்கள் இல்லாமலேயே ‘பிரதிஷ்டை’ நடத்துவது சரியல்ல என்று அவசர ராமன் கோவில் திறப்புக்கு எதிர்ப்பு காட்டும் நாலு திசையிலும் ஆதிசங்கரரால்

நிறுவப்பட்ட சங்கர மடங்கள்:
(கிழக்கு) ஒடிசா மாநில பூரியின் கோவர்த்தன் பீடம்
(மேற்கு) குஜராத் மாநில துவாரகா பீடம்
(வடக்கே) உத்தரகாண்ட் ஜோதிர் மட பீடம்
(தெற்கே) சிருங்கேரி சாரதா பீடம்
(காஞ்சி மடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடம் அல்ல; அது பழைய கும்பகோணம் மடம் – பிறகு காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டு, அரசியல் செல்வாக்குக் காரணமாக தன்னை உயர்த்தி, பிறகு ஒப்பனை கலைக்கப்பட்ட டூப்ளிகேட் மடம்).

‘‘ஸநாதன விரோதிகள்” என்று முத்திரை இப்போது! மதத்திற்குரிய – ஹிந்து தர்மம், ஸநாதனம் விளக்கத் தகுதி படைத்தவர்களாக சொல்லப்பட்டு ஒப்புக்கொள்ளப்படும் இந்த ‘லோக குருக்கள்’ கூற்று இராமன் சிலை பிரதிஷ்டைபற்றி என்ன தெரியுமா?

தொடர்ந்து தங்களது கண்டனக் கணைகளை வீசி, எதிர்ப்பைக் காட்டி, ‘‘இராமன் கோவில் திறப்பில் இப்படி பிரதமர் மோடி செய்வதை ஏற்க முடியாது; இது ஹிந்து தர்ம விரோதம் அதாவது ஸநாதன விரோதம்” என்று கூறி, புறக்கணிக்கிறோம் என்று கூறி, தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிய வைத்து, இந்த இராமன் உண்மையான அயோத்தி இராமன் அல்ல – அவசர கால

‘தேர்தல் ஏஜெண்ட் இராமன்’ என்று பளிச்சிட்டு – பாரறிய கூறுகின்றனர்!
(முழு அறிக்கை, பேட்டி 2 ஆம் பக்கம் காண்க).

1. ‘‘கோவிலை இன்னும் கட்டி முடிக்கவில்லை; கட்டுமானப் பணிகள் முழுமை பெறவில்லை. முழுமையடையாத கோவிலில் தெய்வத்தின் சிலை நிறுவுவது மத சாஸ்திரங்களுக்கு விரோதமானது. இராமன் கோவில் அறக்கட்டளையிடம் எமது பீடம் இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளது!”

2. ‘‘கோவில் என்பது கடவுளின் உடல் போன்றது. கோவிலின் மேற்குப் பகுதி கடவுளின் கண்களைக் குறிக்கிறது. ‘கலசம்’ என்பது கடவுளின் தலையைக் குறிக்கிறது. கோவில் கொடி, கடவுளின் முடியைக் குறிக்கிறது.
கடவுளின் தலையில்லாமலோ, கண்கள் இல்லாமலோ உடலுக்கு மட்டும் பிரதிஷ்டை நடத்துவது மத சாஸ்திரத்திற்கு விரோதமானது.”

3. ‘‘நரேந்திர மோடி தனது காசி வழித் தடத்திற்காக பல நூறாண்டுகள் பழைமையான கோவில்களை இடித்து அதில் இருந்த சிலைகளைக் குப்பையில் போட்டார்.”

4. ‘‘பிரதமர், ராம் லல்லா சிலையை (குழந்தை இராமர் சிலை) நிறுவும்போது, நாங்கள் வெளியில் அமர்ந்து கைதட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?”

5. ‘‘கும்பாபிஷேக விழாவில் மதச் சார்பற்ற அரசு பங்கேற்கவேண்டும் என்பதற்காக, பாரம்பரியத்தை அழிக்கவேண்டும் என்பது அர்த்தம் அல்ல.” இப்படி பூரி சங்கராச்சாரியார் வில்லிலிருந்து கிளம்பிய அம்பாக, தொடர் கேள்விகளை பிரதமருக்குக் கேட்டிருப்பது,
ஸநாதன எதிரிகள் இப்போது யார்?

உண்மை ஹிந்து எதிரி பிரதமர் மோடிதானே!
இராமர் கோவிலை தேர்தல் அறிவிப்புக்கு முன் திறக்க, அவசரப் பிரகடனம் போல செய்து வருவது ஏன்?

சூட்சமம் புரிகிறதா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *