நகல் : 12.01.2024 – W.A.No.188 of 224
வழக்கின் பின்னணியும் நீதிமன்றத் தீர்ப்பும் – சாரம்
தமிழ்நாடு அரசு வழங்கிய ‘பெரியார்’ விருதுக்கு எதிராக தனி நபர்
தொடுத்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் பேருரையாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘பெரியார் விருது’ வழங்கி பெருமைப்படுத்தியது. விருது வழங்கப்பட்டதற்கு எதிராக விருதுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் ஒருவரான டி.சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை (Writ) வழக்கு தொடுத்திருந்தார். விருது பெறுவதற்கு முறையாக விண்ணப்பம் அளிக்கவில்லை யென்பது மனுதாரரின் வாதமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனி நீதிபதி முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட மனு (Writ Petition No.34261 & 2023) தள்ளுபடி செய்யப்பட்டது.
தனி நீதிபதி தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்ற அமர்விற்கு டி. சேகர் மேல் முறையீடு செய்தார். அதனை இரு நீதிபதிகள் அமர்வு (மாண்பமை தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்கபுர்வாலா, மாண்பமை நீதிபதி டி. பரசு சக்கரவர்த்தி) விசாரித்து மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
12.01.2024 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் சாராம்சம் பெரியார் விருதுக்கு விண்ணப்பித்திருந்த 24 பேரில் மேல் முறையீட்டாளரும் ஒருவர் – பெரியார் விருது பெற் றவர் 25.10.2022 அன்று விண்ணப்பித்து இருந்தார். விருது பெற்றவர் விண்ணப்பித்திருந்ததை தனி நீதிபதியே தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். மேல்முறையீட்டாளர் விருது பெறுவதற்கு தமது எழுத்துப் பணிகள் பற்றிய விவரங் களைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விண்ணப்பதாரரின் எழுத்துப் பணிகள் குறித்தும் ‘ரிட்’ மனு விசாரணையில் பரிசீலிக்க முடியாது.
மேலும் விருது வழங்குவதில் விதிகள், விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனும் மேல் முறையீடு குறித்து – எந்த விதியும், விதிமுறையும் முன் வைக்கப்பட வில்லை. மேல் முறையீட்டாளருக்காக வாதாடிய வழக்குரைஞர் கூறிய விருது வழங்கப்படுவதற்கான எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை என்பது குறித்து ‘மேல் முறையீட்டில் எந்த வேண்டுதலும் இல்லை’. எனவே அதற்குரிய வேண்டுதல் மனு வைக்கப்படும் பொழுது அதுபற்றி நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும்.
மேற்கூறிய விளக்கங்களால், ‘ரிட்’ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது.
மேற்கண்ட தீர்ப்பின்படி 2022ஆம் ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு முடிவுக்குவந்தது.