புதுடில்லி, ஜன. 13- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ப தால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர்திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்த லுக்கு பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.மத்தியில் ஆளும் மோடி அரசு தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்ய உள்ள கடைசி பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இடம் பெறும் குடியரசுத் தலைவர் உரையில் அரசின் சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை இடம் பெறும் என்று தெரிகிறது.
மணிப்பூரில் காட்டுத் தர்பார்!
விறகு வெட்டச்சென்ற
மூன்று பேர் பிணமாக மீட்பு
இம்பால், ஜன. 13- மணிப்பூரில் காட்டுக்குள் விறகு வெட் டச் சென்ற 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த 9 மாதங்களாக கலவரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்தக் கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டு விட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த மாநில காவல்துறையினருக்கு உதவியாக ஆயிரக்கணக்கான ஒன்றிய படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அங்கு வன்முறை நிகழ்வுகள் ஓய்ந்தபாடில்லை.
இந்த சூழலில் மணிப்பூரின் பிஷ்னுப்பூர் மாவட்டத்தில் உள்ள அகசோய் பகுதியை 4 பேர் 10.1.2024 அன்று அண்டை மாவட்டமான சுராசந்த்பூரில் உள்ள காட்டுக்குள் விறகு வெட்ட சென்றனர். மதிய நேரத்தில் சென்றவர்கள் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது பற்றிய தகவல் கிடைத்ததும் காணாமல்போன நபர்களை தேடி காவல்துறையினர் காட்டுக்குள் சென்றனர்.
இந்த நிலையில் காட்டுக்குள் விறகு வெட்ட சென்று காணாமல்போன 4 பேரில் 3 பேர் 11.1.2024 அன்று பிணமாக மீட்கப்பட்டனர். மற்றொருவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. 3 பேரும் பயங்கரவாதிகளால் கொல்லப் பட்டிருக்கலாம் என தெரிவித்த காவல்துறையினர் காணாமல்போன மற்றொரு நபரை தொடர்ந்து தேடி வருவதாக கூறினர். இதனிடையே சுராசந்த்பூர் மற்றும் தெங்னவுபால் ஆகிய 2 மாவட்டங்களில் வன்முறை பாதித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.