*தி.மு.க. மகளிரணி சார்பில் சென்னையில் கூட்டப்பட்டு அகில இந்திய மகளிர் தலைவர்களைப் பங்கேற்கச் செய்த செயல் பாராட்டுக்குரியது!
*ஒன்றிய பிஜேபி அரசின் 33% பெண்கள் இடஒதுக்கீடு என்பது ஒரு ஏமாற்று வேலையே!
*நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமைக்காகப் போராடினார்
தந்தை பெரியார் என்பதை பிரியங்காவும் மற்றும் பலரும் நினைவு கூர்ந்தது வரவேற்கத்தகுந்தது
அகில இந்திய அளவில் மகளிர் முன்னணித் தலைவர்களை எல்லாம் அழைத்து – தி.மு.க. மகளிரணி சார்பில் சென்னையில் கூட்டப்பட்ட மாநாடு பாராட்டத்தக்கது. இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்பது பற்றிச் சிந்தித்து கருத்துப் போர் நடத்தியவர் தந்தை பெரியார் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டது வரவேற்கத்தக்கது. பெண்களுக்குச் சொத்துரிமை அளித்தது தி.மு.க. அரசும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுமே! 2024 மக்களவைத் தேர்தலில் 50 விழுக்காடுள்ள பெண்களின் வாக்கு “இந்தியா கூட்டணிக்கு” மகத்தான அளவில் கிடைக்கும். இந்திய கூட்டணிக்கு வெற்றி உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மகளிர் நம் நாட்டு மக்கள் தொகையில் சரி பகுதியினர்.
140 கோடி இந்திய மக்கள் தொகையில் 70 கோடி பேருக்கு மேற்பட்டவர்கள்.
வாக்களிக்கும் வாக்கு வங்கியிலும் அவர்கள் 50 விழுக்காட்டினர்.
என்றாலும், அவர்களுக்குரிய பாலியல் நீதியோ, சமூக நீதியோ, உரிய வகையில் – போதிய அளவில் (Adequate) இந்த 75 ஆண்டு சுயராஜ்யத்தில் கிட்டவில்லை.
பெண்களுக்கு சொத்துரிமை
சட்டம் வந்தது எப்போது?
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்ற விடவில்லை – அதனாலேயே அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகி வெளியேறினார். பிறகு 2005இல் தி.மு.க. பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் தி.மு.க.வின் பேராதரவுடன் அந்த சொத்துரிமைச் சட்டம் – பெரியார் அம்பேத்கர் விழைவு சட்டமாகி செயலுருக் கொண்டது வரலாறு ..
அதற்கு முன்பே முதலமைச்சர் கலைஞர் தமிழ் நாட்டில் மகளிருக்கு சொத்துரிமை சட்டம் கொணர்ந்து நிறைவேற்றி தந்தை பெரியாரின் செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டின் தீர்மானத்தை – மகளிர் பயனுறு உரிமைச் சட்டமாக்கினார்.
இந்தியாவுக்கு எப்பொழுதும் வழி காட்டுவது ‘திராவிட மாடல்’ அரசே!
இந்தியாவுக்கே எப்போதும் வழிகாட்டும் கலங்கரை விளக்கு தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சிதானே!
ஆனால் “நாரி சக்தி கடவுள் சக்தி” என்று கூவிக் கொண்டே, தேர்தல் உத்தியாக இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கு 33 சதவிகித நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி இடஒதுக்கீடு – சமூகநீதி பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்களுக்கு வழங்கிய சமூகநீதி இல்லாத ஒருசட்டம், வெறும் “மாயமான் வேட்டையாகவும், பயனில்லாத கானல் நீர் போன்றும் சட்டம் நிறைவேறியது; ஆனால், அதன் அமல் எத்தனை ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு வரும் என்பது உறுதியாக கூற முடியாது.
காரணம் (1) பொதுக் கணக்கெடுப்பு (Census) முடிய வேண்டுமாம்.
(2) தொகுதி மறுவரையறை முடிய வேண்டுமாம்.
என்னே மோசடி! எவ்வளவு ஏமாற்று வித்தை!!
இதையெல்லாம் அனைத்திந்திய மகளிரும் உணர்ந்துள்ளதால் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சியை – மோடி ஆட்சியை வரவிடாமல் செய்து, ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்து – அந்த ஆட்சி வந்தவுடன், அந்த இரண்டு நிபந்தனைகளை விலக்கி விட்டு உடனடியாக மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை எழுந்து நடமாடச் செய்வோம் என்ற உறுதியை சென்னையில் நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் விழைவுப் படியும், ஆணைப்படியும், தி.மு.க.வின் மகளிர் அணி பொறுப்பாளர், துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர், பகுத்தறிவுக் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த சென்னை மகளிர் உரிமை மாநாடு வரலாறு படைத்துள்ளது!
சென்னையில் மகளிர் உரிமை மாநாடு –
ஏற்பாடு பாராட்டத்தக்கது!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் மகளிர் உரிமைப் போராளிகளான மகளிர் அணி தலைவர்களை அழைத்து, அதில் முழங்க வைத்தது – ஒரு புதிய வெளிச்சத்தை, கூடு தல் நம்பிக்கையை அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது!
புதிய விடியலுக்கான வெள்ளி முளைக்க வேண்டுமானால், அது மகளிரால் மட்டுமே முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தி விட்டார்கள்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் சீரிய தலைவர் திருமதி சோனியா அம்மையார் – இவர் பிரதமர் பதவியை மறுத்த தியாகச் செம்மல் மற்றும் காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா, மராத்திய தேசிய வாத கட்சி எம்.பி. சுப்பிரியா சுலே, பீகாரில் இருந்து லெஷிசிங், டில்லி சட்டப் பேரவைத் துணைத் தலைவர் ராக்கிபிட்லன், உத்தரப்பிரதேசம் மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் இணையர் டிம்பிள் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் மகளிரணி தேசியத் தலைவர் ஜூஹி சிங், மம்தாவின் பிரதிநிதியாக சுஷ்மிதா தேவ், இடதுசாரி இயக்கங்கள் சார்பில் சுபாஷினி அலி, ஆனி ராஜா உள்பட பலரும் கலந்து கொண்டு பெரியார் மண்ணில் கருத்தாழத்துடன் சூளுரை செய்தனர்!
தந்தை பெரியாரின் சிந்தனையை பெருமையுடன் நினைவூட்டிப் பேசிய பிரியங்கா காந்தி
பெரியார் தம் தொண்டறமும் முன்னோட்டமும் எப்படி ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் உரிமைக் குரலுக்கு அடி எடுத்து உணரச் செய்தது.
“பெண் ஏன் அடிமையானாள்” என்று கேட்டவர் தந்தை பெரியார் என்று பிரியங்கா முழங்கியதைக் கேட்டு நெஞ்சம் பூரிக்கிறது.
பிரியங்கா காந்தி அதனை முக்கியமாகக் குறிப்பிட்டது – வரவேற்கத்தக்கது.
பெரியார் ஒரு சமுதாய விஞ்ஞானி, ஓர் போராயுதம் என்பதை பிரகடனப்படுத்திக் கொண்டு சரியான நேரத்தில், சரியான ஆயுதத்தை எறிந்து களமாட அழைப்பு விடுத்துள்ளது – ‘இந்தியா’ கூட்டணி என்பதை கண்டு உவகையுடன் பாராட்டி மகிழ்கிறோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
இதற்குக் காரணமான ‘திராவிட மாடல்’ முதல் அமைச்சர் அவர்களையும், கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்களையும் தி.மு.க. மகளிரணி உடன் பிறப்புகளையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ என்று புறநானூற்று மகளிர் போல புறப்பட போர்ச் சங்கு ஊதி விட்ட மகளிரே! உங்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
களமாட வந்துள்ள நீங்கள் 2024 தேர்தலில் வெற்றி வாகை சூடிட ஆயத்தமாகி விட்ட அறைகூவல் நிச்சயம் வெற்றிக் கனியைப் பறிக்கும். காரணம் நீங்கள் பெரியார் என்ற சரியான ஆயுதத்தைக் கையில் எடுத்து விட்டீர்கள்!
நம் முதலமைச்சர் அவர்களும் அதற்கு வழி காட்டும் நெறியாளராக இன்று இருப்பது, வெற்றியை நிச்சயம் உறுதி செய்யும் – வெற்றி இந்தியா கூட்டணிக்கே!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
16.10.2023