சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் தொடங்கப்பட்டதே – பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் வேறுபாட்டால்தான்!
தந்தை பெரியார் காங்கிரசைவிட்டு விலகியதற்கும் – திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்ததற்கும் இந்த சேரன்மாதேவிதான் காரணம்!
இந்த உணர்வோடு வரும் தேர்தலில் பி.ஜே.பி.யை வீழ்த்தி – ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறப் பாடுபடுவோம்!
திருநெல்வேலி, அக்.17 சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் தொடங்கப்பட்டதே – பார்ப்பனர் – பார்ப் பனரல்லாதார் வேறுபாட்டால்தான்! தந்தை பெரியார் காங்கிரசைவிட்டு விலகியதற்கும் – திராவிட இயக்கத் தைத் தோற்றுவித்ததற்கும் இந்த சேரன்மாதேவிதான் காரணம்! இந்த உணர்வோடு வரும் தேர்தலில் பி.ஜே.பி.யை வீழ்த்தி – ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறப் பாடுபடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா – பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழா ‘‘தாய்வீட்டில் கலைஞர்” நூல் வெளியீட்டு விழா
நேற்று (16.10.2023) மாலை திருநெல்வேலியில் நடை பெற்ற சேரன்மாதேவி நூற்றாண்டு விழா – பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழா – ‘‘தாய் வீட்டில் கலைஞர்” நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேருரையாற்றினார்.
அவரது பேருரை வருமாறு:
எழுச்சியோடு நடைபெறக்கூடிய சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா – திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தொண்டர், தோழர், கொள்கை வீரர், அறச்செம்மல் அய்யா பத்தமடை பரமசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழா – ‘‘தாய்வீட்டில் கலைஞர்”, ‘‘வைக்கம் போராட்ட வரலாறு”, ‘‘சேரன் மாதேவி குருகுலப் போராட்ட வரலாறு” நூல்கள் வெளி யீட்டு விழாவிற்கு வருகை புரிந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால்…
இந்நிகழ்ச்சிக்காக அவருடைய நேரத்தை ஒதுக்கி, இங்கே வந்து மிக அற்புதமான ஓர் உரையை ஆற்றி அமர்ந்திருக்கக் கூடிய அமைச்சர் – இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால், அவர்கள் எப்படியெல்லாம் வருவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள நிதியமைச்சர் அவர்களைச் சொல்லலாம்.
நிதியமைச்சர், இதற்குமுன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் – அதற்குமுன் தொழில்வளத் துறை அமைச்சர் – உலகம் முழுவதும் சென்று, தமிழ்நாட்டில் தொழில்வளத்தை உண்டாக்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார்.
அதேபோன்று தமிழ்த்துறையில், கீழடி ஆய்வா? மற்ற இடங்களா? என்று பல வகைகளில் பணியாற்றி, கலைஞர் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றார்; அதேபோல, கலைஞருடைய நம்பிக்கையைவிட, அதிக நம்பிக்கையை, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்ற நம்முடைய மாண்புமிகு மானமிகு நிதியமைச்சர் அருமைச் சகோதரர் தங்கம்தென்னரசு அவர்களே,
‘வீழா நாயகர்’ – என்றைக்கும்,
யாராலும் வீழ்த்தப்பட முடியாத நாயகர்!
விழா நாயகர், ‘வீழா நாயகர்’ – என்றைக்கும், யாராலும் வீழ்த்தப்பட முடியாத நாயகராக, கொள் கையில் தனித்தவராக இருக்கக்கூடிய நம்முடைய விழா நாயகர் 97 வயது இளைஞர் அய்யா பத்தமடையார் அவர்களே,
மற்றும் குழுமியுள்ள பெரியோர்களே, நண்பர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதைவிட, நம்முடைய அமைச்சர் அவர்கள், இந்தத் தேதியை கொடுத்தது மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு.
இன்றைக்கு இரண்டு கடல்களில்
பயணம் செய்து கொண்டிருக்கின்றார்!
அது சாதாரணமானதல்ல; ஏனென்று கேட்டால், அவர் இன்றைக்கு இரண்டு கடல்களில் பயணம் செய்து கொண்டிருக்கின்றார். அவருக்கு ஒப்படைத்திருக்கின்ற துறைகளில் ஒன்று நிதித்துறை; இன்னொன்று மின்சாரத் துறை.
மின்சாரத் துறை ‘ஷாக்’ அடிக்கக்கூடிய துறை; நிதித் துறை, மிகப்பெரிய அளவிற்கு பற்றாக்குறை உள்ள, பற்றாக்குறை துறையாகும்.
எவ்வளவு போராடிக் கொண்டிருக்கின்றார் என்பதை, சில நாள்களுக்குமுன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொடரில் அருமையாகச் சொன்னார்கள். மாற்றாந்தாய் மனப்பான்மை எப்படி இருக்கும்? எப்படி நாங்கள் நடத்தப்படுகிறோம்? என்பதை புள்ளி விவரங்களோடு சொன்னார்கள்.
பெரியார்தான் சொல்வார், ‘‘ஒருவர் பட்டுச்சேலையை இரவல் கொடுத்துவிட்டு, பின்னாலேயே மனைக்கட்டை யைத் தூக்கிக் கொண்டு போனார்” என்று.
இப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சிக்கு அமைச்சர் அவர்கள் வந்ததற்கு முதலில் நன்றி!
பத்தமடையார்,
கலைஞரிடம் வைத்த கோரிக்கை!
அதேபோல, அய்யா பத்தமடையார் அவர்கள், கலைஞரிடம் எவ்வளவு உரிமை படைத்தவர் என்பதற்கு ஒரே ஒரு நிகழ்ச்சி.
கலைஞர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்; அப் பொழுது இவர், சேரன்மாதேவி உயர் நிலைப்பள்ளிக்கு இப்பொழுதே பெரியார் பள்ளி என்று பெயர் வைக்கவேண்டும் என்று சொன்னார்.
இவருடைய பிடிவாதத்தைப் பார்த்து கலைஞர், தொண்டர்களுடைய குரலுக்கு மதிப்பளித்து உடனடி யாக செய்பவர்தான் நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள்.
எல்லோருடைய அந்த விருப்பத்தையும் நிறைவேற்றி, கலைஞர் மிகப்பெரிய அளவில் இந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த நேரத்தில், எத்தனையோ கருத்துகளைச் சொல்லவேண் டும் என்று அந்த உரிமையோடு இங்கே வந்தோம். பரவா யில்லை, மற்றவர்கள் எல்லோரும் பேசிவிட்டார்கள்.
நான் எப்பொழுதும் இங்கே வரக்கூடியவன். இவர் களையெல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்ப்பதுதான் கடினம்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னவென்றால், நம்மு டைய அமைச்சரின் தந்தையார் சீரிய பகுத்தறிவாளர். தங்கப்பாண்டியனார் அவர்கள்.
தந்தையாரைவிட கொள்கையில் தீவிரமாக இருக்கிறவர் நம்முடைய தங்கம், கொள்கைத் தங்கம்!
அவரோடு பல பகுத்தறிவுக் கூட்டங்களில் பேசிவிட்டு, அடுத்த தலைமுறையோடும் நான் பேசுகிறேன். அதுமட்டும் முக்கியமல்ல – தந்தை யாரைவிட கொள்கையில் தீவிரமாக இருக்கிறவர் நம்முடைய தங்கம், தங்கம் கொள்கைத் தங்கம்.
இந்த மேடையில் இருக்கின்ற மாலை ராஜா அவர்களாலும், அய்யா மைதீன்கான் அவர்களானாலும், அய்யா நம்முடைய மேனாள் சபாநாயகர் அவர்களா னாலும், எல்லோரும் ஒரு குடும்பம் போன்று இருக்கின் றோமே, இந்தக் கொள்கை உறவு திராவிட இயக்கத்தைத் தவிர, வேறு எந்த இயக்கத்திலும் இருக்க முடியாது.
எந்த ஜாதி? எந்த மதம்? என்று நமக்குத் தெரியாது. இன்னொரு நாள், இங்கே வந்து நிறைய பேசவேண்டும். ஏனென்றால், திராவிட இயக்கம் செய்த இந்த சாதனைகளை விளக்கவேண்டும்.
உரிமைத் தொகை பெற்றவர்கள்
என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
இன்றைக்கு ‘‘மகளிருக்கு உரிமைத் தொகை” கொடுத்த ஆட்சி இது. எனக்கு வரவில்லை, எனக்கு வரவில்லை என்று சிலர் சொல்கிறார்களே தவிர, உரிமைத் தொகை பெற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘‘தாய்வீட்டில் இருந்துகூட மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வருவது இல்லை” என்கிறார்கள்.
இந்த இயக்கம் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணம், இன்றைக்குத் தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்துகின்ற நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் அவர்கள், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ என்று பெயர் வைத் திருக்கிறார்.
பள்ளிகளில் காலை சிற்றுண்டி போடும் திட்டத்தைப் பற்றி சொன்னார்கள். இதில், ஜாதியில்லை, மதமில்லை, கட்சியில்லை.
நூறாண்டுகளுக்கு முன்பு அதே சின்ன பிள்ளை களைப் பிரித்து வைத்து, உயர்ஜாதியைச் சேர்ந்த பிள் ளைகளா? தனியே சாப்பிடுங்கள்; கீழ்ஜாதிப் பிள்ளை களா? வெளியே திண்ணையில் அமர்ந்து சாப்பிடுங்கள் என்று சொன்னதினால், பிறந்ததுதான் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்.
சேரன்மாதேவி குருகுல போராட்டத்தில் பூத்த மலர்தான் திராவிட இயக்கம்!
திராவிட இயக்கம் பிறந்ததே அந்தப் போராட் டத்தின் காரணமாகத்தான் – அந்தப் போராட்டத்தில் பூத்த புதுமலராகத்தான் இந்த இயக்கம் வந்தது.
மகளிருக்கு உரிமைத் தொகை என்பதை, அரசாங் கத்தினுடைய உதவித் தொகை என்று சொல்லவில்லை. நன்றாக கவனியுங்கள்.
தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம். அதைப் பின்பற்றிய நம்முடைய விழா நாயகர் – நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர். அவர்களிடம் செய்தியாளர், ‘‘ஒருவரியில் உங்களை விமர்சனம் செய்துகொள்ளுங்கள்” என்று கேட்டார்.
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று ஒரே வரியில் சொன்னார். அதில் எல்லாம் அடங்கிவிட்டது.
சுயமரியாதையைப் பெண்களுக்குக் கொடுக்கின்ற இயக்கம், திராவிட இயக்கம்தான்!
அந்த சுயமரியாதையைப் பெண்களுக்குக் கொடுக் கின்ற இயக்கம், திராவிட இயக்கம்தான் என்பதற்கு அடையாளம்தான் – உதவித் தொகை, சலுகைத் தொகை அல்லது வேறு வகையான தொகை என்று பெயர் வைக்காமல் ‘‘உரிமைத் தொகை” என்று பெயர் வைத்தார்.
பெண்களுக்குச் சலுகை கொடுக்கவில்லை; பிச்சை கொடுக்கவில்லை; உரிமையைக் கொடுக்கிறோம். ஏனென்றால், அவர்கள் உழைக்கிறார்கள். அந்தச் சகோதரிகளுடைய உழைப்பினால்தான், இன்றைக்கு நாடு நடந்து கொண்டிருக்கின்றது; வீடு நடந்துகொண் டிருக்கின்றது. ஆகவேதான், அதற்கு ஈடு இணையில்லை.
ஆகவேதான், அந்தத் திட்டத்திற்கு உரிமைத் தொகை என்று பெயர் வைத்தார் நம்முடைய முதலமைச்சர்.
அதேபோன்றுதான், அன்றைக்கு ஜாதியை எதிர்த்துப் போராடியதின் நினைவாக – இன்றைக்குப் ‘‘பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.”
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது சமத்துவபுரம் உண்டா? வடமாநிலங்களில் இன்னமும் கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அகண்ட பாரதம் அல்ல; ‘‘அகன்ற பாரதம்!’’
இன்று மீண்டும் ஜாதியைக் கொண்டு வரு வதற்காகத்தான் பா.ஜ.க. – அதைக் கொண்டு வருவதற்குத்தான் ஆர்.எஸ்.எஸ்.
இந்தியா கூட்டணி உருவாகிவிட்டதால், நாம் தோற்கப் போவது உறுதி என்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள். மீண்டும், ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்றைய ஒன்றிய பாசிச ஆட்சி கிடையாது என்பதை நன்றாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவைக் காப்பாற்றப் போவது ‘‘இந்தியா” கூட்டணிதான். ‘‘அகண்ட பாரதம்” என்று சொல் கிறார்கள்; அகண்ட பாரதம் அல்ல; ‘‘அகன்ற பாரதம்.” இந்த பாரதம் அகன்று போகும்; அதற்குப் பதில் ‘‘இந்தியா” நிலைக்கும்.
ஜாதி இருக்கவேண்டுமாம்; ஆனால்,
ஜாதி வித்தியாசம் போகவேண்டும்
இன்றைக்குத் திடீர் ‘‘ஞானோதயம்” வந்து என்ன சொல்கிறார்கள் என்றால், ‘‘அய்யோ, ஜாதியா? அது கொடுமையல்லவா! ஜாதி வித்தியாசம் போகவேண்டும்” என்று சொல்கிறார்கள்.
அவர்கள் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள் – ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று சொல்லவில்லை; ஜாதி வித்தியாசம் போகவேண்டும் என்றுதான் சொல் கிறார்கள்.
அப்படி என்றால் என்ன அர்த்தம்?
ஜாதி இருக்கவேண்டும்; ஆனால், ஜாதி வித்தியாசம் போகவேண்டும் என்று. ஜாதி இருக்கின்ற வரையில், வித்தியாசம் இருக்கும். அதுதான் வருணாசிரம தர்மம்; அதுதான் ஸநாதனம்.
உள்ளே உட்கார்ந்து சாப்பிடு; வெளியே உட்கார்ந்து சாப்பிடு என்று சொல்கிறார்கள்.
ஜாதிக்கு அறிவியல்பூர்வமாக ஆதாரம் உண்டா?
ஒரு உதாரணம் சொல்கிறேன்,
விபத்தொன்றில் அய்யங்கார் ஒருவர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் – அய்யங்கார் அடிபடவேண் டும் என்கிற ஆசையினால் சொல்லவில்லை; உதா ரணத்திற்காக, உயர்ஜாதியைக் குறிப்பதற்காக சொல்கி றேன் நான்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், ‘‘உங்கள் உயிருக்கு ஆபத்தில்லை; ஆனால், காலில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்” என்கிறார்.
மூன்று நாள்களுக்குப் பிறகு அந்த அய்யங்கார் மருத்துவரைப் பார்த்து, ‘‘என்னங்க, மூன்று நாள் ஆகிவிட்டதே, இன்னமும் அறுவைச் சிகிச்சை செய்யவில்லையே?” என்று கேட்கிறார்.
உடனே மருத்துவர், ‘‘உங்கள் ரத்தப் பிரிவு என்ன?” என்று கேட்கிறார்.
‘‘என்னுடைய ரத்தப் பிரிவு அய்யங்கார் ரத்தம் என்றோ, அய்யர் ரத்தம்” என்றோ அவர் சொல்வாரா?
‘‘ஏ1 பாசிட்டிவ்” அல்லது ‘‘பி1 பாசிட்டிவ்” என்று சொல்வார்.
‘‘அந்த ரத்தம் இதுவரையில் கிடைக்கவில்லை. நாங்களும் விளம்பரப்படுத்தி இருந்தோம். இன்றுதான் ஒரு இளைஞர் ரத்தம் கொடுக்க முன்வந்திருக்கிறார். உங்களிடம் அனுமதி கேட்பதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்” என்று மருத்துவர் சொல்கிறார்.
‘‘எதற்காக என்னிடம் அனுமதி கேட்கவேண்டும்? நான்தான் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு ஒப்புக்கொண்டேனே?” என்கிறார் அந்த அய்யங்கார்.
‘‘ரத்தம் கொடுக்க வந்திருப்பவர் ஓர் ஆதிதிராவிட தோழர். அவர்களைத் தொட்டாலே, குளிக்கவேண்டும் என்று நினைப்பீர்களே, உங்கள் உடலில், உங்கள் அனுமதியில்லாமல், அவருடைய ரத்தத்தை எப்படி ஏற்றுவது என்பதற்காகத்தான், உங்களிடம் அனுமதி கேட்க வந்தேன்” என்றார் மருத்துவர்.
நான் பெரியார் கட்சியில் சேர்ந்து
எவ்வளவு நாளாயிற்று தெரியுமா?
உடனே அய்யங்கார், ‘‘அவருடைய ரத்தத்தை எனக்கு ஏற்ற வேண்டாம்; நான் செத்துப் போனாலும் போகிறேன்” என்றா சொல்வார்?
டாக்டர் கையை இறுகப் பற்றிக்கொண்டு, ‘‘நீங்கள் வேறு டாக்டர்; நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று தெரியுமா? இப்பொழுதெல்லாம் யார் ஜாதியைப் பார்க்கிறார்கள்?” என்று சொல்வார்.
இவன் பிழைக்கவேண்டும் என்றால், ஜாதி தானாக விடைபெற்றுச் சென்று விடுகிறது; மீதி நேரத்தில், ஜாதியைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று வெளிவந்த ஓர் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!
இன்னமும் திராவிட பூமி எப்படிப்பட்டது என்பதற்கு ஒரே ஓர் உதாரணம் நேற்று வெளிவந்த ஓர் அதிர்ச்சி யூட்டக் கூடிய செய்தி என்னவென்றால், கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சமையல் செய்வதற்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். அதில், ‘‘பார்ப்பன சமையல்காரர்கள் தேவை” என்று.
ஓர் அரசாங்கத்தினுடைய விளம்பரத்தில், தேவசம் போர்டு விளம்பரத்தில் இப்படி வரலாமா? என்று கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன.
நூறாண்டுகளுக்குமுன்பு, சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் தகராறு நடந்த பிறகு, காந்தியாரிடம் சமரசத்திற்காகப் போகிறார்கள்.
காந்தியார் என்ன சொன்னார் என்றால், ‘‘எல்லா பிள்ளைகளையும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடச் சொல்லுங்கள்; ஆனால், பிராமணர் சமையற்காரராக இருக்கட்டும்” என்றார்.
பார்ப்பன நாயகம்தான் இந்த நாட்டை
ஆளும் நிலை வரப்போகிறது என்றார் பெரியார்!
அதை, தந்தை பெரியாரும், வரதராசுலு நாயுடுவும் ஒப்புக்கொள்ளவில்லை. ‘‘அது எப்படி சரி வரும்? மறுபடியும் அதே பேதத்தைத்தானே உண்டாக்குகிறீர்கள்” என்று கேட்டார்கள்.
அப்பொழுதுதான் சேலத்தில் சொன்னார் பெரியார், ‘‘இப்பொழுது, இந்த ஜாதிப் பிரச்சினையை, வெள்ளைக் காரன் இருக்கும்பொழுதே தீர்க்கவில்லை என்றால், நாளைக்கு வரப் போகிறது ‘‘பிராமினோகிரசி” – அதாவது பார்ப்பன நாயகம்தான் இந்த நாட்டை ஆளும் நிலை வரப்போகிறது” என்று சொன்னார்.
அந்தத் தகவல்களையெல்லாம் இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றோம். இன்றைக்கு அதுதான் ஒன்றிய அரசு.
திராவிடம் வெல்லும்; அதை நாளைய வரலாறு சொல்லும்; என்றைக்கும் சொல்லும்!
இன்றைக்குக் காலையில்கூட ‘இந்து’ பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி என்னவென்றால், டில்லியில், ராகுல் காந்தி சொல்கிறார், சமூகநீதிப் பற்றி பேசியிருக்கிறார்.
எந்த சமூகநீதி ஒரு காலத்தில் காங்கிரசில் இல்லாமல் ஆக்கப்பட்டதோ, எதற்காக தந்தை பெரியார் அவர்கள் காஞ்சிபுரத்தில் காங்கிரசில் இருந்து வெளியே வந்தாரோ, அதே காங்கிரஸ் இன்றைக்கு சமூகநீதியைப் பேசுகிறது; இன்றைக்குப் பெரியாருடைய பெருமையைப் பேசுகிறது என்றால், ‘‘திராவிடம் வெல்லும்; அதை நாளைய வர லாறு சொல்லும்; என்றைக்கும் சொல்லும்” என்பதற்கு அடையாளம்!
எந்த அளவிற்குப் பெரியார் உள்ளே போயிருக்கிறார் என்பதைப் பாருங்கள்!
ஒன்றிய அரசில், 90 மூத்த செயலாளர்கள் இருக் கிறார்கள். அதில் 3 பேர்தான் பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 87 பேர் உயர் ஜாதிக்காரர்கள்தான்.
இதைச் சொல்வது நாங்கள் அல்ல; திராவிடர் கழகத்துக்காரர்கள் அல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள் அல்ல. அதைச் சொன்னது ராகுல் காந்தி. எந்த அளவிற்குப் பெரியார் உள்ளே போயிருக்கிறார் என்பதைப் பாருங்கள்.
ஒரு கொள்கை வெற்றியை அடைந்திருக்கின்றோம்!
‘‘பெண் ஏன் அடிமையானாள்?” என்கிற புத்தகத்தை நூறு ஆண்டுகளுக்குமுன்பே எழுதிய பெரியாருடைய மண் இந்த மண் என்று பிரியங்கா காந்தி சொல்கிறார்கள். தந்தை பெரியார் காங்கிரசைவிட்டு வெளியே வரு வதற்கு இந்த சேரன்மாதேவி குருகுல அநீதி காரணமாக இருந்தது. நூறாண்டு காலத்தில், அதே காங்கிரஸ் தரப்பிலிருந்து சமூகநீதி, பெண்ணுரிமைக் கருத்துகள் ஒலித்து வருவதின்மூலம், மிக முக்கியமான ஒரு கொள்கை வெற்றியை அடைந்திருக்கின்றோம்.
விழுதுகள் பாராட்டுகின்றன; காரணம்,
வேர் சரியாக இருக்கிறது!
எனவேதான், அய்யா பத்தமடை பரமசிவம் போன்ற வர்களுடைய உழைப்பு – அதை விழுதுகள் பாராட்டு கின்றன; காரணம், வேர் சரியாக இருக்கிறது. வேர் மிக முக்கியமாகக் காப்பாற்றப்படவேண்டும்.
அந்த அடிப்படையில்தான் இவர்களைப் பாராட்டு வது என்பது மிக முக்கியமானதாகும்.
அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி!
மற்றொரு முறை இங்கே வந்து உங்களையெல்லாம் சந்தித்து, விளக்கமான கொள்கைப் பிரச்சாரத்தை செய்வேன் என்று கூறி, இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர் கள், கூட்டணிக் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவை எல்லாவற்றையும்விட, தன்னுடைய மிக முக்கியமான பணிகளை விட்டுவிட்டு, நாங்கள் அழைத்தோம் என்பதற்காகவும், அய்யா பத்தமடையார் அவர்களைப் பாராட்டுவதற்காகவும் இங்கே வந்து சிறப்பித்த அமைச்சர் அவர்களுக்கு நன்றி!
நம்முடைய மாவட்டச் செயலாளர் அய்யா அவர் களும், திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் களான மாலைராஜா போன்றவர்கள், அனைத்து இயக்கங்களைச் சார்ந்தவர்களும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அனைவருக்கும் நன்றி!
இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது!
மீண்டும் இங்கே வருவோம் – வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது. ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சாதனை களை எடுத்துச் சொல்வதற்குத் தனியே ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவேன் என்கிற உறுதி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாப் பேரருரையாற்றினார்.