மதவாத சக்திகளுக்குச் சரியான பாடம்! பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுவித்தது செல்லாது : விடுவிக்கப்பட்ட 11 பேரும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டும்

viduthalai
5 Min Read

புதுடில்லி, ஜன.9- பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 11 குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இரண்டு வாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் சரணடைய வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தாக்குதலில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

அப்போது நடந்த வன்முறையில் அய்ந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவருடைய கண்ணின் முன்பாகவே அவருடைய மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனையே மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிறை நன்னடத்தையை அடிப் படையாக் கொண்டு குஜராத் அரசு தண்டனைக் காலம் முடிவடைதற்கு முன்பே விடுதலை செய்து அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கோத்ரா வன்முறையின் போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் போது தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, தனது குடும்ப உறுப் பினர்களைக் கொன்ற 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ஏற்க முடியாது. அவர் களுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்தும் சிறை நன்னடத்தை எனக் கூறி குஜராத் அரசு அவர்களை விடுவித்துள்ளது.
குறிப்பாக சம்பவம் நடந்தது குஜராத் என்றாலும் விசாரணை நடத்தி தண்டனை வழங்கியது மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம்தான். அதனால் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் குற்றவாளி களின் அனைவரது விடுதலையையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதேப்போன்று பல பொதுநல மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கை விரிவாக விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் நேற்று (8.1.2024) வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானுவின், குற்றவாளிகளுக்கு எதிரான ரிட் மனு விசாரணைக்கு உகந்ததாகும். மேலும் பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மகாராட்டிரா மாநிலத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து அந்த மாநில அரசுதான் முடிவெடுக்க வேண் டும். பில்கிஸ் பானு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவு செல்லாது என்பதால் அதனை ரத்து செய்கிறோம். குறிப்பாக பாதிக்கப்பட்ட வர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியமாகும். மேலும் பெண்களின் மரியாதையும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். அவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள்.
இதில் தன்னிச்சையான உத்தரவுகளை விரைவில் சரி செய்து, பொதுமக்களின் நம்பிக்கையின் அடித் தளத்தை தக்கவைத்துக் கொள்வது இந்த நீதிமன்றத்தின் கடமையாகும். குறிப்பாக தண்டனை என்பது பழிவாங்குவதற்காக கிடையாது. அது சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும். குறிப்பாக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பல உண்மைகளை மறைத்தும், பொய்யான தகவல்களை தெரிவித்தும் குஜராத் அரசே முன்கூட்டி விடுதலை செய்யலாம் என்ற ஆணையை பெற்றுள்ளனர். அது செல்லாது அதனால் கோத்ரா வன்முறையின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்முறை செய்த 11 முக்கிய குற்றவாளிகளின் விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. அவர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வாரத்திற்குள் சிறையில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

சட்டத்தின் ஆட்சியில் இரக்கத்திற்கு இடம் கிடையாது

பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பில் பிளாட்டோ உள்ளிட்ட தத்துவஞானிகளின் கோட்பாடுகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில்,‘‘தண்டனை என்பது சீர்திருத்தத்திற்காகத் தானே தவிர பழிவாங்குவதற்காக கிடையாது. ஒரு குற்றவாளியை குணப்படுத்த முடிந்தால் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவத் துறையின் குணப்படுத்தும் கோட்பாட்டை நீதித்துறையுடன் சேர்த்து இணைக்கிறது. ஆனால் அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை என்பதும் மிக முக்கியம். பெண்கள் மரியாதை பெறுவதற்கு உரியவர்கள்.
ஆனால் அதே பெண்களுக்கு எதிராக இவ்வளவு கொடூரமான குற்றத்தை செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இவை அனைத்தையும் தான் இந்த வழக்கின் சாரம்சமாக நாங்கள் கையாண்டிருக்கிறோம். அதன்படி பார்த்தால் பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது. ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரை சட்டத்தின் ஆட்சிதான் நிலைநாட்டப்பட வேண்டும். இங்கு அனுதாபத்திற்கும், இரக்கத்திற்கும் எந்த இடமும் கிடையாது. சட்டத்தின் ஆட்சி இல்லாமல் நீதிமன்றங்களால் நீதியை நிலை நாட்டவே முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குஜராத் அரசுக்கு கண்டனம்

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பில்கிஸ் பானு விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மகாராட்டிரா மாநில அரசுக்குதான் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் அரசு சரியாக வாதிட்டுள்ளது. ஆனால், பொய்யான தகவல்களை கூறி முன்கூட்டி விடுதலை குறித்து குஜராத் அரசு முடிவெடுக்கலாம் என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் ஆணை பெற்ற பிறகு குஜராத் தனது நிலையை மாற்றிக் கொண் டுள்ளது. குற்றவாளிகளுடன் இணைந்து அவர்களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட்டுள்ளது. மகாராட்டிரா மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை குஜராத் அரசு பறித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

மாலை போட்டு வரவேற்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கின் கொடூர பி.ஜே.பி. குற்றவாளிகள்!

கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மூன்று வயது குழந்தை உள்பட 14 பேரை துடிக்க துடிக்கக் கொலை செய்த குற்றவாளிகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களைச் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுவித்த குஜராத் மாநில அரசின் தவறான முடிவை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு – உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்குச் செல்கின்றனர்.

இந்தியா
சிறையிலிருந்து வெளிவந்தவர் களுக்கு குஜராத் மாநில பா.ஜ.க. பிர முகர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தியது நினைவில் இருக்கலாம்.
அதே போல் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சிறையில் சில நாட்களே இருந்தனர். பெரும்பாலான நாட்கள் பிணையில் வெளியே சுற்றிக்கொண்டுதான் இருந்தனர்.
பாபர் மசூதியை இடித்த பா.ஜ.க.வினர், ஒன்றிய அமைச்சர்கள் ஆகவில்லையா?
இதெல்லாம் பா.ஜ.க., சங் பரிவார்க் கூட்டத்தில் சாதாரணம்தானே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *