⭐ஜாதிவாரி கணக்கெடுப்பை பீகாரைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களும் மேற்கொள்க!
⭐ தமிழர் தலைவர் பிறந்த நாளில் ‘விடுதலை’ சந்தாக்களைப் புதுப்பித்து புதிதாக சந்தா திரட்டும் பணிகளை மேற்கொள்க!
⭐ஜாதி அடிப்படையில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனாவை’ எதிர்த்துத் தமிழர் தலைவர் தொடர் பிரச்சாரம்!
கழகத் தோழர்கள் ஒத்த கருத்துடையோரை இணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திடுக!
திருச்சி: திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
திருச்சி, அக்.20 ஜாதிவாரி கணக்கெடுப்பை பீகாரைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டுமென்றும், ஜாதி அடிப்படையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா யோஜனாவை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ள இருக்கும் தொடர் பிரச்சாரத்தை, ஒத்த கருத்துள்ளோர் அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாகக் கழகத் தோழர்கள் நடத்திட வேண்டும் என்பது உள்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று (20.10.2023) திருச்சி பெரியார் மாளிகையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலை மையில் நடபெற்றது. தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்
தருமபுரி மாவட்டக் கழக மேனாள் தலைவர் புலவர் வேட்ராயன், கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணி, மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் ஆகியோர் மறைவுக்கு இத் தலைமைச் செயற்குழு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 2:
பீகார் மாநிலம்போன்று அனைத்து மாநிலங்களும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும்!
இந்திய அளவில் சமூக நீதியை நிலைநாட்டவும், மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிய வும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது அவசிய மானதாகும். இட ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு வழக்குகளிலும், “ஜாதி வாரியாக கணக்கு(Quantifiable data) இருக்கிறதா?” என்று நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பும் நிலையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சமூக, பொருளாதார நிலையை அறிந்து கொள்ளும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு செய்வதும் மிகவும் இன்றி யமையாததாகும். அதனை ஒன்றிய அரசு செய்யாத நிலையில் பீகார் அரசு ஒரு சர்வே மூலம் பிற்படுத்தப் பட்டோர், ஒடுக்கப்பட்டோர், முன்னேறிய வகுப்பினர் உள்ளிட்டோரின் விவரங்களை எடுத்து, மக்கள் தொகை யில் அவரவர் எத்தனை விழுக்காடு என்று வெளியிட் டிருக்கும் அறிக்கையையும், அதற்காக மேற்கொள்ளப் பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் வரவேற்கிறது. இதனைத் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் இந்த தலைமைச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க மறுத்து வரும் ஒன்றிய அரசு முழுமையான ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி இந்திய அளவில் பிற்படுத்தப் பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்து, சமூக நீதியை வழங்கிட உட னடியாக ஆவன செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களின் அறிவிப்பினை இக்கூட்டம் பாராட்டுகிறது.
தீர்மானம் எண் 3:
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்துத் தமிழர் தலைவரின் பரப்புரை
ஜாதி அடிப்படையில் அவரவர் குலத் தொழிலை செய்வதற்குத் தூண்டும் வகையில் மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும் 18 வயதிலேயே கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்து, அவர்களை ஜாதி அடிப் படையில் குலத் தொழிலைச் செய்ய வைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற மனுதர்ம யோஜனாவைக் கண்டித்து 2023 அக்டோபர் 25 முதல் நவம்பர் 3 வரை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தொடர் பரப்புரைப் பயணத்தை அனைத்துக் கட்சித் தலைவர்கள், கட்சி சாராத அமைப் புகள், சமுதாயப் பெருமக்கள், பொதுமக்கள் ஆகியோ ரின் பேராதரவோடு வெற்றிகரமாக நடத்துவது எனவும், தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில் அடுத்தடுத்த கட்ட போராட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு இந்த மனுதர்ம யோஜனாவை முற்றிலும் ஒழித்துக் கட்ட களங்காணவும் தீர்மானிக்கப்படுகிறது.
பிரச்சாரக் கூட்டங்களை திட்டமிட்ட வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யுமாறு கழகப் பொறுப்பாளர் களையும், தோழர்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் 4 (அ):
தமிழர் தலைவருக்குப் பிறந்த நாள் பரிசாக ‘விடுதலை’ சந்தாக்களை வழங்குவோம்!
கழகத் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் அகவை தொடங்கும் இந்த காலகட்டத்திலும் தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதையில் தொய்வின்றி பயணம் தொடரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெரும் சாதனைகளில் ஒன்றான 61 ஆண்டுகள் ‘விடுதலை’யின் ஆசிரியர் என்கிற சாதனையைப் போற்றும் விதமாக துணைத் தலைவர் முதல் அனைத்து தலைமைக் கழக அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நூறு ‘விடுதலை’ ஆண்டு சந்தாக்களைத் திரட்டுவது என்னும் இலக்கோடு செயல்பட்டு தமிழர் தலைவரின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக தமிழர் தலைவரின் பிறந்தநாளான டிசம்பர் 2ஆம் தேதிக்குள் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 4(ஆ):
சென்னையில் களப் பணி பயிற்சி!
சென்னையில் நவம்பரில் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் களப்பணி பயிற்சி 5 நாட்கள் நடைபெறும். அதில் மாவட்டக் கழக, மாநகர கழக, முக்கியப் பொறுப் பாளர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள் (திருச்சி, 20.10.2023)