கேப்டன் விஜயகாந்த்
(தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையில், புரட்சிக் கலைஞர் என அழைக்கப்படும் நடிகர் விஜய்காந்த் அவர்கள், தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளைப்பற்றி தன் எண்ணத்தை வெளிப்படுத்து கின்றார்.)
கேள்வி: “தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா” என்று தங்கள் ரசிகர் மன்றத்தின் மூலம் சுயமரியாதைக் குரல் எழுப்பும் நீங்கள் பெரியாரின் கருத்துகளைக்கொண்ட கதைகளை உருவாக்கித் தயா ரித்து நடிக்காதது ஏன்?
பதில்: ஒட்டு மொத்தமாக இல்லை என்று சொல்லமுடி யாது. எனது படங்களில் ஆங்காங்கே பெரியாரின் எண்ணங்களைக் கொண்ட சீர்திருத்தக் கருத்துகளை இடம் பெறச் செய்திருக்கிறேன். உதாரணத் திற்கு ‘சத்ரியன்’ படத்தில் பாலியல் வன்கொடுமைக்காளான பெண் ணைத் திருமணம் செய்யும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இது பெரியாரின் கருத்துக்கு ஏற்புடையதுதானே.
‘பாட்டுக்கு ஒரு தலைவன்’ படத்தில் எம்.என். நம்பியாரின் மூலம் சீர்திருத்தக் கருத்துகள் இடம் பெறச் செய்திருக்கிறோம். தீபாவளிப் படமான ‘எங்க முதலாளி’யில்கூட ஜாதிக் கட்டுப்பாடு என்று சொல்லி தாழ்த்தப்பட்ட வேலைக்காரர் வீட்டுத் திருமணத்திற்குப் போகக் கூடாது என்று சொல்வார்கள். அப்போது அதை மீறி – வயலில் வேலை செய்து, அவர்கள் உழைப்பின் மூலம் கிடைக்கும் தானியங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்; அவர்களால் அறுவடை செய்யப்பட்டு களத்து மேட்டில் சூடு அடித்த நெல்லை வீட்டுக்குக் கொண்டு போகலாம்; அவர்கள் ஆடு – மாடுகளில் கறந்து தரும் பாலைக் குடிக்கலாம். ஆனால், அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு மட் டும் போகக்கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?’ என்று கட்டுப்பாட்டை மீறி திருமணத்திற்குப் போவேன்.
‘அலை ஓசை’ என்ற படத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் போகக்கூடாது என்று இருக்கும்போது நான் கறுப்பு உடையில்
கோயிலுக்குப் போய் மனிதனில் ஜாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது என்ற பொருளில் பாட்டுக் கூடப் பாடுவேன். இப்படி எனது பெரும்பாலான படங்களில் ஆங்காங்கே சுயமரியாதைக் கருத்துகள் இடம் பெறச் செய்திருக்கிறேன். ஆனால் பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனை களை முழுமை யாக வைத்துப் படம் எடுக்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் பெரியாரின் கருத்துகளைக் கொண்ட படம் ஒன்றை எடுப்பேன் நடிப்பேன்,”
நன்றி: ‘தினமணி’ – வெள்ளிமணி 5.11.1993