சென்னை,டிச.28- கடந்த 3, 4-ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களையும், கடந்த 16, 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட் டங்களையும் மழை புரட்டிப் போட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை பருவமழை நீடிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (28-12-2023) முதல் 31-ஆம் தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிலும் 31-ஆம் தேதி தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாடு கடலோர மாவட்டங் களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை (29-12-2023) மற்றும் நாளை மறுநாள் (30-12-2023) தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31-ஆம் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களான கன்னியா குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை (29-12-2023) குமரிக்கடல், தென்கிழக்கு மற்றும் அதனை யொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் தெற்கு பகுதிகளிலும், நாளை மறுதினம் மற்றும் அதற்கு அடுத்த நாள் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத் துள்ளது.