மாமல்லபுரம், டிச. 22- இத்தாலி நாட்டை சேர்ந்தவர் செலஞ்சீவ் (வயது 47). இவரது மனைவி பெடரிகா பிரைட் (38). இவர்களுக்கு டைஷானோ (7) என்ற மகனும், காஸ் டைன் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளனர். செலஞ்சீவ் இத்தாலி நாட்டில் ஒரு நிறுவனத்தில் பொறியாளர £க வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் 2 மாத விடுமுறை எடுத்துள்ள செலஞ்சீவ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்கு இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தார். அவர் தங்கள் நாட்டில் இருந்து கொண்டு வந்த சைக்கிள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து மாமல்லபுரம் வருகை தந்தார். செலஞ்சீவ் தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் சைக்கிளில் தொட்டில் இணைத்து ஓட்டி வருகிறார்.
மனைவியும் மற்றொரு மகனும் தனித்தனி சைக்கிளை ஓட்டுகின்றனர். உடல் ஆரோக்கியத்திற்காக தாங்கள் சொகுசு வாகனங்களில் பயணம் செய்ய விரும்புவதில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் டில்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சைக்கிள் மூலமாகவே நாங்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இத்தாலி பொறியாளர் செலஞ்சீவ் தெரிவித்தார். மாமல்லபுரத்தில் சுற்றுலாவை முடித்து விட்டு அவர்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றனர்.