புதுடில்லி,டிச.20- ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள், ஜனவரி 2ஆவது வாரத்துக்குள் தொகுதி பங்கீடை முடிக்க திட்ட மிட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கெனவே 3 முறை கூடி பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் தெலங்கானா தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
முக்கிய ஆலோசனைக் கூட்டம்
இதையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள புதிய வியூகம் வகுக்க வேண்டும், தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்ற “இந்தியா” கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் வலியுறுத்தின.
இந்த நிலையில் “இந்தியா” கூட்டணிக் கட்சி தலைவர் களின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் டில்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நேற்று (19.12.2023) தொடங்கியது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேனாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல மைச்சர் மம்தா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகார் மேனாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரு மான லாலுபிரசாத் யாதவ், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பீகார் துணை முதல மைச்சர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ராம் கோபால் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் து.ராஜா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் மஹூவா மஜி மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு பிரதிநிதிகள் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தொகுதி பங்கீடு
நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி களுடன் எவ்வாறு தொகுதிப் பங்கீடு செய்வது, நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் 141 எதிர்க்கட்சி உறுப் பினர்கள் நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.”
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி கட்டாயம் கூட் டணியில் இருக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. அதேபோல் பஞ்சாப் மற்றும் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனும்,மேற்கு வங்காளத்திலும் தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவடையவில்லை என்றால் அது கூட்டணியை பாதிக்கும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்ப வேண்டும். வெறும் மோடிக்கு எதிரானதாக மட்டும் இருக்கக்கூடாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்து தெரி விக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் கார்கே
ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர் களிடையே கூறியதாவது:-
நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டம்
ராஜஸ்தான், மத்தியப்பிரதேச நாடாளுமன்ற தேர்தலுக் காக “இந்தியா” கூட்டணியை எப்படி முன்னெடுத்துச் செல் வது என்று அனைத்து கட்சித் தலைவர்களும் பேசி முடிவு செய்துள்ளனர். அனைத்து தலைவர்களும் கலந்து கொள் ளும்வகையில், நாடு முழுவதும் குறைந்தது 8 முதல் 10 பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும். கூட்டணி தலைவர்கள் ஒரே மேடைக்கு வரவில்லையென்றால், கூட்டணிபற்றி மக் களுக்குதெரிய வராது. எனவே அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
சிக்கல் தீர்க்கப்படும்
மாநிலங்கள் அளவில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்படும். அதில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால், “இந்தியா” கூட்ட ணியின் தலைமை அவற்றை சுமூகமாக தீர்க்கும்.
தொகுதிப் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் தமிழ்நாடு. கேரளா, தெலங்கானா, பீகார், உத்தரப்பிரதேசம், டில்லி, பஞ்சாப் உள்பட எந்த மாநிலத்தில் ஏற்பட்டாலும் அது தீர்க்கப் படும்.
கூட்டணியின் பிரதமர் முகம் குறித்து கேட்டதற்கு, ‘முதலில் வெற்றிபெறவேண்டும் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கு முன் பிரதமர் பதவி பற்றி விவாதிப்பதில் என்ன பயன்? நாங்கள் இணைந்து பெரும்பான்மை பெற முயற்சிப்போம்.
கண்டனப் போராட்டம்
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ங எதிர்க்கட்சி உறுப் பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட் டதை கண்டித்து வருகிற 22ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.
-இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
பிரதமர் பதவிக்கு கார்கே பெயர்
முன்னதாக இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெயரை மேற்கு வங்காள முதல மைச்சர் மம்தா, டில்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோர் முன்மொழிந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கார்கே, ‘முதலில் வெற்றி பெறுவோம். பிறகு பார்ப்போம். முதலில் நாம் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற வேண்டும். அதன் பிறகு எம்.பிக்கள் ஜனநாயக ரீதியாக முடிவு செய்வார்கள்” என்றார்.
ஜனவரியில் தொகுதி பங்கீடு
இதற்கிடையே ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர் ஒருவர் கூறினார்.