20.10.2023 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உள்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கால கட்டத்தில் தேவையான அவசியமான தீர்மானங்கள் இவை என்பதில் அய்யமில்லை.
இரண்டாவது தீர்மானம் – ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியத்தைப் பற்றியதாகும். இந்த வகையில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே பீகார் மாநிலம் முன் மாதிரியான ஒன்றாக இருக்கிறது.
தெலங்கானாவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற விதி இருக்கும்போது அதனை நடத்துவதில் ஒன்றிய அரசுக்கு என்ன சிக்கல்? சிக்கல் ஒன்றுமில்லை – மனத் தடங்கல் தான் முக்கிய காரணமாகும்.
கணக்கெடுப்பை நடத்தினால் பட்டியலின மக்கள் – பிற்படுத்தப்பட்ட மக்கள் – சிறுபான்மையின மக்கள் எவ்வளவு பேர்? எத்தனை சதவிகிதம் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்து விடும் அல்லவா!
கல்வி, உத்தியோகம், பொருளாதார நிலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதும் வெளிப்படும். அப்படி வெளியாகும்போது, விகிதாசார அளவில் யார் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்? விகிதாசாரத்துக்கு மேல் அதிக ஆதிக்கம் செலுத்துபவர்கள் யார் என்ற புள்ளி விவரமும் தெரிந்து விடும்.
அப்படித் தெரியும் நிலையில் இடஒதுக்கீடு எந்தப் பிரிவினருக்கு உயர்த்தப்பட வேண்டும், எந்த அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விடுமே!
ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு முட்டுக்கட்டை போடுவது உயர் ஜாதி ஆதிக்கக் கூட்டமே!
காங்கிரசின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இப்பொழுதே வினாவைத் தொடுக்க ஆரம்பித்து விட்டாரே!
ஒன்றிய அரசில் 90 செயலாளர்கள் இருக்கின்றனர் என்றால் அதில் பிற்படுத்தப்பட்டோர் வெறும் மூன்றே மூன்று பேர்கள் தானே!
ஒவ்வொரு துறையிலும் மேல் மட்ட அதிகாரம் என்பது அக்ரகாரத்தில் அட்டகாசமாக குடியேறியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்ற குரல் வலுப்பட்டு வரும் இந்தக் கால கட்டத்தில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு என்ன செய்கிறது? தனியார்த் துறைகளில் பணியாற்று வோர்களை, இணை செயலாளர் பதவிகளில் அமர்த்துகிறது என்றால் இதன் பொருள் என்ன? குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறிக்கிறது என்பதற்கான அடையாளம்தானே இது?
இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றங் களிலோ, உச்சநீதிமன்றத்திலோ நடக்கும் போது கனம் நீதிபதிகள் கேட்கும் கேள்வி என்ன?
மராட்டியர் இடஒதுக்கீட்டின் போதும், தமிழ்நாட்டில் வன்னிய மக்களுக்கான இடஒதுக்கீட்டின்போதும், நீதிபதிகள் இந்த சதவீத இடஒதுக்கீட்டுக்கான தரவுகள், புள்ளி விவரங்கள் என்ன என்று நெற்றியில் அடித்தது போல் கேட்பதில்லையா?
(ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு (EWS) இடஒதுக்கீட்டினை ஒன்றிய பா.ஜ.க. (பார்ப்பன) அரசு அவசரமாகக் கொண்டு வந்து செயல்படுத்தியபோது – அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அத்தகைய தரவுகளைக் கேட்கவில்லையே ஏன்?)
நீதிமன்றங்களிலும் இடஒதுக்கீடு தேவை என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்துவதும், பிரச்சாரம் செய்வதும் களம் காண்பதும் ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?
சட்டப்படியே பேச வேண்டுமானால் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு என்று வரும் போது – அதற்கான அளவுகோல் என்ன? இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்பதுதானே தவிர பொருளாதார அளவுகோல் இல்லையே!
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று இதே உச்சநீதிமன்றத்தின் நீதிபதியால் கூறப்பட வில்லையா?
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினர் என்று வாய்ச் சொல் காட்டி மற்றவர்களை வஞ்சிப்பது எத்தகைய பித்தலாட்டம்? ஏழைகள் உயர்ஜாதியில் மட்டும்தான் இருக் கிறார்களா? பட்டியலினத்தில் இல்லையா? பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஏழைகள் இல்லையா? என்ன ஏமாற்று வேலை?
இந்த வஞ்சகங்கள் – கொல்லைப்புற வழிகளை ஒழித்துக் கட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் தேவை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று ‘இந்தியா’ கூட்டணி உறுதி அளிக்கிறது.
ஆனால் பிஜேபியோ இந்த விடயத்தில் மவுன சாமியாராக வேடம் போடுகிறது. ஜாதிப் பிரச்சினைகளைக் கிளப்பி அரசியல் நடத்துகிறது ‘இந்தியா’ கூட்டணி என்று ஏதோ ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல வேடம் கட்டி ஆடுகிறார்கள்.
இந்த நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தே தீர வேண்டும் சென்று திருச்சி திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீட்டுக்கு அனுப்பி ‘இண்டியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வது தான் – திருச்சி செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்துக்குக் கிடைக்கும் வெற்றியாகும்.