நாளைக்கு நீங்கள் ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், ‘‘நாங்கள்தான் முதலில் இருக்கிறோம்’’ என்று சொல்லுங்கள் – நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்!
எனவேதான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை! தேவை!!
‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு” கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, டிச.18 அரசமைப்புச் சட்டத்தைக்கூட பலமுறை மாற்றலாம். ஆனால், வருணத்தை கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று அவர்கள் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள். சமூகநீதிக்கான வழிமுறை என்று சொல்லும்பொழுது, அந்த வழிமுறையைத்தான் நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் இன்றைய காலகட்டத்தில் ஜாதி இருக்கின்ற வரையில் இருக்கின்றது. நாளைக்கு நீங்கள் ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், ‘‘நாங்கள்தான் முதலில் இருக்கிறோம்’’ என்று சொல்லுங்கள் – நாங்கள் வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம்! எனவேதான், ஜாதிவாரிக் கணக் கெடுப்பு தேவை! தேவை!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை பல்கலைக் கழகம் அண்ணா பொதுவாழ்வியல் மய்யம் சார்பில் சென்னை பல்கலைக் கழகத்தில்
‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கம்!’’
கடந்த 30.11.2023 அன்று காலை சென்னை பல்கலைக் கழகத்தில் உள்ள தந்தை பெரியார் அரங்கில் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத் தரங்கிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.
அவரது தலைமையுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஒடுக்கப்பட்ட சமுதாயம், காலங்காலமாக நசுக்கப் பட்ட சமுதாயம், எங்களுடைய கல்விக்கும், உத்தியோகத் திற்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கின்ற நேரத்தில், quantifiable data இருக்கிறதா? புள்ளி விவரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.
காலங்காலமாக குதிரை சவாரி செய்துகொண்டிருக்கிறார்கள்!
உயர்ஜாதிக்காரர்கள் நோகாமல் மேலே உட்கார்ந்து கொண்டு, காலங்காலமாக குதிரை சவாரி செய்துகொண் டிருக்கிறார்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று நம்மிடம் கேட்டால், சரி, அதையும் கொடுத்துத் தொலைப்போமே என்பதற்காகத்தான் கணக்கெடுப்பே தவிர, வேறொன்றும் கிடையாது.
எனவே, நாங்கள் ஸ்கேன் ரிப்போர்ட் எடுப்பவர்கள். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது சமூகத்தினுடைய ஸ்கேன் ரிப்போர்ட்.
ஜாதியைக் காப்பாற்றுவதற்காக அல்ல அது. நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்குமுன், மருத்துவர் உட லில் உள்ள கிருமியைப் பார்க்கவேண்டும் என்பதற்காக ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்ப்பார். அதுபோல, ஜாதியும் கிருமிகள் போன்றதுதான்.
ஜாதி ஒழிப்புக்காரர்கள்தான் கேட்கிறோம். ஜாதியை ஒழிப்பதற்காகத்தான் கேட்கிறோம்!
ஜாதியை சரிப்படுத்துவதற்காகத்தான் கேட்கி றோம்; இதில் குழம்பவேண்டிய அவசியமில்லை. ஜாதி ஒழிப்புக்காரர்கள்தான் கேட்கிறோம். ஜாதியை ஒழிப்பதற்காகத்தான் கேட்கிறோம் என் பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
எப்படி ஜாதியை ஒழிப்பது?
அம்மை நோயை ஒழிப்பதற்கு என்ன செய்தார்கள்?
அம்மைக் கிருமியை உடலில் செலுத்தினால் தான், அம்மை நோய் ஒழியும். இதுதான் பெரியார் சொன்ன உதாரணம்.
நமக்கு நோய் வந்தவுடன், மருத்துவரைப் போய் பார்க்கிறீர்கள். அவர் மிகவும் கெட்டிக்கார டாக்டர்தான்.
‘‘உங்கள் உடலைத் தாக்கியிருப்பது மிக மோச மான வைரஸ் தாக்கியிருக்கிறது. அதனை அழிப்ப தற்காக நான் மருந்து கொடுக்கிறேன். அந்த மருந்தை அய்ந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். சில நேரங்களில் பக்க விளைவுகள்கூட ஏற்படலாம்; அதை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்பார். அதற்குப் பெயர்தான் ‘ஆண்டிபயாடிக்’ என்பது.
நான் எளிமையான உதாரணம் சொல்கிறேன். உங் களுக்குக் குழப்பம் இருந்தாலும், அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்; அல்லது மற்றவர்களுக்குக் குழப் பங்கள் ஏற்பட்டாலும், அதை நிவர்த்தி செய்வதற்கு, இந்த உதாரணங்களைச் சொல்லவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஆண்டிபயாடிக் மருந்தை டாக்டர் எழுதிக் கொடுக் கிறார். அந்த மருந்தை வாங்கிப் பார்க்கும்பொழுது, அந்த மருந்து அட்டையில், பாய்சன் என்று போட்டு அதற்கு ஓர் அளவையும் போட்டிருப்பார்கள்.
அந்த விஷம் யாருக்கு?
ஆளைக் கொல்வதற்கு அல்ல; உடலில் உள்ள கிருமியைக் கொல்வதற்காகத்தான். அதுதான் இட ஒதுக்கீடு! அதுதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு
என்பது.
எத்தனை சதவிகிதம் கொடுக்கவேண்டும் என்பதற்கு அளவு வேண்டுமே என்பதற்காகத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு
விஷத்தைக் கொடுத்து அந்தக் கிருமியைக் கொல் வதுபோன்று, இந்த இடம் அடையாளம் வேண்டுமே – எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதற்கு அளவு வேண்டுமே என்பதற்காகத்தான் ஜாதிவாரிக் கணக் கெடுப்பே தவிர, வேறொன்றுமில்லை.
ஜாதியைக் காட்டித்தானே அன்றைக்குப் படிக்கக் கூடாது என்று சொன்னீர்கள்.
ஜாதியைக் காட்டித்தானே ஏகலைவன் கதைகள் வந்திருக்கின்றன;
ஜாதியைக் காட்டித்தானே சம்பூகன் – இராமன் கதை இருக்கிறது.
இவையெல்லாம் ஜாதி இல்லையா? ஜாதியை மறுத்து விட்டீர்களா? ஜாதியை அடிப்படையாகக் கொண்டவை தானே இவை.
வருணம் – ஜாதி என்பது வேறு வேறல்ல – இரண்டும் ஒன்றுதான்!
மனுதர்மத்திலே இருக்கிறது – வருணம் என்பது வேறு அல்ல; ஜாதி என்பது வேறு அல்ல; இரண்டும் ஒன்றுதான் என்று.
ஜாதியை ஏன் இன்னமும் ஒழிக்க முடியவில்லை?
கடவுளே உண்டாக்கினான் என்று எழுதி வைத்திருக் கிறார்கள். மனிதன் உண்டாக்கினால் அதை இந்நேரம் ஒழித்திருப்பார்கள்.
‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்”
நானே நான்கு வருணங்களை உண்டாக்கினேன்.
அதுமட்டுமல்ல, ஒரு ஜாதிக்காரன் செய்யவேண்டிய தொழிலை, இன்னொரு ஜாதிக்காரன் எவ்வளவு திறமையாகச் செய்தாலும், அவனுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.
அதற்குப் பெயர் சுதர்மம்!
‘‘இதை நான் வகுத்திருப்பேன் என்று சொன்னாலும், நானே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது” என்பதுதான் கீதை.
அரசமைப்புச் சட்டத்தைக்கூட பலமுறை மாற்றலாம். ஆனால், வருணத்தை கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று அவர்கள் ஆணி அடித்து வைத் திருக்கிறார்கள்.
அதிகமான எண்ணிக்கையில் ஜாதி இருக்கின்றது. அந்த ஜாதிகளைக் காப்பாற்றி, எங்கெங்கே அவர்கள் பயன்பட முடியுமோ அங்கங்கே பயன்படும் அளவுக்கு வைத்திருக்கிறார்கள்.
அனைத்து ஜாதியினரும் படித்து அர்ச்சகராகலாம் என்று சொல்லி, தகுதி அடிப்படையில் ஆகமம் படிக்க வேண்டும் என்று உத்தரவு போடுகிறார்கள்.
‘‘தகுதி அடிப்படை வேண்டாம்’’ என்கிறார்கள்; ‘‘பிறப்பு அடிப்படை வேண்டும்’’ என்கிறார்கள்!
சரி, ஆகமப் பயிற்சிப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி, ஆகமப் பயிற்சி கொடுக்கிறோம் என்று திராவிட ஆட்சி பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கி ஆகமப் பயிற்சியை கொடுத்தவுடன், இவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘‘தகுதி அடிப்படை வேண்டாம்” என் கிறார்கள். ‘‘பிறப்பு அடிப்படை வேண்டும்” என்கிறார்கள்.
கடவுள் சிலைகளை மற்றவர்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில், இந்த இடத்திற்கு வரும்பொழுது, 50 சத விகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போனால், தகுதி திறமை போய்விடும்; ஆகவேதான், தகுதி திறமை வேண்டும் என்று சொல்கிறோம் என்கிறார்கள்.
50 சதவிகிதத்திற்குக் கீழே இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும், 50 சதவிகிதத்திற்குமேலே சென்றால், தகுதி திறமை போய்விடும். அவர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும்போது மட்டும் தகுதி திறமை பாதுகாப்பாக இருக்கும் என்று சொல் கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம்?
நம்மை ஏமாளிகள் என்று நினைக்கிறார்களா?
நம்மை முட்டாள்கள் என்று நினைக்கிறார்களா?
‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன்
புலிவேஷம் போடுகின்றான்!” என்று சொல்லக் கூடிய அளவிற்கு – இப்பொழுது மக்கள் விழித்துக் கொண்டார்கள் – விழித்துக் கொண்டவர்கள் பிழைத்துக் கொண்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு மிக முக்கியமான அளவிற்கு அந்த உணர்வுகள் வந்திருக்கின்றன.
அடுத்ததாக இன்னொன்றை உங்களுக்குச் சொல்லு கிறேன்.
நியாயமாக மொழி பெயர்த்துச் சொல்லக்கூடிய அளவிற்கு, adequate representation என்று அரசமைப் புச் சட்டத்தில், இட ஒதுக்கீடு குறித்து இருக்கிறது.
அந்த adequate என்ற வார்த்தைக்கு மிகத் தெளி வான பொருள் என்னவென்றால், Till it is Equalized என்று அர்த்தம். adequate என்ற வார்த்தை லத்தீன் மூலத்திலிருந்து வந்த ஆங்கிலச் சொல் ஆகும்.
adequate representation என்பதுதான் வேலை வாய்ப்புகள், சமூகநீதிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
adequate representation என்று சொல்லும்பொழுது அதற்கு என்ன பொருள்?
Till it is Equalized என்றால், மற்றவர்களோடு சமப்படுத்துவது என்று அர்த்தம்.
பள்ளமும் வேண்டாம், மேடும் வேண்டாம் – சமதளம் வேண்டும் என்றால்,
அதற்கு என்ன செய்யவேண்டும்?
மேடு இருக்கிறது, பள்ளமும் இருக்கிறது. நாம் பள் ளத்தில் இருக்கிறோம்; பள்ளமும் வேண்டாம், மேடும் வேண்டாம் – சமதளம் வேண்டும் என்றால், அதற்கு என்ன செய்யவேண்டும்?
மேட்டில் இருக்கின்ற மண்ணை எடுத்து, பள்ளத்தில் போடவேண்டும் அல்லவா!
ஆனால், அவர்கள் மிக சாமர்த்தியமாக என்ன சொல்கிறார்கள் என்றால், adequate என்பதற்கு விளக்கம் சொல்லும்பொழுது, பள்ளத்தில் மண் கொட்ட வேண்டியதுதான் – அதன்படி இரண்டு பேருக்கும் சம வாய்ப்புக் கொடுக்கவேண்டும். ஆனால், எப்படி கொடுக்கவேண்டும் என்றால், ஒரு கூடை மண்ணை பள்ளத்தில் கொட்டுங்கள்; ஒரு கூடை மண்ணை மேட்டில் கொட்டுங்கள் – இரண்டு பேருக்கும் சமமாக இருக்கும் என்று சொன்னால், என்ன அர்த்தம்?
இதுபோன்று நீங்கள் எவ்வளவு காலத்திற்கு மண் ணைக் கொட்டிக் கொண்டிருந்தாலும், மேடு மேடாகத் தான் இருக்கும்; பள்ளம் பள்ளமாகவே இருக்கும் அல்லவா!
உண்மையாக சொல்லவேண்டும் என்றால், adequate என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், Till it is Equalized என்பதுதான். ஏற்கெனவே 70, 80 சத விகிதத்தை அனுபவித்தவர்களை உள்ளே விடக்கூடாது – பள்ளத்தில் இருப்பவர்கள் மேலே வருகிற வரையில். எங்களை சமப்படுத்தப்படுகின்ற வரையில் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
பசியேப்பக்காரர்களாகிய எங்கள் ஆட்கள் சாப்பிட்டு முடிகின்றவரையில், புளியேப்பக்காரர்களை பந்தியில் விடாதே என்று சொல்வதுதான் adequately என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவேதான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது எதற்காக என்றால், நீங்கள்தான் கேட்டீர்களே புள்ளி விவரம் எங்கே என்று, அதற்காகத்தான்.
எல்லாருக்கும் எல்லாமும் என்றால், பிரச்சினையே கிடையாதே!
விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் யாராவது, அடித்துப் பிடித்து ஏறுகிறார்களா? அல்லது ஜன்னல் வழியாக உள்ளே இடம் பிடிக்கலாமா என்று கதவை வேகமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே போகிறார்களா? இல்லையே! அல்லது ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்டுக்குப் போகிறவர்கள் அடித்துப் பிடித்து ஏறகிறார்களா? இல்லையே!
‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’
என்பதுதானே சமூகநீதி!
அன்-ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் எங்கே இருக் கிறதோ, அங்கேதானே ஜன்னலுக்குள்ளே குதித்து உள்ளே போகிறார்கள். எல்லோருக்கும் இடம் கொடுக் கலாமா என்று சொல்கிறீர்களே, ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதானே சமூகநீதி!
யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே! அனைவருக்கும் அனைத்தும் தானே! அவரவர்களுக்கு என்ன உரிமையோ அதைத் தாராளமாகக் கொடுக்கலாமே! அதை நாங்கள் தடுக்கவில்லையே!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் – ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தை பெரியாரின் பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாள்” என்றும், அம்பேத்கருடைய பிறந்த நாளை ‘‘சமத்துவ நாள்” என்றும் அறிவித்தார்.
அப்படி அவர் சொல்லும்பொழுது அதற்கு விளக்கமும் சொன்னார் – சமூகநீதி நாள் என்பதற்கு பெரியாருடைய வார்த்தையை எடுத்தே சொன்னார் – ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று.
நாம் யாருக்கும் இட ஒதுக்கீட்டை மறுக்கவில்லை. உயர்ஜாதிக்காரர்களுக்குக்கூட 3 சதவிகித இட ஒதுக்கீடு என்றால், அதை அவர்கள் அனுபவிக்கட்டும். உத்தரப் பிரதேசத்தில் 16 சதவிகிதம் உயர்ஜாதியினர் இருக்கிறார் களா, அவர்கள் 16 சதவிகித இட ஒதுக்கீட்டை அனு பவிக்கட்டும். இன்னொரு இடத்தில் 9 சதவிகிதம் இருக் கிறார்களா, அவர்கள் 9 சதவிகித இட ஒதுக்கீட்டை அனுபவிக்கட்டும்.
ஆனால், மீதமுள்ள சதவிகிதம் மற்றவர்களுக்கு வரவேண்டும் அல்லவா – அதுதானே முக்கியம்!
நாங்களே நூற்றுக்கு நூறு சதவிகிதத்தை காலங் காலமாக அனுபவித்து வந்தோம்; அதை எப்படி உங்களுக்கு விட்டுக்கொடுப்போம் என்பதால்தானே இப்பொழுது நடைபெறுகின்ற போராட்டம்.
ஜாதியினுடைய சின்னங்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள்; ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மட்டும் கூடாது என்கிறார்கள்!
ஆகவேதான், இவர்கள் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருப்பார்களாம்; ஜாதியை விடமாட்டார்களாம்; ஜாதி நிகழ்வுக்காக விடுமுறை விடுவார்கள்; மிக முக்கியமாக ஜாதியினுடைய சின்னங்களைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்; ஆனால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மட்டும் கூடாது என்று சொன்னால், என்ன அர்த்தம்?
எனவேதான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழித்து, சமத்துவம் கொடுப்பதற்கு சமூகநீதிக்குத்தான்.
மேடும் வேண்டாம் – பள்ளமும் வேண்டாம். மேட்டில் இருக்கின்ற மண்ணை எடுத்து, பள்ளத்தில் போட்டு, சமமாக்குங்கள் என்று கேட்பது எதற்காக என்றால், சமூகநீதிக்காக – சமத்துவத்திற்காகத்தான்.
இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது
எல்லா வகையிலும் தேவையானதாகும்!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது அது எல்லா வகையிலும் தேவையானதாகும். அன்றைக்கு இந்தப் புள்ளி விவரங்களைக் கொடுத்தோம்; இன்றைக்கு அதே புள்ளி விவரங்களை உருவாக்கித் தருவோம். ஒவ் வொருவரும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டும்.
இதில் வேறு எந்தவிதமான மனக்கசப்போ, வேறு பாடோ இருக்கக்கூடாது. அத்துணை பேரும் சமூகநீதி யாளர்கள்தாம்.
நாட்டில் இரண்டே அணிதான்!
ஒன்று, சமூகநீதியை எதிர்க்கின்றவர்கள் அணி.
இன்னொன்று சமூகநீதியை ஆதரிக்கின்றவர்கள் அணி.
சமூகநீதிதான் மேடு – பள்ளம் இல்லாத ஒரு சமுதாயத்தை, சமத்துவ சமுதாயத்தை, சமவாய்ப்புள்ள சமுதாயத்தை நிறுவக் கூடியது என்று சொல்லவேண்டும்.
ரேஸ் குதிரைகளோடு ஜட்கா வண்டி குதிரையும் ஓடவிட்டால் அது சமமான போட்டியாக இருக்குமா?
கடைசியாக ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன், சம வாய்ப்பு என்று வரும்பொழுது, உச்சநீதிமன்றத்தில் சுப்பராயன் போன்ற நீதிபதிகள் சொன்ன வார்த்தையை ஞாபகப்படுத்துகிறேன் –
‘‘சம வாய்ப்பு என்பது சரி.
சம வாய்ப்பு என்பது சம பலம் உள்ளவர்களுக்குத்தான். குதிரை ரேஸ் நடக்கும்பொழுது, அந்தப் போட்டியில் ரேஸ் குதிரைகளாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, ரேஸ் குதிரைகளோடு ஜட்கா வண்டி குதிரையும் ஓடவிட்டால் அது சரியான போட்டியாக இருக்குமா?
இது சம வாய்ப்புதான் – இந்தப் போட்டியில் எந்தக் குதிரை வெற்றி பெறுகிறதோ, அவர்களுக்குக் கோப் பையைக் கொடுத்துவிடலாம் என்று சொன்னால், அது சரியாக இருக்குமா?”
எனவேதான், சம வாய்ப்பு என்ற பெயரால் எப்படி அவர்கள் ஏமாற்றுகிறார்களோ, அதேபோலத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று சொல்லும்பொழுது, ஜாதியைக் காப்பாற்றுவது என்று ஒரு ‘மாய்மாலத்தை’ உருவாக்குகிறார்கள். அது இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, அதற்காகப் போராடவேண்டும்.
நாங்கள் வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம்!
சமூகநீதிக்காகப் போராடுவோம்!
சமூகநீதிக்கான வழிமுறை என்று சொல்லும்பொழுது, அந்த வழிமுறையைத்தான் நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் இன்றைய காலகட்டத்தில் ஜாதி இருக்கின்ற வரையில் இருக்கின்றது.
நாளைக்கு நீங்கள் ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், ‘‘நாங்கள்தான் முதலில் இருக்கிறோம்” என்று சொல்லுங்கள் – நாங்கள் வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம்!
எனவேதான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை! தேவை!! என்று சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்!
வளர்க சமூகநீதி!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.