“வரலாற்றின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்று. ஒரு நூற்றாண்டு அல்லது ஒரு சகாப்தத்துக்குச் சொந்தமானது அல்ல. ஆனால், பல தலைமுறைகளின் சாட்சியாக, கடந்த எல்லா காலங்களின் துணையாக, வரலாறு தனது முதல் பக்கத்தை எழுதியது முதல் இன்று வரை இருந்து வருகிறது.”
ஜெருசலேம் – பாலத்தீன வரலாற்று ஆசிரியர் அரிப் அல்-அரிப் 1943இல் வெளியான நூலில், காஸா நகரத்தை இந்த வார்த்தைகளைக் கொண்டு விவரிக்கிறார். அந்த நூலில் அவர் அரபி, ஆங்கிலம், பிரெஞ்சு, துருக்கி இலக்கியங்களில் இந்தக் கடலோர நகரத்தைப் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கும் தகவல்களைத் தொகுத்துள்ளார்.
கிழக்கு நாடுகளைப் பற்றி அமெரிக்க அறிஞர் ரிச்சர்ட் கோதில், “வரலாற்று ஆய்வில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த நகரம் உற்சாகத்தைத் தரக்கூடியது,” என்று காஸா குறித்து விவரித்துள்ளார். ரப்பி மார்டின் மேயர் என்ற அமெரிக்கர் எழுதி 1907ஆம் ஆண்டில் வெளியான நூலின் அறிமுக உரையில் கோதில் இதைக் கூறியுள்ளார்.
காஸா நகரத்தின் மூலோபாய முக்கியத் துவம் குறித்துக் குறிப்பிட்ட கோதில், “தெற்கு அரேபியா மற்றும் கிழக்கிலிருந்து சிரியா, துருக்கி, அய்ரோப்பா ஆகியவற்றுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களின் சந்திப்புப் புள்ளியாக இது இருக்கிறது,” என்று குறிப் பிட்டுள்ளார். பாலத்தீனம் மற்றும் எகிப்துக்கு இடையிலான இணைப்பாக காஸா நகரம் உள்ளது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
காஸா என்ற பெயரில் மூன்று நகரங்கள்
காஸா – பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் நகரம். யாகுத் அல்-ஹமாவி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர். அவர் உலகைச் சுற்றிப் பல பயணங்களையும் மேற்கொண்டார். அவர் தனது கலைக்களஞ்சிய நூலான கிதாம் முஜம் அல்-புல்தானில் (நாடுகளின் அகராதி) அதே பகுதியில் காஸா என்ற பெயரில் இருந்த மூன்று நகரங்களைக் குறிப்பிடுகிறார்.
முதலாவது அல்-அக்தல் தனது கவிதைகளில் பேசும் ஜசீரா அல்-அரபு என்ற இடம். இரண்டாவது இப்ரிகியா என்ற நாடு. இது துனிசியாவின் பழைய பெயர். இந்த இடத்திலிருந்து துனிசியாவில் உள்ள கைரோவன் நகருக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும் என அல்-ஹமாவி கூறுகிறார்.
எகிப்து நோக்கியுள்ள லெவண்டின் கடைசிப் பகுதியாகும் காஸா, இது அஷ்கெலோனின் மேற்கில் பாலத்தீன நிலங்களில் ஒன்று என்று அல்-ஹமாவி குறிப்பிடுகிறார்.
1943ஆம் ஆண்டு வெளியான “காஸாவின் வரலாறு” என்ற நூலில் அச்சிடப்பட்ட வரைபடம். பண்டைய காலம் முதல், அரேபியர்கள் காஸா என்றே அழைத்து வந்துள்ளனர். இஸ்லாமிய காலத்தில் ‘ஹஷேமின் காஸா’ என்றழைக்கப்பட்டது.
காஸாவில் இறந்த முகமது நபிகளின் தாத்தா, ஹஷேம் பின் அப்து மனாபை குறிப்பிடும் வகையில் இது அமைந்தது. இஸ்லாமிய கருத்தியலின் நிறுவனராகக் கருதப்படும் இமாம் அல்-ஷபி பிறந்த இடமும் அதுதான். ஹீப்ரூ மொழியில், இது அஸா என்றழைக்கப்பட்டது.
அல் அரிப் தனது ‘காஸாவின் வரலாறு’ என்ற நூலில், கனான் மக்கள் இதை ‘ஹசைட்டி’ என்றும், பண்டைய எகிப்தியர்கள் ‘கசாடு’ அல்லது ‘ககடு’ என்றும் அழைத்ததாகக் குறிப்பிடுகிறார்.
கிரேக்க அகராதியில், ‘அய்யோனி’, ‘மினோவா’, ‘கான்ஸ்டண்டியா’ என்று வெவ்வேறு பெயர்களில் காஸா அழைக்கப் பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா என்ற சொல்லின் பொருள் என்ன?
நான்காம் நூற்றாண்டில் இன்றைய இஸ்ரேலின் சீசரியா பகுதியில் பிறந்த கிறித்துவ இறையியலாளர், காஸா என்பதன் பொருள் பெருமை, அதிகாரம் என்கிறார்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த சொல்லதிகார ஆசிரியர் சர் வில்லியம் ஸ்மித், 1863இல் வெளியான ‘பழைய ஏற்பாட்டின் அகராதி’ என்ற நூலில் காஸாவை குறிப்பிடுகிறார்.
இன்னொருபுறம், காஸா என்பது ஒரு பாரசீக வார்த்தை என்றும் அதன் பொருள் அரச கருவூலம் எனவும், 1910இல் வெளியான ‘புதிய ஏற்பாட்டின் அகராதி’ என்ற நூலின் ஆசிரியர் சொப்ரோனியஸ் குறிப்பிடுகிறார்.
ஆனால் பலர் இந்த வார்த்தையின் மூலம் கிரேக்க மொழி என்று நம்புகின்றனர். கிரேக்கத்தில் இதன் பொருள் செல்வம் அல்லது வளம்.
காஸாவை உருவாக்கியது யார்?
1875ஆம் ஆண்டில் பாலத்தீனத்தில் உள்ள காஸா நகரத்தை விக்டர் கோரின் என்ற கலைஞர் வரைந்த படம்.
யாகுத் அல்-ஹமாவி, காஸா என்பது இன்றைய லெபனானில் உள்ள டைர் என்ற நகரத்தைக் கட்டமைத்த ‘டையரி’யின் மனைவியுடைய பெயர் என்று குறிப்பிடுகிறார்.
ஆங்கில தொல்லியல் ஆய்வாளர் சர் பிலிண்டர்ஸ் பெட்ரி கிறிஸ்த்துவுக்கு மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது காஸா என்று கூறுகிறார். ஹில் அல்-அஜ்வால் என்ற மலை மீது உருவாக்கப்பட்டது என்றும், ஒரு தாக்குதலின்போது அங்கு குடியிருந்தவர்கள் வெளியேறியதாகவும் அவர் கூறுகிறார்.
எகிப்தின் ஹிக்ஸோஸ் ஆட்சிக் காலத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அப்போது வெளியேறியவர்கள், மூன்று மைல் தள்ளிக் குடியேறினர். அதுதான் இன்றைய காஸா.
ஹிக்ஸோஸ், 1683 கி.பி. முதல் 1530 கி.பி வரை எகிப்தை 108 ஆண்டுகள் ஹிக்ஸோஸ் ஆண்டனர். இந்தக் காலத்தில் காஸா ஹிக்ஸோஸ் ஆட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், சிலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை. பண்டைய காஸா எங்கு இருந்ததோ அதே இடத்தில்தான் இப்போதும் இருக்கிறது எனக் கூறுகின்றனர்.
இந்தக் கூற்றின்படி, ‘தல் அல்-அசவுல்’ தான் காஸாவின் வணிக துறைமுகமாக இருந்தது. பண்டைய காஸா மாவீரன் அலெக்சாண்டரால் அழிக்கப்பட்டது என்று நம்புகின்றனர். எனவே நாகரிக காஸா மற்றொரு இடத்தில் அமைந்தது என்று நம்பப்படுகிறது.
அல்-அரிப், காஸாவில் மெனைட்ஸ் பழங்குடிகள் குடியேறியதாகக் குறிப்பிடுகிறார். அரபு உலகின் மிகவும் பழமையான குடிமக்கள் இவர்களே என்றும் கருதப்படுகிறது. இவர்களே நாகரிகத்தின் கொடியை கி.பி.1000ஆவது ஆண்டில் உயர்த்தினர். காஸா நகரை உருவாக்கியதற்கான பெருமை இந்த மக்களையே சாரும் என அல் அரிப் கூறுகிறார்.
எகிப்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான முக்கியமான வர்த்தக இணைப்பாக காஸா இருந்தது. அரபு உலகில் காஸாவின் முக்கியத்துவம் பெருக இது ஒரு காரணம். செங்கடல் வழியாகச் செல்வதைவிட இந்த வழி அரேபியர்களுக்கு மிகவும் உகந்ததாக இருந்தது.
அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் உள்ள ஏமனில் வர்த்தகம் தொடங்கியது. அங்கு இந்தியா மற்றும் அரபு உலகுக்கு இடையிலான வர்த்தகம் செழித்தது.
ஏமனுக்கு பிறகு, வர்த்தக இணைப்புகள் மெக்கா, மெதினா, பெத்ராவுக்கு நகர்ந்து இரு கிளைகளாகப் பிரிந்தன.
இரண்டாவது கிளை டமாஸ்கஸ், பாமிரா, தைமிலிருந்து பாலைவனம் வழியாக மத்திய தரைக்கடலில் காஸாவை அடைந்தது. சில வரலாற்று ஆசிரியர்கள் மாயன் மற்றும் ஷெபா ராஜ்ஜியங்களே காஸாவை நிறுவிய முதல் அரபு அரசர்கள் என்ற முடிவுக்கு வருகின்றனர்.
ஏவியட்ஸ் மற்றும் அனகைட்ஸ் ஆகியோரே காஸாவில் குடியேறியுள்ள முதல் இரண்டு குழுவினர் என்று அல்-அரிப் கூறுகிறார். அவர்கள் பண்டைய பாலத்தீனர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப் பட்டுள்ளனர்.
தெற்கு ஜோர்டானில் உள்ள பெடோயின் பழங்குடியினரான டைனிட்டுகள் மற்றும் எடோமைட்டுகளும்கூட காஸாவில் குடியேறியதாக நம்பப்படுகிறது.
கனான் மக்கள்
கி.பி.312இல் நடைபெற்ற காஸா போரை, 1886ஆம் ஆண்டு வரையப்பட்ட இந்தப் படம் காட்சிப்படுத்தியுள்ளது.
ஆதியாகமத்தில் (முதல் ஹீப்ரு பைபிள் மற்றும் கிறித்துவ பழைய ஏற்பாடு) காஸா உலகின் பழைமையான நகரங்களில் ஒன்று என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக “காஸாவின் வரலாறு” என்ற நூல் கூறுகிறது.
ஆதியாகமத்தில், நோவாவின் மகன் ஹாமின் வழித் தோன்றல்களான கனான் நாகரிக மக்களே காஸா பகுதியில் குடியேறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சிலர், அமோரைட் பழங்குடிகளிடம் இருந்து கனான் மக்கள் காஸாவை வென்றெடுத்ததாக குறிப்பிடுகின்றனர்.
துனிசியாவில் 14ஆம் நூற்றாண்டில் பிறந்த இபின் கால்துன் என்ற வரலாற்று ஆசிரியர் கனான் மக்கள் அரேபியர்கள் ஆவர். அவர்கள் அமாலேகிய பழங்குடியின வழித்தோன்றல்கள் ஆவர்.
ஆனால் சிலர், கனான் மக்கள் பாரசீக மன்னாரிலிருந்து வந்தவர்கள் என நம்புகின்றனர். இந்தப் பகுதியில் அவர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர்.
பிரிட்டிஷ் தொல்லியலாளர் சர் பெட்ரி, காஸா நகரத்தில் உள்ள சுவர்களின் பகுதிகள் கண்டறியப்பட்ட போது, அவற்றில் பெரும்பாலானவை கனான் மக்களின் காலத்தில் கட்டப்பட்டவை என்பது தெரிந்தது. கனான் மக்கள் காலத்துக்குப் பிறகு இதுபோன்ற பெரிய கற்கள் அப்பகுதியில் காணப்படவில்லை.
1839இல் காஸா நகரம்
கனானிய நகரத்தின் எச்சங்களை எகிப்தின் ஹிக்ஸோஸ் சாம்ராஜ்யம் ஆக்கிரமித்தது. அவை காஸாவின் தெற்கு எல்லையில் டெல் அல்-அசுல் நகரத்தில் கண்டறியப்பட்டன. இவற்றில் சில கி.பி. 4 ஆயிரம் ஆண்டில் வெண்கல காலத்தைச் சேர்ந்தவை.
கனான் மக்கள் காஸா பகுதியில் ஆலிவ் பயிரிட்டனர் என அல்- அரிப் கூறுகிறார். பானைகள் செய்வது, சுரங்கப் பணிகளில் ஈடுபடுவது அவர்களின் வேலைகளாக இருந்தன.
கனான் நாகரிகத்தினரே எழுத்துகளைக் கண்டறிந்தவர்கள் என்று கூறப்படுகிறது. யூதர்கள் இவர்களின் பல கோட்பாடுகளையும் விதிகளையும் பின்பற்றுகின்றனர்.
எகிப்து, பாபிலோனியா, அசிரியன், கிரேக்கம், இரான், ரோம சாம்ராஜ்யங்களால் காஸா ஆளப்பட்டுள்ளது. பாலத்தீன வரலாற்று ஆசிரியர் அரிப் அல்-அரிப் காஸாவின் வரலாற்றைப் புகழ் பெற்றது எனக் குறிப்பிடுகிறார்.
“காஸா எல்லா விதமான பேரழிவுகளையும் ஆபத்துகளையும் எதிர் கொண்டுள்ளது. அதைத் தாக்கியவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்கள் இங்கிருந்து வேரறுக்கப்பட்டனர். இதற்கு விதிவிலக்கே இல்லை” என்று அல்- அரிப் கூறுகிறார்.