புதுடில்லி, டிச.16 ஒற்றுமை நடைப் பயண வரிசையில் அடுத்தக் கட்ட பயணத்தை உத்தரப்பிரதே சத்தில் காங்கிரஸ் கட்சி டிச.20 அன்று தொடங்குகிறது. தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி சிறீநகரில் முடிந்த நடைப் பயணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சி காணப்பட்டது. காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் பிம்பம் சீரமைக்கப்பட்டது. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமே என்பதை நிரூபித்தது. கருநாடகா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க உதவியது.
3 வட மாநிலங்களில் தோல்வி அடைந்தபோதும் வாக்கு விகிதத் தில் திடமாக முன்னேறி உள்ளது. குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராக காங்கிரஸ் கட்சியினருக்கு உத்வேகம் தந்தது. அந்த யாத்திரையின் நிறைவின் போதே, அதே பாணியிலான ஒற்றுமை நடைப் பயணம் நாடு நெடுக நடத்தப்படும் என காங் கிரஸ் தலைவர்கள் அறிவித்திருந் தனர். அதன்படி தற்போது உத்த ரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் நடைப் பயணம் டிச.20 அன்று தொடங்குமென அறிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச நடைப் பயணம் சஹாரன்பூரில் தொடங்கி சீதாபூரில் முடியத் திட்டமிடப்பட் டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராவ் தலைமையில் 16 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட பயணத்தை அடுத்து இதர மக்களவைத் தொகுதிகளை மய்யமாகக் கொண்டு அடுத்தக் கட்ட பயணங்கள் தொடங்க இருக்கின்றன. மக்களவைத் தேர் தலை பொறுத்தளவில் இந்தியாவி லேயே அதிக மக்களவை உறுப் பினர்களை டில்லிக்கு அனுப்பும் மாநிலமாக உ.பி. உள்ளது. 80 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் உ.பி.யின் வெற்றி வாய்ப்பே இந்திய அளவிலும் பிரதிபலிக்கும் என்பது வரலாறு. பாஜக வலுவாக காலூன் றியிருக்கும் இத்தகைய உபியில் காங்கிரஸ் கட்சி பரிதாபகரமான நிலை மையில் உள்ளது.
எனவே அங்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், மக் களவைத் தேர்தலுக்கு ஆயத்த மாகவும் ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத் துள்ளது.