புதுடில்லி, டிச. 15- நாடாளுமன்றத்தில் புகைக்குப்பிகள் மூலம் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த 6 இளைஞர்களும் சமூக வலைத்தளத்தில் உள்ள “பகத்சிங் பேன் கிளப்” என்ற இணைய தளம் மூலம் ஒருங்கிணைந்தது தெரியவந்துள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் 6 பேரும் மைசூரில் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் 6 பேரும் ஒரே மனநிலையில் இருப்பது தெரியவந்தது. அரசு மீது உள்ள கோபம், வெறுப்பு காரணமாக அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று 6 பேரும் திட்டமிட்டனர். இதற்காக அடிக்கடி டில்லியில் கூடி பேசினார்கள்.
அப்போதுதான் நாடாளுமன்ற தாக்குதல் நாளான டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து மீண்டும் ஒரு புதுமையான தாக்குதலை அரங்கேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். கடந்த ஆண்டே அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. இதற்காக 6 பேரும் அடிக்கடி நாடாளுமன்றத்துக்கு வந்து சென்றனர். அவர்களில் ஒருவர் புதிய நாடாளுமன்றம் கட்டிக் கொண்டு இருக்கும் போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்திருக்கிறார்.
எந்த எந்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக் கிறது என்பதையும் அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் 4 அடுக்கு பாதுகாப்பில் உடல் முழுவதையும் சோதனை செய்தாலும் காலில் அணிந்து செல்லும் ஷூவை கழற்றி ஆய்வு செய்யவில்லை என்பதை அறிந்தனர்.
எனவே தாக்குதல் நடத்தும் பொருளை ஷூவுக்குள் மறைத்து எடுத்து செல்ல தீர்மானித்தனர். அதன்படிதான் ரூ.1200-க்கு புகைக்குப்பிகள் வாங்கி ஷூவுக்குள் எடுத்து வந்துள்ளனர். தாக்குதலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் அவர்கள் நாடாளுமன்ற பகுதியில் ஒத்திகை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடந்திருப்பது தெரியவந்து உள்ளது.
இந்த தாக்குதலுக்காக கடந்த வாரம் 6 பேரும் ஒருங்கிணைந்து உள்ளனர். டில்லி புறநகர் பகுதியான குருகிராமில் உள்ள வீட்டில் தங்கி இருந்து அவர்கள் சதி திட்டம் தீட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.